ஏற்கெனவே ஒரு குறிப்பிட்ட சந்தையில் வாடிக்கையாளர்கள் மனதில் இடம் பிடித்துள்ள பிராண்டின் பெயரைப் பயன்படுத்தி புதிய சந்தைகளில் புதிய பொருளினை அறிமுகம் செய்வதே பிராண்ட் நீட்டிப்பு (Brand Extension) என்றழைக்கப்படுகிறது.
இங்கு புதிய சந்தை என்று நான் குறிப்பிடுவது பல வகைப்படும். அதைப் பொருத்தே, பிராண்ட் நீட்டிப்பும் பல வகைப்படும்.
1. ஏற்கெனவே வெற்றி பெற்ற சந்தையின் இன்னும் வரையறுக்கப்பட்ட ஒரு உள்சந்தைக்காக (more defined/refined inner segment of the original market) புதிய பொருளை வழங்குவது. உதாரணமாக, கோக கோலா நிறுவனம், டயட் கோக் (Diet Coke) என்ற பானத்தை அறிமுகம் செய்தது. கோக கோலா அருந்துபவர்கள், அல்லது பொதுவாக கோலா வகைப் பானங்களை அருந்துபவர்களை உள்ளடக்கிய ஒரு சந்தையில், தங்கள் உடல் பருமன் மற்றும் உடல் நலம் குறித்த அக்கறை மிகுந்த ஒரு உள்சந்தைக்காக அறிமுகம் செய்யப்பட்ட புதிய பொருள் இது. இதற்கு தாய் பிராண்டின் (mother brand) பெயரே பயன்படுத்தப்பட்டது. இது ஒரு வகை நீட்டிப்பு. (சில சமயம் இந்த வகை நீட்டிப்பில் தாய் பிராண்டின் பெயர் பயன்படுத்தப்பட மாட்டாது. உதாரணம், இந்தியாவில் டைட்டன் கைக்கடிகார நிறுவனம் (Titan watches), குறைந்த விலைக் கைக்கடிகாரங்களை வழங்கிய போது சொனாட்டா (Sonata) என்ற பெயரில் வழங்கியது. இது குறித்துப் பின்னால் காண்போம்.)
2. ஏற்கெனவே வெற்றி பெற்றுள்ள சந்தைக்கு ஓரளவுக்குத் தொடர்புடைய புதிய சந்தையில் (related market) புதிய பொருளை வழங்குவது. உதாரணமாக, இந்தியாவில் ஆக்ஸ் டியோடரண்ட் (Axe Deodorant) என்பது உடல் துர்நாற்றம் தவிர்க்கப் பயன்படும் ஒரு பொருள். இதற்குத் தொடர்புடைய டால்கம் பவுடர் (talcum powder) சந்தையில் அது நுழைந்த போது புதிய பொருளுக்கு ஆக்ஸ் டால்கம் பவுடர் (Axe Talcum Powder) என்று தாய் பிராண்டின் பெயரே பயன்படுத்தப்பட்டது. இது ஒரு வகை நீட்டிப்பு.
3. ஏற்கெனவே வெற்றி பெற்ற சந்தைக்கு சற்றும் தொடர்பு இல்லாத சந்தையில் (unrelated market) புதிய பொருளை வழங்குவது. இது இருவகைப்படும். சில சமயம் இந்த புதிய பொருளுக்கு தாய் பிராண்டின் பெயரே பயன்படுத்தப்படும். உதாரணத்துக்கு, யமஹா (Yamaha) என்னும் இருசக்கர பைக் உற்பத்தி நிறுவனம், புதிதாக பியானோ (piano), கீ போர்ட் (key board) போன்ற இசைக்கருவிகள் உற்பத்தி செய்யும் தொழிலில் களமிறங்கிய போது தாய் பிராண்டின் பெயராலேயே விற்பனை செய்தது. இது பிராண்ட் இழுத்தல் (Brand Stretch) அல்லது Line Extension என்றும் அறியப்படும். சில சமயம், இவ்வாறு தொடர்பில்லாத புதிய சந்தையில் வழங்கப்படும் புதிய பொருளுக்கு தாய் பிராண்டின் பெயர் இல்லாமல் புதிய பெயர் பயன்படுத்தப்படும். அது நமது பிராண்ட் குறித்த விவாதத்தில் அவசியமற்றது என்பதால் விடுவோம்.
4. புவியியல் ரீதியாக இதுவரை இயங்கி வந்த சந்தைகளுக்கு அப்பால் புதிய மாகாணங்கள், புதிய நாடுகள் என்று நமது தொழில் விரிவடையும் போது, அந்தப் புதிய சந்தைகளிலும் தாய் பிராண்டின் பெயரே பயன்படுத்தப்படும். உதாரணமாக யூனிலீவர் (Unilever) நிறுவனம், இந்தியாவில் புதிய சோப் ஒன்றை அறிமுகம் செய்த போது லைஃப் பாய் (Lifebuoy) என்று ஐரோப்பாவில் வழங்கிய அதே பெயரிலேயே இந்தியாவிலும் வழங்கினர். இது புவியியல் நீட்டிப்பு (geographic extension) என்றும் அறியப்படும்.
இவ்வகையிலான பிராண்ட் நீட்டிப்புகளால் என்ன பயன் என்று நீங்கள் யோசிக்கக்கூடும். பயன்களாவன:
- வாடிக்கையாளர்கள், தம் மனதில் இடம்பிடித்துள்ள பிராண்டின் தரத்தைப் புதிய பொருளோடும் சேர்த்துப் பார்ப்பார்கள். அவர்களது நம்பிக்கையை எளிதில் கவர இயலும்.
- பொருளின் விநியோகஸ்தர்கள், புதிய பொருளின் விநியோகத்தில் அதிக இடர்கள் (risks)இருக்காது என்று நம்பக் கூடும். புதிய பொருளை வரவேற்பதில் ஆர்வம் காட்டுவார்கள்.
- புதிய பொருளின் விளம்பரச் செலவு குறையும்.
- வாடிக்கையாளர்கள் மத்தியில் பரவலான அறிமுகமும், பயன்படுத்திப் பார்க்க ஆர்வமும் (willingness to trial or sample) எளிதாக ஏற்படக் கூடும்.
இவற்றால் பிராண்ட் நீட்டிப்பு என்பது இன்று உலகளாவிய அளவில் மிகுந்த கவனத்தைப் பெற்றுள்ளது. உலகில் இன்றைய தேதியில் புதிதாக அறிமுகப் படுத்தப்படும் பொருட்களில் பாதிக்கும் மேல் பிராண்ட் நீட்டிப்புகளே.
இவை மட்டுமில்லாமல், கூடுதலான பொருட்களை ஒரே பிராண்டின் கீழ் வைத்திருப்பது வேறு சில வழிகளிலும் நன்மை பயக்கக் கூடும்:
- அதிக வாடிக்கையாளர்கள்
- ஒரே வாடிக்கையாளரிடம் அதிக பொருட்களின் விற்பனை
- அதிக மார்க்கெட்டிங் வினைத் திறன்
- பொருளின் அறிமுகக் காலத்திலேயே அதிக லாபம் (பொதுவாக புதிய பொருளின் அறிமுகக் கட்டத்தில் லாபம் ஈட்டுவது என்பது கடினமானது)
பிராண்ட் நீட்டிப்பினால் எல்லாமே சுகம், சிக்கல்களே கிடையாது என்றும் சொல்லிவிட முடியாது. சில சவால்களும் உண்டு. அவற்றில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்:
- தாய் பிராண்டுக்கும் புதிய பொருளுக்கும் இடையில் ஏற்படக் கூடிய விற்பனைப் போட்டி. கோக கோலா குடித்துக் கொண்டிருந்த பெரும்பான்மையானோர் டயட் கோக்கை நோக்கிப் போக ஆரம்பித்து விட்டால் கோக கோலாவின் விற்பனை கணிசமாக அடி வாங்கும் என்பதை நினைவில் வைத்து, புதிய பொருளை மிக அதிகமாக வேறுபடுத்திக் காட்ட முயற்சி செய்ய வேண்டும். (higher differentiation - இந்த differentiation குறித்து விரைவில் காண்போம்)
- பிராண்ட் நீட்டிப்பு மூலம் தாய் பிராண்டின் அந்தஸ்து (image) குறையாமல் பார்த்துக் கொள்வது. இந்த காரணத்தினாலேயே டைட்டன் நிறுவனம், தனது புதிய பொருளை சொனாட்டா என்ற பெயரில் வழங்கியது. ஏனென்றால் டைட்டனுக்கு இருக்கும் அந்தஸ்து ஓரளவு விலையுயர்ந்த கைக்கடிகாரம் என்பதே. விலை குறைந்த கைக்கடிகாரங்களையும் அதே பெயரில் விற்பனை செய்தால் அதன் அந்தஸ்து நீர்த்துப் போகக் கூடும் என்பது கவனத்தில் கொள்ளத் தக்கது.
- ஒரு வேளை பிராண்ட் நீட்டிப்பு வேலைக்காகாமல் புதிய பொருள் தோல்வியடைந்தால் அதன் பாதிப்புகள் தாய் பிராண்டின் மீது இருக்கும்.
விர்ஜின் (
virgin) என்ற பிராண்ட் இன்றைய தேதியில் மிகவும் அதிகமான அளவு நீட்டிப்பு செய்யப்பட்ட ஒன்று என்று கூறலாம். விமானப் போக்குவரத்து, இசைத்தட்டுக்கள், மது பானங்கள், விடுதிகள், கேளிக்கை அரங்குகள், புத்தகங்கள், மேனி அலங்காரப் பொருட்கள், திருமண சேவைகள், இணையத் தொடர்பு, உடல் நலக் கூடங்கள் என்று இவர்கள் கால் வைக்காத தொழில்களே இல்லை எனலாம். இவை அனைத்தையும் விர்ஜின் என்ற ஒரே பிராண்டின் கீழ் நடத்தி வருவது நமது கவனத்தைக் கவரும் அம்சமாகும். இதன் அதிபர் ரிச்சர்ட் பிரான்சன் (Richard Branson) ஆவார். அவரது மரபை மீறின பழக்க வழக்கங்களுக்காக மிகவும் புகழ் பெற்றவர். இந்நிறுவனம், புதிய தொழில் ஒன்றைத் தேர்வு செய்யும் போது அது தங்கள் நிறுவனத்தின் அடிப்படை மதிப்புகளுக்கு (Basic Values) ஒத்து வருமா என்று சோதிக்கிறார்கள். ஐந்து விதிகள் வைத்திருக்கிறார்கள். இந்த ஐந்து விதிகளையும் திருப்தி செய்கின்ற தொழிலில் மட்டுமே அவர்கள் இறங்குவார்கள். அந்த ஐந்து விதிகள்:
1. உயர்ந்த தரம் மிக்க பொருளாக விளங்குமா? (Best quality)
2. புதுமையான பொருளாக இருக்குமா? (Innovative)
3. பணத்திற்கு முழு மதிப்பு கிடைக்குமா? (Value for money)
4. தற்போது சந்தையில் கிடைக்கும் பொருள்களிலிருந்து ஏதாவது ஒரு வகையில் மாறுபட்டு இருக்குமா? (Different from existing alternatives)
5. இதன் மூலம் நக்கல் மிக்கதொரு மகிழ்ச்சியை ஏற்படுத்த முடியுமா? (A sense of cheeky fun)
இந்த ஐந்து விதிகளுக்கும் உகந்த தொழில் என்றால் விர்ஜின் களம் புகுந்து பட்டையைக் கிளப்பி விடும்!