விளம்பர நிறுவனத்துக்கு அளிக்கப்படும் குறிப்பு (The Client Brief) - 1

கொஞ்ச நேரம் மார்க்கெட்டிங்கை மறந்து விட்டு, நீங்கள் உங்கள் ஊரின் அருகே ஓடும் ஆற்றின் இடையே ஒரு பாலம் கட்டும் வேலையில் இருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். உங்களைச் சுற்றி பல இஞ்சினியர்கள், ஆர்க்கிடெக்டுகள் போன்ற வல்லுனர்கள் இருக்கிறார்கள். நீங்கள் அவர்களிடம் என்ன விவரங்கள் சொல்ல வேண்டும்?

'அந்தப் பாலம் எங்கிருந்து துவங்க வேண்டும்' என்பது நீங்கள் அளிக்க வேண்டிய ஒரு முக்கிய விபரமாக இருக்கும்.

அடுத்து, 'அந்தப் பாலம் எங்கே போய் முடிய வேண்டும்' என்பதைப் பற்றியும் நீங்கள் சொல்லியாக வேண்டும்.

'பாலத்தை எப்படியெல்லாம் கட்ட வேண்டும்' என்பது பற்றி? பெரும்பான்மையோர், அது இஞ்சினியரின்/ஆர்க்கிடெக்டின் வேலை என்று கூறுவர். பாலம் எப்படி பார்வைக்கு அழகாக இருக்க வேண்டும் என்று நீங்கள் சொல்லலாம். அது எத்தனை உயரத்தில் இருக்க வேண்டும், அதன் கீழ் எத்தகைய படகுகள் செல்லத்தக்கதாய் இருக்க வேண்டும் என்பது பற்றியெல்லாம் சொல்லலாம். ஆனால், அதை எப்படி கட்டுவது என்பது பற்றி அந்தத் துறை வல்லுனர் முடிவெடுக்க விடுவதே நல்லது.

நமது நிறுவனத்தின் விளம்பரத் தேவைகளுக்காக விளம்பர நிறுவனத்திற்கு குறிப்பு வழங்குவது (briefing the advertising agency) என்பதும் இப்படி பாலம் கட்டும் வேலை போலத் தான். நாம் (நமது brand) எந்த இடத்தில் இருக்கிறது என்று அவர்களுக்குச் சொல்ல வேண்டும். அது எங்கே போய்ச் சேர வேண்டும் என்ற நமது எதிர்பார்ப்பைச் சொல்ல வேண்டும். அதற்குப் பிறகு அதை நிறைவேற்றத் தீட்டங்கள் தீட்டித் தருவதே விளம்பர நிறுவனத்தின் பணி.

விளம்பர நிறுவனத்துக்கு குறிப்பை வழங்குவதில் மூன்று முக்கிய நோக்கங்கள் உள்ளன.

1. சிறப்பான வேலையைப் பெற: விளம்பர நிறுவனத்துக்கு அளிக்கும் குறிப்பே நமது ஒட்டுமொத்த கருத்துப் பரிமாற்ற இயக்கத்தின் அடிப்படியாக விளங்கும். தேவை என்ன என்ற தெளிவு இருக்கும் போது தான் யாருமே சிறப்பாக பணி செய்ய இயலும் என்பது மறுக்க முடியாத ஒரு கருத்தாகும்.

2. நேரம் மற்றும் பணம் விரயமாவதைத் தவிர்க்க: விளம்பர நிறுவனத்தின் வளங்களைத் தெளிவற்ற நோக்கங்களுக்காக விரயம் செய்யும் போது அதனால் பணமும் நேரமும் வீணாகிறது. தெளிவான குறிப்பு வழங்கப்படுவதனால் என்ன தேவை என்று விளம்பர நிறுவனத்துக்குப் புரிகிறது. அவர்கள் தேவையற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் நாம் என்ன கேட்கிறோமோ அதை மட்டும் கவனமாகச் எய்ய இயலும். (சிலர், 'குறிப்பை எல்லாம் எழுதித் தர எனக்கு நேரமேயில்லைப்பா' என்று புலம்பக் கூடும். குறிப்பை அளிக்காமல் தவிர்த்து நேரத்தை மிச்சம் பிடிப்பதைப் போன்ற அறிவீனம் வேறு எதுவும் இருக்க முடியாது. தெளிவான குறிப்பு இல்லாமல் விளம்பர நிறுவனம் அவர்களும் குழம்பி, நம்மையும் வேதனைப்படுத்து இன்னும் அதிக நேரம் விரயமானது தான் மிஞ்சும்.!)

3. நியாயமான ஊதியத்தை நிர்ணயிக்க: நிதித்துறையிலிருக்கும் நண்பர்கள் மார்க்கெட்டிங் துறையிலிருப்பவர்கள் மீது அடிக்கடி சொல்லும் குறை என்னவென்றால் - 'நீங்கள் அதிக தொகையை மார்க்கெட்டிங் திட்டத்துக்காகச் செலவழிக்கிறீர்கள். ஆனால் அதன் நேரடிப் பயன்கள் என்னவென்று சரியாகப் புரிவதில்லை' என்பதே ஆகும். இந்த சூழ்நிலையில் ஒரு தெளிவான குறிப்பை நாம் வழங்கும்போது அதில் குறிப்பிட்ட காலத்தின் இறுதியில் நாம் எதிர்பார்க்கும் விளைவுகளைப் (results) பற்றியும் இருக்கும். இந்த விளைவுகளை விளம்பர நிறுவனத்தின் நடவடிக்கைகள் எந்த அளவுக்கு நடைமுறைப்படுத்தியிருக்கின்றன என்பதைக் கண்கூடாக அறியக் கூடிய வாய்ப்பு உள்ளது. எனவே விளம்பர நிறுவனத்துக்கு ஒரு நியாயமான ஊதியத்தை நிர்ணயிப்பதில் எந்த சிக்கலும் எழாது. மேலும், குறிக்கோள்கள் (targets/objectives) மற்றும் வெற்றியை நிர்ணயிக்கும் வழிகள் (success criteria) ஆகியவற்றை வெளிப்படையாகப் பேசும் ஒரு குறிப்பு, மார்க்கெட்டிங் துறையின் accountability மற்றும் effectiveness ஆகியவற்றை வெளிப்படுத்துகிறது.

-o0o-

இப்போது ஒரு நல்ல குறிப்பின் அடிப்படை அம்சங்களைப் பார்ப்போம். இவை மூன்று வகைப்படும்:

1. விளம்பர நிறுவனத்துக்கு குறிப்பு வழங்கும்போது அது அடிப்படையில் ஒரு எழுதப்பட்ட ஆவணமாகவும் (written document), அதன் மேல் நாம் அளிக்கும் வாய்வழி விபரங்களாகவும் (verbal information) இருப்பது சிறப்பு. எழுதப்பட்ட ஆவணத்தை இரு தரப்பும் படித்து அதன் மேல் ஒரு ஆரோக்கியமான விவாதத்தை நடத்தி அவையனைத்தின் அடிப்படையில் விளம்பர நிறுவனம் தங்கள் பணிகளைத் துவக்கும் போது அது மிகச் சிறப்பான முடிவுகளை அளிக்கிறது. எழுதப்படும் ஆவணமாக குறிப்பு இருப்பது இன்னொரு வகையிலும் இன்றியமையாததாகிறது. இதன் மூலம் நமது நிறுவனத்தின் உயர் தலைவர்களுக்கு இதில் ஒரு நம்பிக்கை ஏற்படுகிறது (buy-in). இத்தகைய நம்பிக்கையை முதலிலேயே பெற்று விடுவது, பிற்பாடு தேவையற்ற சிக்கல்களைத் தவிர்க்கும். அன்றியும் தற்கால சூழ்நிலையில், பல்வேறு மாறுபட்ட மார்க்கெட்டிங் தேவைகளுக்காக ஒன்றுக்கு மேற்பட்ட விளம்பர நிறுவனங்களைப் பணியில் அமர்த்திக் கொள்வது நடைமுறையாகி வருகிறது. இத்தகைய நிலையில் அடிப்படையான ஒரு எழுதப்பட்ட ஆவணம் இருப்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அனைவரையும் ஒன்றாகக் கூப்பிட்டு குறிப்பை வழங்குவது நமது வேலையை எளிமைப்படுத்தும்.

2. தெளிவான சிந்தனை ஓட்டம்: நல்ல குறிப்பு என்பது நீளமானதோ, அதிக தகவல்கள் மிக்கதோ அல்ல. தெளிவும் குவிந்த முனைப்பும் ஒரு களனை அமைத்துக் கொடுக்க அதன் மீதாக நின்று விளம்பர நிறுவனம் நமக்கு சிறப்பான strategic leap-ஐக் கொடுக்கவல்ல குறிப்பே ஆகும். இந்தக் குறிப்புகளின் ஆங்கிலப் பெயர் Brief என்று இருப்பதன் தாத்பர்யமே அது சுருக்கமாக இருக்க வேண்டும் என்பதே ஆகும். அவை நமது சிந்தனையின் கூட்டு வெளிப்பாடாக இருக்க வேண்டும். தேவைப்படும் தகவல்களை பின்னிணைப்புகளாகக் கொடுக்கலாம். சுருக்கமாக இருக்க வேண்டும் என்பதற்கு உங்கள் கற்பனைத் திறனை மூடி மறைத்து விட வேண்டும் என்று அவசியமில்லை. சில சமயம், மிகுந்த கற்பனையோடு ஆசிரியர் தொழிலை விளம்பரப்படுத்த ஒரு குறிப்பினை அளிக்கும் போது அந்த வேலையில் கோடை விடுமுறையில் கிடைக்கும் ஓய்வை வலியுறுத்தும் வகையில் அளித்தால், "இரண்டு மாதம் சம்பளத்துடன் கூடிய ஓய்வு வேறு எங்கு உண்டு?" என்று அழகான விளம்பர செய்தி உருவாக வாய்ப்பு உண்டு.

3. தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ள குறிக்கோள்கள்: நாம் நமது குறிச்சந்தையோடு (target market) தொடர்பு ஏற்படுத்துவதன் முக்கிய நோக்கம், அவர்களை ஏதாவது காரியம் செய்ய வைக்கத்தான் - பெரும்பாலும் பொருளை வாங்க வைக்க. நமது குறிச்சந்தை யார்? அவர்கள் செய்ய வேண்டிய காரியம் என்ன? அந்தக் காரியத்தோடு தொடர்புடைய நமது பொருள் அல்லது சேவை என்ன? இவற்றை சரியாகச் சொல்லிவிட்டால் குறிப்பின் பெரும்பகுதி முடிந்து விடுகிறது. மற்றவை எல்லாம் இதற்குத் துணை புரியும் மேலதிக விபரங்களே ஆகும். எனவே குறிப்பிலே 'பிராண்ட் இமேஜைக் கூட்ட' என்பது போன்ற தெளிவற்ற குறிக்கோள்களை விடுத்து, 'அடுத்த மாதம் இவ்வளவு பொருட்கள் விற்பனை' என்பது போன்ற தீர்மானமான குறிக்கோள்களை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். (நடைமுறைப்படுத்தக் கூடிய அளவில். அதற்காக எடுத்த எடுப்பிலேயே அகலக் கால் வைத்து விடக் கூடாது.) விளம்பர நிறுவனத்துக்கு என்ன நமது பிரச்சினை என்றே நாம் சரியாகச் சொல்லத் தெரியவில்லையென்றால் அதைப் போல் ஒரு கடுப்பேற்றும் விஷயம் அவர்களுக்கு இருப்பதில்லை.

அடுத்த பதிவில், ஒரு விளம்பரக் குறிப்பின் பல்வேறு அங்கங்கள் எவை எவை என்று பார்ப்போம்.

நன்றி: Charities Aid Foundation சார்பில் வெளியிடப்பட்டுள்ள விளக்கக் கையேடு.

ஹோண்டாவின் Positive Hate விளம்பரம்

ஹோண்டா அக்கார்ட் காருக்கான விளம்பரம் பற்றி ஏற்கெனவே உங்களுக்கு சொல்லியிருக்கிறேன். 606 டேக்குகள் எடுத்து அனிமேஷன் எதுவும் பயன்படுத்தாமல் அமைக்கப்பட்ட அந்த் விளம்பரம் பலத்த பாராட்டுக்களைப் பெற்றது. அடுத்து இன்னொரு பட்டையைக் கிளப்பும் விளம்பரத்தோடு களமிறங்கியிருக்கிறது ஹோண்டா. இந்த முறை முழுக்க அனிமேஷனில் எடுக்கப்பட்டிருக்கும் இந்த விளம்பரத்தில் அவர்கள் முன்வைக்கும் கருத்து நமது கவனத்தைக் கவர்கிறது.

Positive Hate என்ற ஒரு கருத்தினை இந்த விளம்பரம் முன்வைக்கிறது. அதாவது நாம் எதை மிக வெறுக்கிறோமோ, அதைக் குறித்து அதிகக் கவலையை வெளிப்படுத்தி அதை மாற்றியமைக்க முயற்சிக்க வேண்டும் என்பது இதன் உட்பொருள். இதைத் தான் இந்த விளம்பரம், "Hate Something, Change Something" என்று சொல்கிறது.

ஹொண்டாவின் தலைமை எஞ்சின் வடிவமைப்பாளரான கெனிச்சி நாகஹிரோவின் (Kenichi Nagahiro) புதிய டீஸல் எஞ்சினுக்கான விளம்பரம் இது. கெனிச்சிக்கு டீஸல் எஞ்சின்கள் மேல் மிகுந்த வெறுப்பு. அவைகளின் சத்தமும் மணமும் அவருக்கு சற்றும் பிடித்ததில்லை. இந்த சூழ்நிலையில் ஹோண்டா ஒரு புதிய டீஸல் எஞ்சினை வடிவமைக்கும் முயற்சியில் இறங்கியது. இதற்கு கெனிச்சியும் ஒப்புக் கொண்டார். ஆனால் தனக்கு முழுமையான அதிகாரம் வேண்டுமென்று அவர் கேட்டார். ஹோண்டா நிறுவனம் ஒப்புக் கொண்டது. கெனிச்சி அடிப்படையிலிருந்து ஆரம்பித்தார். கடின உழைப்புக்குப் பின் தற்போது சந்தையில் இருப்பதிலேயே மிக தூய்மையானதாகவும் சத்தமிடாததாகவும் 2.2 i-CTDi என்ற டீஸல் எஞ்சினை வடிவமைத்துள்ளார்.

இதை அடிப்படையாகக் கொண்டே தனது "Hate Something, Change Something" என்ற விளம்பர ஐடியாவை எடுத்துள்ளது ஹோண்டாவின் விளம்பர நிறுவனமான வீடன் அண்ட் கென்னெடி (Wieden & Kennedy). மிக அழகான ஒரு சோலையில் பறவைகளும் முயல்களும் மற்றும் பல உயிரினங்களும் இருக்கும் சூழலில் சில பழைய டீஸல் எஞ்சின்கள் பறந்து வந்து மிகுந்த இரைச்சலும் புகையும் பரப்பியபடி இருக்கின்றன. அவை எப்படி புதிய எஞ்சினில் மாற்றம் கொள்கின்றன என்பதை மிக வண்ணமயமாகச் சொல்கிறது இந்த விளம்பரம்.விளம்பரத்தை ஹோண்டாவின் வலைத்தளத்தில் காணலாம். (Watch the link என்ற சுட்டியை அழுத்தவும்.)

விளம்பரத்தோடு நிறுத்திக் கொள்ளாமல் தனது சிந்தனையை ஸ்டிக்கர்கள், போஸ்ட் கார்டுகள் மற்றும் பல்வேறு ஊடகங்கள் வழியாகவும் வலியுறுத்தும் வகையில் ஏற்பாடுகளைச் செய்துள்ளது ஹோண்டா நிறுவனம். இத்தகைய ஒருங்கிணைந்த மார்க்கெட்டிங் நடவடிக்கைகளின் (Integrated marketing) மூலமாக இந்த விளம்பரச் சிந்தனையும் பரவலான வரவேற்பைப் பெறும் என்பதில் சந்தேகமில்லை.இந்த விளம்பரத்தையொட்டி ஒரு இணைய விளையாட்டைக் கூட அமைத்திருக்கிறார்கள். இதில் நாம் முயல்களாக இருந்து கொண்டு குறிப்பிட்ட நேரத்துக்குள் கேரட்களை சாப்பிட வேண்டும். :-)

மீண்டும் ஒரு சிக்ஸர் அடித்திருக்கிறார்கள் ஹோண்டாவும் வீடன்& கென்னெடி விளம்பர நிறுவனமும். பாராட்டத்தக்கது.

சென்ற நூற்றாண்டின் தலை சிறந்த விளம்பர வாசகங்கள்

1. டி பீர் வைரங்கள் (De Beer Diamonds) - A diamond is forever:
1940-களுக்கு முன்னால் திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் மாற்றிக் கொள்ளப்படும் மோதிரங்களில் வைரம் இருந்ததில்லை. பவழம், கோமேதகம் போன்ற வேறு சில ரத்தினங்களே அதில் இடம்பெற்று வந்தன. வைரங்களைக் காதலின் உச்சகட்ட வெளிப்பாட்டுக் குறியீடாக மாற்றியது 1947-ல் NW Ayer விளம்பர நிறுவனம், டி பீர் வைர நிறுவனத்திற்காக உருவாக்கிய இந்த வாசகம். காதலைப் போல சிந்தனைத் தளத்திலும், உருவ தளத்திலும் காலங்காலமாக மாறாமல் இருக்கக்கூடிய வைரத்தின் தன்மையை அழகாகப் படம் பிடித்தது இந்த வாசகம். இதுவே சென்ற நூற்றாண்டின் தலை சிறந்த விளம்பர வாசகமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.

2. நைக் காலணிகள் (Nike Footwear) - Just Do It:
ஆண்டு: 1988. நைக், தனது போட்டியாளரான ரீபாக்கை (Reebok) எதிர்த்து என்ன விதத்தில் பதிலடி கொடுக்கலாம் என்று யோசித்துக் கொண்டிருந்த ஒரு காலகட்டம். விளம்பர நிறுவனம் வீடென் & கென்னடியைச் (Wieden & Kennedy) சார்ந்த சில அலுவலர்களும் நைக் நிறுவன அலுவலர்களும் பேசிக் கொண்டிருந்தனர். நைக் நிறுவனம், எதையும் எளிதாகச் செய்து முடிக்கும் விதமான நம்பிக்கையை வளர்த்துக் கொண்டிருப்பதைப் பாராட்டிப் பேசிக் கொண்டிருந்த விளம்பர நிறுவன அதிகாரி, இடையில், "You Nike guys, you just do it" என்று சொன்னார். சொல்லிவிட்டு ஏதோ சுவாரஸ்யமாகச் சொல்லியிருக்கிறோமே என்று மீண்டும் சொல்லிப் பார்த்தார். அங்கே பிறந்தது விளம்பர வரலாற்றில் வாடிக்கையாளர்களின் கவனத்தை மிக அதிக அளவில் ஈர்த்த விளம்பர வாசகங்களில் ஒன்று. கூட ஸ்வூஷ் (Swoosh) எனப்படும் அந்த டிக் மார்க்கைச் சேர்த்துக்கொண்டு நைக் பட்டையைக் கிளப்பியது வரலாறு. காலணிகளை விட காலணி அணிபவர்களைத் தன் விளம்பரங்களில் மையப்படுத்தி அவர்களை ஹீரோக்களாக்குகிறது நைக்.

3. கோககோலா (CocaCola) - It's the real thing:
1970ம் ஆண்டின் இறுதியில் கோககோலா நிறுவனம், தனது பல வருட விளம்பர வாசகத்தை மாற்றி என்ற புதிய வாசகத்துக்கு மாறியிருந்தது. அப்போது விளம்பர நிறுவனமாக இருந்தது McCann Erickson. பில் பாக்கர் (Bill Backer)என்பவர் அப்போது அங்கு கிரியேட்டிவ் டைரக்டர். ஜனவரி 1971-ல், பாக்கர் இந்தப் புதிய விளம்பர வாசகத்தையொட்டி ஒரு பாடல் உருவாக்குவதற்காக லண்டனில் வசிக்கும் பாடலாசிரியர்களை சந்திக்க விமானம் ஏறினார். லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில் கடும்பனி சூழ்ந்திருந்ததால் விமானம் அயர்லாந்தின் ஷான்னன் விமான நிலையத்துக்குத் திருப்பி விடப்பட்டது. பயணிகள் அன்றைய இரவை விமான நிலையத்தில் முன்பின் அறிமுகம் இல்லாதவர்களுடன் கழிக்க வேண்டிய சூழ்நிலை. இதைப் பற்றி வெளிப்படையாகவே புலம்பிக் கொண்டிருந்தனர் பயணிகள். மறுநாள் காலையோ பாக்கர் ஒரு புதிய காட்சியைக் கண்டார். புலம்பிய பயணிகள் அனைவரும் தங்களுக்கிடையில் கேலி செய்து கொண்டு சிரித்து மகிழ்ந்து உற்வாடிக் கொண்டிருந்தனர் - கோக் பாட்டில்களைக் கையில் சுமந்து கொண்டு. அவர் சொல்கிறார்: 'நான் கோக்கை வெறும் புத்துணர்ச்சி பானமாக மட்டுமில்லாமல் அனைத்து மனிதர்களிடையிலான ஒற்றுமைக்கான சிறிய துகளாக அப்போது பார்த்தேன்.' இதையொட்டி உருவாக்கப்பட்ட பாடல், கோககோலாவிற்கு மாறாத வாடிக்கையாளர் கூட்டத்தை உருவாக்கித் தந்தது.
I'd like to teach the world to sing
In perfect harmony
I'd like to buy the world a Coke
And keep it company.

4. மில்லர் பியர் (Miller Beer) - It's MIller Time:
லியோ பர்னெட் (Leo Burnett) என்ற விளம்பர நிறுவனம் 1974-ல் உருவாக்கியது இந்த வாசகம். 'ஒரு நாளின் கடின உழைப்புக்கு ஒரு பரிசு' என்ற அடிப்படையில் உருவாக்கப்பட்டது இந்த வாசகம். இதன் விளம்பரங்களில் நடுத்தர மற்றும் கீழ் தட்டு மனிதர்கள் கடின உழைப்பில் ஈடு பட்டு சரியாக மாலை மணி ஐந்துக்கு, 'இது மில்லர் நேரம்' என்று குதூகலித்தபடி ஒரு மில்லர் பியர் பாட்டிலை எடுத்துக் கொண்டு அமர்வது போல் இருக்கும். நன்றாக வேலை செய்தது.

5. ஆவிஸ் கார் வாடகை நிறுவனம் (Avis Car Rental) - We are only No.2, We try Harder:
1962. பதிமூன்று ஆண்டுகள் லாபமில்லாமல் இயங்கிய ஆவிஸ் நிறுவனம், டாய்ல் டேன் பெர்ன்பாக் (Doyle Dane Bernbach) என்ற புதிய விலம்பர நிறுவனத்தை அழைத்து விளம்பரப் பணிகளை அளித்தது. விளம்பர நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரான பெர்ன்பாக் கூறிய முதல் யோசனை பிரசித்தி பெற்றது: 'நீங்கள் புதிய விளம்பரத்தை உருவாக்குவதற்கு முன்னால் உங்கள் சேவையின் தரத்தை அதிகரியுங்கள். ஏனென்றால் சுமாரான பொருள்/சேவைக்கு நல்ல விளம்பரத்தை செய்வது வீணானது." ஆவிஸ் நிறுவனத்தினர் ஒப்புக் கொண்டனர். இருவரும் இணைந்து உருவாக்கிய வாசகம் தான் - 'நாங்கள் இரண்டாம் இடத்தில் உள்ளோம். எனவே நாங்கள் அதிகம் முயற்சி செய்கிறோம்.' இது ஏன் மிகப் பிரபலமான ஒரு மார்க்கெட்டிங் உறுதிமொழியாக இருக்கிறது என்றால், அது வெறும் விளம்பர வாசகமாக இல்லாமல் ஒவ்வொரு பணியாளரும் எடுத்துக்கொண்ட ஒரு தனிப்பட்ட உறுதிமொழியாக இருப்பதனால் தான். 32 மில்லியன் டாலர் வருமானத்தில் 4 மில்லியன் டாலர் நட்டப்பட்டுக் கொண்டிருந்த நிறுவனம், அடுத்த வருடமே 38 மில்லியன் டாலர் வருமானத்தில் 2 மில்லியன் டாலர் லாபம் ஈட்டியது.

ஆதாரம்: Advertising Age பத்திரிக்கை, 2001

சம காலத்தின் 25 உயரிய வணிகத் தலைவர்கள்

அமெரிக்காவில் அதிகம் பேர் பார்க்கும் தினசரி தொலைக்காட்சி வணிக நிகழ்ச்சியான Nightly Business Report (NBR)-உம், பென்சில்வேனிய பல்கலைக்கழகத்தின் வார்ட்டன் வணிகக் கல்வி நிறுவனத்தின் (Wharton School of Business) ஓர் அங்கமான Knowledge@Wharton-உம் இணைந்து சம காலத்தின் தலை 25 வணிகத் தலைவர்களை (Top 25 Business leaders of our times) அடையாளம் காண முனைந்தனர். NBR நிகழ்ச்சியின் பார்வையாளர்கள் சமர்ப்பித்த 700க்கும் அதிகமான பெயர்களிலிருந்து வார்ட்டன் கல்வி நிறுவனத்தின் 6 பேராசிரியர்கள், 25 தலையாய வணிகத் தலைவர்களைத் தேர்ந்தெடுத்துள்ளனர். அவர்கள் அகர வரிசைப்படி இங்கே:

1. மேரி கே ஆஷ் (Mary Kay Ash), நிறுவனர், மேரி கே நிறுவனம் (Mary Kay Inc.)

2. ஜெஃப் பெஸோஸ் (Jeff Bezos), தலைமை நிர்வாக அதிகாரி, அமேஸான்.காம் (Amazon.com)

3. ஜான் பாகிள் (John Bogle), நிறுவனர், வான்கார்ட் குழுமம் (Vanguard Group)

4. ரிச்சர்ட் பிரான்ஸன் (Richard Branson), தலைமை நிர்வாக அதிகாரி, விர்ஜின் குழுமம் (Virgin group)

5. வாரன் பஃபே (Warren Buffet), தலைமை நிர்வாக அதிகாரி, பெர்க்ஷைர் ஹாதவே (Berkshire Hathaway)

6. ஜேம்ஸ் பர்க் (James Burke), முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி, ஜான்ஸன் & ஜான்ஸன் (Johnson & Johnson)

7. மைக்கேல் டெல் (Michael Dell), தலைமை நிர்வாக அதிகாரி, டெல் கணினி நிறுவனம் (Dell Computers)

8. பீட்டர் ட்ரக்கர் (Peter Drucler), கல்வியாளர் மற்றும் எழுத்தாளர்

9. வில்லியம் (பில்) கேட்ஸ் (Bill Gates), தலைவர், மைக்ரோசாஃப்ட் (Microsoft)

10. வில்லியம் ஜார்ஜ் (William George), முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி, மெட்-ட்ரானிக்ஸ் (Medtronics)

11. லூயி கெர்ஸ்ட்னர் (Louis Gerstner), முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி, ஐ.பி.எம் (IBM)

12. ஆலன் க்ரீன்ஸ்பான் (Alan Greenspan), தலைவர், அமெரிக்க நிதி/பொருளாதாரத்துறை (US Federal Reserve)

13. ஆண்ட்ரூ க்ரோவ் (Andrew Grove), தலைவர், இண்டெல் (Intel)

14. லீ இயகோக்கா (Lee Iacocca), முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி, க்ரைஸ்லர் (Chrysler)

15. ஸ்டீவன் ஜாப்ஸ் (Steven Jobs), தலைமை நிர்வாக அதிகாரி, ஆப்பிள் கணினி நிறுவனம் (Apple Computers)

16. ஹெர்பெர்ட் கெல்லெஹர் (Herbert Kellher), தலைவர், சௌத்வெஸ்ட் ஏர்லைன்ஸ் (Southwest Airlines)

17. பீட்டர் லின்ச் (Peter Lynch), முன்னாள் நிதி மேலாளர், ஃபிடலிட்டி மெகல்லன் நிதி (Fidelity Magellen Fund)

18. சார்ல்ஸ் ஷ்க்வாப் (Chales Schwab), நிறுவனர், சார்ல்ஸ் ஷ்க்வாப் குழுமம் (The Charles Schwab Group)

19. ஃப்ரெடரிக் ஸ்மித் (Frederick Smith), தலைமை நிர்வாக அலுவலர், ஃபெடெரல் எக்ஸ்பிரஸ் (Federal Express)

20. ஜார்ஜ் சோரோஸ் (George Soros), நிறுவனர்-தலைவர், ஓபென் சொஸைட்டி இன்ஸ்டிட்யூட் (The Open Society Institute)

21. டெட் டர்னர் (Ted Turner), நிறுவனர், சி.என்.என் (CNN)

22. ஸாம் வால்டன் (Sam Walton), நிறுவனர், வால்மார்ட் (Wal-mart)

23. ஜாக் வெல்ச் (Jack Welch), முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி, ஜெனெரல் எலக்ட்ரிக் (General Electric)

24. ஓப்ரா வின்ஃப்ரே (Oprah Winfrey), தலைவர், ஹார்போ குழுமம் (Harpo Group)

25. மொஹம்மது யூனுஸ் (Mohammed Yunus), நிறுவனர், கிராமீன் வங்கி (Grameen Bank)

இவர்கள் அனைவருள்ளும் முதலிடம் பிடித்திருப்பது இண்டெல் நிறுவனத்தின் தலைவர் ஆண்ட்ரூ க்ரோவ்.

இவர்களின் பேட்டிகள் மற்றும் அவர்களின் வணிக வாழ்க்கைப் பயணக் குறிப்புகளுடன் ஒரு புத்தகமும் வெளிவர உள்ளது. 'Lasting Leadership: Lessons from the 25 Most Influential Business People of Our Times' என்பது அதன் தலைப்பு.

அதிலிருந்து: தலைமை நிலை பற்றி வான்கார்ட் குழுமத் தலைவர், வார்ட்டன் கல்லூரியில் ஆற்றிய உரையில் தனது நிறுவன மேலாளர் ஒருவர் கூறிய ஒரு கருத்தைக் குறிப்பிடுகிறார். "ஒருவர் தலைவர் ஆவது எதனால் என்ற ஆராய்ச்சி மிகவும் சுவாரஸ்யமானது தான். ஆனால் தலைமைத் தன்மை குறித்து ஒரு ஃபார்முலாவைக் கண்டு விட முடியும் என்று யாரும் நம்பினால் அவர்கள் ஏமாற்றமே அடைவார்கள். மைக்கலேஞ்சலோ அல்லது ்ஷேக்ஸ்பியரின் உயரிய படைப்புகளை ஆயார்வது போலத் தான் இதுவும். அவற்றை நாம் மறு பிரசுரம் செய்ய முடியும், காப்பியடிக்க இயலும். ஆனால் புள்ளிகளை இணைத்து யார் வேண்டுமானாலும் எழுதிவிடக்கூடிய, வரைந்து விடக்கூடிய மாதிரிகளைத் தயாரிப்பது இயலாத காரியம். கடைசி உண்மை என்னவென்றால் - மனிதர்கள், தலைவர்களாக இருப்பதைத் தேர்ந்தெடுப்பதாலேயே அவர்கள் தலைவர்களாகிறார்கள்."

அவர் சொல்வது பொருள் மிக்க ஒரு கருத்து. நாம் தலைவர்களாக இருப்பதும், பின் தொடர்பவர்களாக இருப்பதும் நமது தேர்விலேயே இருக்கிறது.

லொள்ளு மார்க்கெட்டிங் - 1

பெரிய மனிதர்களை அவ்வப்போது "கலாய்த்து" விளம்பரப் பலகை அமைப்பது இந்தியாவில் நடக்கக் கூடியது தான். குறிப்பாக அமுல் நிறுவனம், இத்தகைய விளம்பரப் பலகைகளுக்காக மிகப் புகழ் பெற்றது.

அண்மையில் சென்னையில் வைக்கப்பட்ட விளம்பரப் பலகை இது:கடல் கடந்து அமெரிக்கா வரைக்கும் போய் அந்த ஊரு ஜனாதிபதியை ரொம்பத் தான் நக்கல் விடுறாங்கப்பா.

ஆனால், இது ஒரு வகையில் நல்ல கவனம் ஈர்க்கும் உத்தி என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

படம் உதவி: Prince Roy. இவர், சென்னை அமெரிக்க தூதரகத்தில் பணிபுரியும் அமெரிக்கர்.