ஒரு வலைப்பதிவாளர் வாடகைக்குக் கிடைக்கிறார்

ஈ-பே (E-bay) என்ற ஏல தளத்தில் என்னவெல்லாமோ கிடைக்கும். இப்போது ஒரு வலைப்பதிவாளர், தனது வலைப்பதிவு தொடர்பான சேவைகளை ஏலத்துக்கு விட்டிருக்கிறார். வலைப்பதிவுகளைப் பற்றிய கவனத்தைப் பரவலாக்கவும், அவற்றின் மரியாதையைக் கூட்டவும் இந்த நடவடிக்கையை எடுத்திருப்பதாக அவர் தெரிவிக்கிறார்.

அவரது பெயர் ஜெரெமி ரைட். (Jeremy Wright) இவர் என்சைட் (Ensight) என்ற வலைப்பதிவைத் துவங்கி தொடர்ந்து நடத்தி வந்தவர். இந்த வலைப்பதிவை முதலீட்டாளர்களுக்கு விற்று விட்டு அங்கேயே சம்பளத்துக்கு எழுதும் வலைப்பதிவாளராக அவர் ஆன போது பெரிய கவனத்தை ஈர்த்தார். (இப்படி நடந்த முதல் வலைப்பதிவு இவருடையதே ஆகும்.) இப்போது அடுத்த புதுமையைச் செய்து கொண்டிருக்கிறார்.

ஏலத்தில் வெற்றி பெறுபவருக்கு இவர் அளிக்கவிருக்கும் சேவைகளாவன:
இந்த வலைப்பதிவாளரின் சேவைகளை நீங்கள் மூன்று மாதங்களுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஒரு வாரத்துக்கு 5 முதல் 10 பதிவுகள் கிடைக்கும். அதோடு கூட, இவர் உங்களுக்கும் உங்கள் நிறுவனத்துக்கும் வலைப்பதிவுகளின் மூலம் எவ்வாறு பயனைக் கூட்டலாம் என்று ஆலோசனை வழங்குவார். எனவே உங்களுக்கு ஒரு வலைப்பதிவு ஆலோசகராகப் பணியாற்றுவார்.
ஆலோசகராக சேவைகளை வழங்குவது என்பது வழக்கமான ஒன்று தான். ஆனால் ஏல தளத்திலே அதை வழங்கியது தான் இதிலே உள்ள சூட்சுமம். வலைப்பதிவு என்பதற்கு சந்தை என்ன விலை நிர்ணயிக்கிறது என்று தெரிந்து கொள்ள முடியும். மிகச் சிறப்பான ஒரு முயற்சி. டிஸம்பர் 3-ந்தேதி ஏலம் முடிவடைகிறது. தற்போதைய (நவம்பர் 29 மதியம்) நிலவரப்படி ஏலத் தொகை 650 டாலர்கள். இவர் அறிவித்த ஆரம்ப ஏலத் தொகை நூறு டாலர்கள். ஒரு ஆயிரம் டாலர்களில் முடியும் என்பது இவரது நம்பிக்கை.


இவரைத் தொடர்ந்து இப்போது டேரன் பேர்ஃபூட் (Darren Barefoot) என்பவரும் தனது சேவைகளை ஏலத்துக்கு விட்டிருக்கிறார். இவரது வலைப்பதிவு இது. இவர் கொஞ்சம் நம்பிக்கையுடன் ஆரம்பத் தொகையை 500 டாலர்களாக அறிவித்திருக்கிறார். மேலும் ஜெரெமி போல் பொதுவாக வலைப்பதிவு சேவைகள் என்று சொல்லாமல் இணையவழி மார்க்கெட்டிங் மற்றும் தொழில்நுட்ப நிபுணர் (Online marketing and Technology Expert) என்று தன்னை விளம்பரப்படுத்திக் கொண்டுள்ளார்.

நடக்கட்டும் சாமி, நடக்கட்டும்.

ஹாலிவுட் திரைப்படங்களும் டி.வி.டி. விற்பனையும்

எத்தனை நாள் தான் தமிழ்த் திரைப்படங்களைப் பத்தியும் திருட்டு வி.சி.டி பத்தியுமே பேசறது? அதனால தான் இன்னிக்கு ஹாலிவுட் திரைப்படங்களைப் பத்தியும், அவைகளின் வருவாயில் டிவிடி-கள் வகிக்கும் பங்கு பத்தியும் சொல்லப் போறேன்.

நானும் உங்களை மாதிரி தான் நெனைச்சிக்கிட்டு இருந்தேன், ஹாலிவுட் படங்களோட தியேட்டர் வசூல் தான் திரைப்பட தயாரிப்பு நிறுவனங்களோட வருவாய்க்கு முக்கியமான விஷயம்-னு. ஆனா, அப்படிக் கெடையாதாமே. அண்மையில நியூயார்க் டைம்ஸ் சண்டே மேகஸின்-ல (NewYork Times Sunday Magazine) வந்த ஒரு கட்டுரையின்படி, முன்னே மாதிரி டிவிடி விற்பனை, வருவாயைப் பெருக்கும் ஒரு துணை நடவடிக்கையா இருந்த காலம் போய், இப்போ அது தான் வருவாய்க்கான முக்கிய நடவடிக்கையா இருக்கு. ஒரு படத்தோட மொத்த வருவாயில 63% டிவிடி விற்பனை மூலமாத்தான் வருதாம். (இது வந்து படத் தயாரிப்பு நிறுவனம், ரீடெய்லர் கடைகளுக்கு ஹோல்சேலா விற்கும் போது கிடைக்கிற வருமானம்.) தியேட்டர்ல படம் ஓடி கிடைக்கிற வருவாய் 21% தானாம். அந்தக் கட்டுரையில் இன்னும் நெறைய சுவாரஸ்யமான விஷயம் இருக்கு.

* டிவிடி வாங்குற வாடிக்கையாளர்களில 30% பேர் படத்தை தியேட்டரில பார்த்தவங்க, இன்னொரு 30% பேர் படத்தை கேபிள் டெலிவிஷன்ல பார்த்தவங்க, பாக்கி 40% பேர் படத்தைப் பார்க்காதவங்க!

* டிவிடியின் விற்பனைக்கு முக்கியமான காரணமா சொல்லப்படுற டிவிடி எக்ஸ்ட்ராஸ் - அதாவது திரைக்குப் பின்னால் நடந்த சுவாரஸ்யமான ஃபுட்டேஜ், இயக்குனர் மற்றும் நடிகர்களின் பேட்டிகள், நீக்கப்பட்ட காட்சிகள், மாற்று முடிவுக் காட்சிகள் - போன்றவற்றை 20% பேர் தான் பார்க்குறாங்களாம்.

* டிவிடி உற்பத்தி, மார்க்கெட்டிங், ராயல்டி பணம் எல்லாம் சேர்த்து தயாரிப்பு நிறுவனத்துக்கு ஆகும் செலவு ஒரு டிவிடி-க்கு ஏறக்குறைய 6 டாலர்கள். ரீடெய்லர்களுக்கு அவர்கள் விற்கும் விலை, ஒரு டிவிடி-க்கு ஏறக்குறைய 14.95 டாலர்கள். எனவே ஒரு டிவிடியின் விற்பனை மூலம் தயாரிப்பு நிறுவனத்துக்குக் கிடைக்கும் வருவாய் கிட்டத்தட்ட 9 டாலர்கள்.

* டிவிடி-க்கள் இப்படி சக்கை போடு போடுவதால் தான் ஒரு ஹாலிவுட் படத் தயாரிப்பு நிறுவன அதிகாரி, "டிவிடி-க்கள் எங்களுக்கு ஒரு வற்றாத ஏ.டி.எம் (ATM) மெஷின் போல" என்று வர்ணிக்கிறார்.

* டிவிடிக்களின் விற்பனையில் பெரும் பங்கு வகிப்பது மெகா ரீடெய்லர்கள் தான். மொத்த விற்பனையில் கிட்டத்தட்ட 21% வால்-மார்ட் (Wal-Mart) கடைகளில் மட்டும் நடக்கிறது. பெஸ்ட் பய் (Best Buy), டார்கெட் (Target), காஸ்ட்கோ (CostCo), ஸாம்'ஸ் க்ளப் (Sam's Club), சர்க்யூட் சிட்டி (Circuit City), ப்ளாக்பஸ்டர் (Blockbuster) ஆகிய அனைத்தும் சேர்ந்து இன்னொரு 42% விற்பனையைப் பார்த்துக் கொள்கின்றன.

இந்தத் தகவல்களின் பின்னணியில் தான் நீங்கள் அண்மைக்காலமாக படத் தயாரிப்பு நிறுவனங்கள், டிவிடி விற்பனை துவங்கும் நிகழ்ச்சியை பெரிய அளவில் நடத்துவதைப் புரிந்து கொள்ள முடியும். தியேட்டரில் படம் வெளியாவதற்கு இணையாக டிவிடி வெளியாகும் நிகழ்வும் பெரிதுபடுத்தப்படுகிறது. குறிப்பாக அண்மையில் "The Passion of the Christ" திரைப்படத்தின் டிவிடி விற்பனைக்குச் செய்யப்பட்ட மார்க்கெட்டிங் முயற்சிகள் நல்ல வெற்றியை அடைந்தன. கிறித்துவ தேவாலயங்களில் பிரார்த்தனை செய்ய வருபவர்களைக் குறி வைத்து செய்யப்பட்ட விற்பனை முயற்சிகள் நல்ல பலனை அளித்தன.

இப்போது உலகமே பரபரப்பாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் - நவம்பர் 30 வெளியீடு - ஸோனியின் ஸ்பைடர்மேன்-2 (SpiderMan-2) படத்தின் டிவிடியில், படத்தைத் தவிர பத்து மணி நேரம் ஓடுகின்ற விஷயங்கள் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ("Making the Amazing": 12-part documentary, "Hero in Crisis": a deeper look into Peter Parker and his personal battles, "Ock-umentary: Eight Arms to Hold You", "Interwoven: The Women of Spider-Man", "Enter the Web": groundbreaking multi-angle look behind the scenes போன்றவை.)

ஃபாக்ஸ் (Fox) படத் தயாரிப்பு நிறுவனம் வழங்கும், ரிட்லி ஸ்காட் (Ridley Scott) இயக்கத்தில் உருவாகி வரும் இன்னும் பேர் கூட சூட்டப்படாத படத்தின் டிவிடி உருவாக்கம் பற்றி கடந்த ஆறுமாதமாக விவாதங்களும் வேலைகளும் நடந்து வருகின்றன என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

சந்தைப்படுத்தல் திட்டம் - Marketing Plan - 1

ஒவ்வொரு நிறுவனமும் மேற்கொள்ளும் வணிக முயற்சிகளுக்கு அடிப்படையான ஆவணங்களாக அமைவது, அதன் சந்தைப்படுத்தல் திட்டங்களே (Marketing Plans) ஆகும். ஒவ்வொரு பொருள்/சேவை தளத்திலேயோ (Product/Service level) அல்லது விற்பனை ஊடக தளத்திலோ (Sales Channel level), அல்லது பிராண்ட் தளத்திலோ (Brand level) சந்தைப்படுத்தல் திட்டங்கள் வைத்துக் கொள்ளலாம். அது நிறுவனத்தின் முடிவைச் சார்ந்தது. ஒரு நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் துறையின் மிக முக்கியமான வெளிப்பாடாகக் கருதப்படுவது இந்தத் திட்டமும், தொடர்ந்து அதை புதுப்பித்து அதன்படி செயலாற்றுவதுமே ஆகும்.

திட்டம் என்று சொல்லும் போதே அதில் திட்டமிடுதல் வந்துவிடுகிறது. தற்போதைய நிறுவனங்களின் சந்தைப்படுத்தல் திட்டங்கள், முன்னரை விட அதிக அளவில் பயனாளர்களைச் சார்ந்தும் (customer oriented), போட்டியாளர்களை மனதில் கொண்டும் (competition oriented) தயாரிக்கப்படுகின்றன. தனது துறை தவிர நிறுவனத்தின் பிற துறைகளிலிருந்து பல வித தகவல்களைக் கேட்டுப் பெற்று இந்தத் திட்டம் வரையப்படுகிறது.

சில நிறுவனங்களில் இந்தத் திட்டம், தொழில் திட்டம் (Business Plan) என்றும் சொல்லப்படுவதுண்டு. இந்தத் திட்டத்தின் உள்ளடக்கம் என்ன என்று இந்தப் பதிவில் காண்போம்.

1. செயல்பாட்டுச் சுருக்கம் மற்றும் உள்ளடக்கம் (Executive Summary and Contents): சந்தைப்படுத்தல் திட்டத்தின் முதல் பகுதியாக ஒரு செயல்பாட்டுச் சுருக்கம் (Executive Summary) அமைய வேண்டும். இதில் முக்கிய நோக்கங்கள் (objectives) மற்றும் அதற்கான பரிந்துரைகள் (recommendations) சுருக்கமாக இடம்பெற வேண்டும். நிறுவனத்தின் முக்கிய அதிகாரிகள் எளிதில் புரிந்து கொண்டு நடவடிக்கை எடுக்க இது உதவிகரமாக இருக்கும். தொடர்ந்து உள்ளடக்கம் என்ன என்பதைக் கூறும் ஒரு பட்டியல் இருக்க வேண்டும்.

2. தற்போதைய சந்தை நிலவரம் (Current market situation): இந்தப் பகுதியில், நிறுவனத்தின் தற்போதைய விற்பனை நிலவரம், வருவாய், செலவு, இலாபம், பிற போட்டியாளர்கள் பற்றிய குறிப்புகள், பெரும்பொருளாதாரச் சூழலின் (macroeconomic environment) தன்மைகள் போன்றவை இடம்பெற வேண்டும். இந்தத் தகவல்களைப் பயன்படுத்தி ஒரு SWOT Analysis செய்ய வேண்டும். SWOT Analysis என்பது, நமது நிறுவனத்துக்குரிய பலங்கள் (Strengths), பலவீனங்கள் (Weaknesses), வாய்ப்புகள் (Opportunities) மற்றும் அச்சமூட்டும் விஷயங்கள் (Threats) பற்றிய ஒரு அலசல். இது பற்றி இன்னொரு நாள் விரிவாகப் பார்க்கலாம்.

3. வாய்ப்புகள் மற்றும் பிரச்சினைகள் அலசல் (Opportunities and Issues analysis): இங்கே முந்திய பகுதியில் செய்யப்பட்ட SWOT Analysis-ன் துணை கொண்டு கண்டறியப்பட்ட நிறுவனத்திற்கு வாய்ப்பான வணிக முயற்சிகள் இன்னும் விரிவாக அலசப்படும். அது தவிர, நிறுவனத்திற்கு கவலை அளிக்கக் கூடிய பிரச்சினை அம்சங்களும் ஆராயப்பட வேண்டும்.

4. நோக்கங்கள் (Objectives): இந்தப் பகுதியில் சந்தைப்படுத்தல் திட்டத்தின் நோக்கங்கள் முழுமையாகப் பதிவு செய்யப்பட வேண்டும். இவை தெளிவாக வரையறை செய்யப்பட வேண்டும். குறிப்பாக விற்பனை அளவுகோல்கள், இலாபம், சந்தைப்பங்கு (market share) போன்ற அனைத்தும் தெளிவாகக் குறிப்பிடப்பட வேண்டும்.

5. சந்தைப்படுத்தல் தந்திரம் (Marketing Strategy): இங்கே குறிச்சந்தையைப் (Target Segment) பற்றி விவரித்து, அதன் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு நமது நிறுவனம் வழங்கும் பொருள்/சேவை/பயன் பற்றி விரிவாக விளக்கப்பட வேண்டும். இதையொட்டி நாம் வழங்கும் பொருள்/சேவையின் நிலைப்படுத்தலை (Positioning) விவரிக்க வேண்டும். (நிலைப்படுத்தல் குறித்து ஏற்கெனவே விரிவாகக் கண்டிருக்கிறோம் - பாகம்-1, பாகம்-2) நிலைப்படுத்தல் மூலமாக திட்டத்தின் நோக்கங்கள் நிறைவேற நாம் கடைப்பிடிக்கப் போகும் வழிமுறைகள் குறித்து ஒரு விரிவான அலசல் இருக்க வேண்டும். இங்கே தான், திட்டத்தின் வெற்றிக்கு நிறுவனத்தின் பிற துறைகள் (கொள்முதல், உற்பத்தி, விற்பனை, நிதி, மனித வளம், போக்குவரத்து போன்றவை) ஆற்ற வேண்டிய பணிகள் குறித்து இடம் பெற வேண்டும். அனைத்துத் துறைகளின் ஒத்துழைப்புடன் மூலமே திட்டம் சிறப்பாக நிறைவேற்றப்படும்.

6. செயல் திட்டங்கள் (Action plans): இந்தப் பகுதியிலே முந்தைய பகுதியின் அடிப்படையில் மேற்கொள்ளப் போகும் பல்வேறு செயல்திட்டங்கள் பற்றி விளக்க வேண்டும். ஒவ்வொரு செயல்திட்டமும் கீழ்க்காணும் கேள்விகளுக்கு விடையளிக்க வேண்டும் - என்ன செய்யப்படும்? எப்போது, எங்கெல்லாம் செய்யப்படும்? யார் யார் அதைச் செய்வதில் பங்குடையவர்கள்? செய்து முடிக்க எவ்வளவு செலவு ஏற்படும்? இதைச் செய்வதன் மூலம் ஏற்படக்கூடிய முன்னேற்றம் எவ்வாறு அளக்கப்படும்?

7. நிதி முந்திட்டம் (Financial Projection): முந்தைய பகுதியில் விளக்கப்பட்டுள்ள செயல் திட்டங்களின் அடிப்படையில் ஒரு வரவு செலவுத் திட்டம் (Budget) வரையறை செய்யப்படும். வரவுப்பக்கத்தில் விற்பனை எதிர்பார்ப்புகள் பொருள் எண்ணிக்கையில் குறிக்கப்பட்டு, சராசரி விற்பனை விலையின் அடிப்படையில் மொத்த வருவாய் கணக்கிடப்படும். செலவுப் பக்கத்தில் பொருள்/சேவையின் உற்பத்தி, விநியோகம், சந்தைப்படுத்தல் ஆகியவற்றுக்கு எதிர்பார்க்கப்படும் மொத்த செலவுகள் பதியப்படும். இவற்றுக்கிடையிலான வித்தியாசமே இலாப எதிர்பார்ப்பு. இந்தத் திட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டால், திட்ட நடவடிக்கைக் காலம் (Plan duration) முழுவதற்கும் செயல்திட்டங்களுக்கு செலவுகளை அனுமதிப்பதற்கு இதுவே அடிப்படையாகக் கொள்ளப்படும். எனவே இந்தப் பகுதியைத் தயாரிப்பதில் மிகுந்த கவனம் தேவை. விற்பனையின் எதிர்பார்ப்பு அளவுகளும் யதார்த்தமாக (realistic estimates) இருக்க வேண்டும்.

8. செயல்பாட்டுக் கட்டுப்பாடுகள் (Implementation Controls): சந்தைப்படுத்தல் திட்டத்தின் இறுதிப் பகுதியில், திட்டத்தின் செயல்பாடுகளை கண்காணித்து, தேவை ஏற்படும்போது மாற்றங்கள் செய்வதற்கான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். குறிப்பாக நோக்கங்களும் வரவு செலவுத் திட்டமும் மாதம் (monthly) அல்லது காலாண்டு (quarterly) அளவில் பகுத்து அளிக்கப்படும். இதன் மூலம் குறிப்பிடப்பட்ட கால இடைவெளியில் திட்டத்தை மறு ஆய்வுக்கு உட்படுத்தி தேவையான மாற்று நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். சில நிறுவனங்களின் சந்தைப்படுத்தல் திட்டத்தில், இந்தப் பகுதியில், நெருக்கடி நிலை மாற்றுத் திட்டங்களும் (contingency plans) குறிப்பிடப்படும்.

-o0o-

மேற்குறிப்பிட்டுள்ளவையே ஒரு சந்தைப்படுத்தல் திட்டத்தின் வெவ்வேறு தேவையான பகுதிகள் ஆகும். அடுத்த பதிவில் மாதிரி சந்தைப்படுத்தல் திட்டம் (sample marketing plan) ஒன்றை வெளியிடுகிறேன்.

லொள்ளு மார்க்கெட்டிங் - 2

Durex என்ற ஆணுறை தயாரிக்கும் நிறுவனம், அண்மையில் வெளியிட்ட ஒரு விளம்பரம் இது:போங்க, இதுக்கெல்லாமா நான் வெளக்கம் எழுதிக்கிட்டு இருப்பேன்?

விளம்பர நிறுவனத்துக்கு அளிக்கப்படும் குறிப்பு (The Client Brief) - 2

விளம்பர நிறுவனத்துக்கு அளிக்கும் குறிப்பில் என்னென்ன தகவல்கள் அடங்கியிருக்க வேண்டும் என்று இங்கு காண்போம். வசதிக்காக ஒரு குறிப்பிட்ட பிராண்ட், மற்றும் விளமப்ர நிறுவனத்தின் பெயரைத் தொடர்ச்சியாகப் பயன்படுத்தலாம் என்றிருக்கிறேன். வேறு நோக்கங்கள் இல்லை.

1. ப்ராஜக்ட் மேலாண்மைத் தகவல்கள்: என்னவிதமான வேலைக்காக இந்தக் குறிப்பு வழங்கப்படுகிறது என்பதை சுருக்கமாக தெரியப்படுத்தும் நோக்கத்தில் அமைவது இந்தப் பகுதி. இதில் அடங்கியிருப்பவை பெயர்கள் மற்றும் தொடர்பு விவரங்கள் மட்டுமே. உதாரணமாக:
நாள் (2 நவம்பர், 2004), ப்ராஜக்ட் பெயர் (லக்ஸ் சோப் புதிய விளம்பரம்), ப்ராஜக்ட் தன்மை (லக்ஸ் சோப்புக்கு ஹிந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளுக்கான புதிய தொலைக்காட்சி விளம்பரத்தை கருவாக்கி உருவாக்கி இறுதி வடிவில் தயாரித்து அளிப்பது), ப்ராண்ட் (லக்ஸ் - 50 கிராம் சோப்புக்கட்டி வடிவத்தை மையப்படுத்துவது), நிறுவன குழுமம் (யூனிலீவர்), இயங்கும் நிறுவனம் (ஹிந்துஸ்தான் லீவர் லிமிடெட்), நிறுவன முக்கியத் தொடர்பு (ப்ராண்ட் மேலாளர் ரஞ்சித் கபூர், 98860xxxxx), விளம்பர நிறுவனம் (ஹிந்துஸ்தான் தாம்ப்ஸன் அஸோசியேட்ஸ்), விளம்பர நிறுவன முக்கியத் தொடர்பு (க்ளையண்ட் எக்ஸிக்யூட்டிவ் ஷாலினி குப்தா, 98457xxxxx)

2. இப்போது எங்கு இருக்கிறோம்: பிராண்டின் தற்போதைய நிலை, அதைச் சூழ்ந்துள்ள முக்கிய அம்சங்கள் போன்றவை இந்தப் பகுதியில் இடம் பெறும். உதாரணமாக பிராண்ட் நிலைப்படுத்தல் (positioning) பற்றிய தகவல்கள், (லக்ஸ் - "சினிமா நட்சத்திரங்களின் அழகு சோப்" என்பது நமது நிலைப்படுத்தல், பெரும்பான்மையாக சினிமா நட்சத்திரங்களைப் பயன்படுத்தி முந்தைய விளம்பரங்கள் இருக்கின்றன. மக்களுக்கு சினிமா நட்சத்திரங்களின் மேலான ஆர்வத்தையும் கவர்ச்சியையும் பயன்படுத்திக் கொள்வது வாடிக்கை) தயாரிப்பு முறை, விநியோகத்தின் தன்மைகள், சந்தையின் அளவு மற்றும் அதில் நமது பிராண்டின் அளவு, பயனாளர் பற்றிய தகவல்கள் (எத்தகைய அந்தஸ்து நிலையில் உள்ள வாடிக்கையாளர்கள், மாதத்துக்கு எவ்வளவு பயன்படுத்துவார்கள்), போட்டி பிராண்ட்கள் மற்றும் அவற்றின் நிலைப்படுத்தல்கள் ஆகியவை இடம்பெறலாம்.

3. இங்கிருந்து எந்த இடத்தை அடைய முயற்சிக்கிறோம்: புதிய விளம்பர முயற்சியின் பயனாக நாம் என்ன சாதிக்க நினைக்கிறோம் என்பது பற்றிய கருத்துகள் இந்தப் பகுதியில் இடம்பெறும். நமது நிறுவனத்தின் ஒட்டுமொத்த திட்டங்களின் அடிப்படையில் இந்த நோக்கம் இருக்க வேண்டும். மேலும், செய்யக் கூடிய செலவு மற்று எடுத்துக் கொள்ளும் காலம் ஆகியவற்றுக்குப் பொருத்தமான, நடக்கக்கூடிய (reasonable) நோக்கமாகவும் இருக்க வேண்டும். விற்பனையை அதிகரிப்பது, பயன்பாட்டை (usage) அதிகரிப்பது, வாடிக்கையாளர்களின் தரத்தைப் (customer profile and reputation) பிறரின் பார்வையில் அதிகரிப்பது, பொருளின் புதிய பயன்பாட்டை விளக்குவது, பொருள் பற்றிய அறிதலையும் புரிதலையும் (awareness) வாடிக்கையாளர் மத்தியில் அதிகரிப்பது போன்றவை வழக்கமான நோக்கங்கள். இவை தவிரவும் பல உண்டு.

4. தற்போதைய ஏனைய திட்டங்கள்: தனித்து ஒரு விளம்பரம் மட்டும் நாம் ஆசைப்படுவதை சாதித்து விட முடியாது. நமது ஒருங்கிணைந்த முயற்சிகளில் புதிய விளம்பரமும் ஒரு அங்கமாக சரியாகப் பொருந்தினால் மட்டுமே சிறப்பான பலன் கிட்டும். எனவே தற்போது நமது நிறுவனம் இந்த பிராண்ட் தொடர்பாக நடத்தி வரும் ஏனைய திட்டங்கள் பற்றி சுருக்கமாக இந்தப் பகுதியில் இடம்பெறும். உதாரணமாக இந்தியாவின் முக்கிய நகரங்களில் இளம்பெண்கள் இடையே இந்த பிராண்ட் பற்றி நாம் எடுத்த கருத்துக்கணிப்பு விபரங்கள், கிராமப் பகுதியில் சோப் பயன்படுத்துவது பற்றிய விழிப்புணர்வுக்கு எடுக்கப்பட்ட முயற்சிகள் போன்ற தகவல்கள் இங்கு இடம்பெறலாம். இத்தகைய தகவல்களின் பின்புலத்தோடு விளம்பரம் உருவாக்கப்படும் போது சிறப்பாக அமையும் என்பது எதிர்பார்ப்பு.

5. நமது இலக்கு யார்: அனைத்து வகை தொடர்புகளுமே ஒரு குறிப்பிட்ட குழுவிடமிருந்து ஒரு குறிப்பிட்ட நடவடிக்கையை எதிர்பார்த்து நடத்தப்படுவதே ஆகும். அப்படி நமது விளம்பர முயற்சியின் இலக்கு யார் என்பது பற்றி இந்தப் பகுதியில் இடம்பெறும். இத்தகைய இலக்குக் குழுக்கள் அவர்களின் பல்வேறு தகவல்கள் மற்றும் நடவடிக்கைகளின் அடிப்படியில் தனித்து விளங்குபவர்களாக இருக்க வேண்டியது அவசியம். அதாவது வயது, சமூக நிலை, படிப்பறிவு, பொருளைப் பயன்படுத்தும் தன்மை, சினிமா ஈர்ப்பு போன்ற பல்வேறு அம்சங்களின் அடிப்படையில் வகைப்படுத்தப்பட்டு வழங்கப்பட வேண்டும். உதாரணமாக 16-25 வயதில், திருமணமாகாத, வேலைக்குப் போகும், மாதம் பத்தாயிரத்துக்கு அதிகம் சம்பாதிக்கும், சினிமா மீது ஈர்ப்பு கொண்ட பெண்களை நமது விளம்பரம் கவர்ந்து நமது பிராண்டை வாங்க உந்துதலாய் இருக்கும் வகையில் விளம்பரம் அமைய வேண்டும் என்று சொல்லலாம்.

6. நமது நோக்கம் நிறைவேறியது என்பதற்கு என்ன ஆதாரம்: விளம்பர முயற்சியின் வெற்றி அல்லது தோல்வியை நிர்ணயிக்க இந்தப் பகுதியில் சில தகவல்கள் இடம்பெறும். எடுத்துக் கொண்ட நோக்கத்தை எவ்வளவு தூரம் அடைந்திருக்கிறோம், செய்ய வேண்டுவனவற்றில் எவை எவை எந்த அளவுக்கு செய்யப்பட்டன, இதை எப்போது ஆராய வேண்டும், யார் ஆராய்வது ஆகியவை இந்தப் பகுதியில் கூறப்பட வேண்டும். குறிப்பிட்ட நோக்கம் மட்டுமின்றி நிறுவன அளவில் இந்த விளம்பர முயற்சி மூலமாக என்ன மாற்றம் ஏற்பட்டது என்றும் ஆராய்வது நலமே. உதாரணமாக மும்பை, சென்னை, ஹைதராபாத் ஆகிய நகரங்களில் மூன்று மாத காலத்தில் 10,000 பெண்கள் புதிதாக லக்ஸ் சோப் பயன்படுத்தத் துவங்கினால் வெற்றி என்று வரையறை செய்து கொள்ளலாம்.

7. மற்ற நடைமுறை அம்சங்கள்: இந்த ப்ராஜக்டுக்கு ஒதுக்கப்படும் நிதி ஆதாரங்கள் (budget) எவ்வளவு, விளம்பரத்தை உருவாக்கும் கால அளவு, திட்டத்தின் ஒட்டு மொத்த கால அளவு, எத்தகைய முன்-பின் ஆய்வுகள் (pre and post testing) நடைபெறும், எந்தெந்த ஊடகங்களைப் பயன்படுத்துவது என்பது பற்றிய சில விருப்பங்கள் போன்றவை இந்தப் பகுதியில் இடம்பெறும். செலவினங்களை எப்படி ஒவ்வொரு அங்கத்திற்கும் பிரிப்பது என்பது பற்றியும் குறிப்பிடலாம். உதாரணமாக ஒட்டுமொத்த ப்ராஜக்டுக்கு 20 லட்சம் எனும் போது, விளம்பரத்தை உருவாக்க 5 லட்சமும், விளம்பரங்களைத் தொலைக்காட்சி சேனல்களில் வெளியிட கட்டணமாக 15 லட்சமும் என்று பிரித்துச் சொல்லலாம்.

8. ஒப்புதல்கள்: இறுதியாக, விளம்பர நிறுவனம் முன்வைக்கும் யோசனைகளை யார் யார் பார்த்து ஒப்புதல் அளிப்பார்கள் என்பது பற்றியும் இதிலேயே குறிப்பிட்டு விட்டால் மிக நன்மை பயக்கும். சில விளம்பரங்கள் மார்க்கெட்டிங் இயக்குனர் (Marketing Director) அளவில் ஒப்புதல் அளிக்கப்படும். இன்னும் சில, தலைமை மார்க்கெட்டிங் அலுவலர் (CMO - Chief Marketing Officer) அளவிலும், வேறு சில தலைமை நிர்வாக அலுவலர் (CEO - Chief Executive Officer) அளவிலும் கூட ஒப்புதல் அளிக்கப்பட வேண்டியிருக்கலாம்.

-o0o-

மேற்கூறிய அம்சங்கள் அடங்கிய குறிப்பினை ஹிந்துஸ்தான் லீவர் நிறுவனம், தனது விளம்பர நிறுவனமான ஹிந்துஸ்தான் தாம்ப்ஸன் அஸோசியேட்ஸிடம் வழங்கும். அதைப் பற்றி ப்ராஜக்டில் இடம்பெறும் இரு நிறுவனங்களின் பணியாளர்களும் கலந்து பேசி விவாதம் நடத்துவார்கள். பிறகு விளம்பர நிறுவனம் "ஐஸ்வர்யா ராய் போல் ஒரு நாள் வாழலாம்" என்ற விளம்பர யோசனையை முன் வைக்கும். அதன் விவரங்களைக் கண்டு ஒப்புதல் அளிக்கப்படும். ஐஸ்வர்யா ராயை வைத்து விளம்பரம் படமாக்கப்படும். ஒரு மாத காலத்துக்கு விளம்பரம் சேனல்களில் காண்பிக்கப்படும். ஒரு போட்டி நடைபெற்று, அதில் தேர்வான சிலருக்கு ஐஸ்வர்யா ராய் போன்று ஒரு நாள் கவனிப்பு இருக்கும். இறுதியில் குறிப்பிட்டபடி மூன்று நகரங்களில் புதிதாக லக்ஸ் சோப்பை குறித்த அளவு பெண்கள் பயன்படுத்தியிருந்தால் விளம்பரம் வெற்றி என்று எடுத்துக் கொள்ளப்படும்.

பெரும்பானமையான விளம்பரங்கள் உருவாகும் முறை இதுவே ஆகும்.