காருக்குள்ளே பூந்தொட்டி

1998-ல் வோல்க்ஸ்வாகன் நிறுவனம் (Volkswagen), 'நியூ பீட்டில்' (New Beetle) என்ற தனது புதிய காரை சந்தைக்கு அறிமுகப்படுத்தியது. இதில் குறிப்பிடத்தக்க ஒரு அம்சமாக அவர்கள் விளம்பரப்படுத்தியது, முன் பானலில் (front panel) இருந்த சிறிய பூந்தொட்டியை (bud vase). அன்றாடம் பூக்களை அலங்காரமாக வைத்துக் கொள்ள இது உதவும் என்று காரை வாங்க வந்தவர்களிடம் விற்பனையாளர்கள் கூறினார்கள்.அப்போது பலரும் இது ஒரு தேவையற்ற அம்சம் என்றே கருதினார்கள். 'ஒவ்வொரு நாளும் பூக்களை மாற்றிக் கொண்டிருக்க யாருக்கு நேரமிருக்கிறது? காருக்குள்ளே வாடிப் போன மலர்களின் வாசம் தான் கடைசியில் மிஞ்சப் போகிறது' என்பதே பலரின் நினைப்பாக இருந்தது. ஆனால் இன்றைக்கு நீங்கள் சாலையில் செல்லும் போது இந்த மாடல் காரைக் கடக்கும் போது கொஞ்சம் முன் பானலைப் பாருங்கள். 75% கார்களில் புதிய மலர்கள் இருப்பதைக் காணலாம்.

ஏனென்றால் வாடிக்கையாளர்கள் இந்த அம்சத்தின் நோக்கத்தைப் புரிந்து கொண்டார்கள். இந்தப் பூந்தொட்டி, காருக்கும் அதைப் பயன்படுத்தும் தங்களுக்கும் ஒரு தனிப்பட்ட ஆளுமையைக் (unique personality) கொடுப்பதை உணர்ந்து கொண்டார்கள். தங்களது கற்பனையை பயன்படுத்தி உலகுக்கு தங்களைப் பற்றிய ஒரு பிம்பத்தை வெளிப்படுத்துவதற்காக இந்தப் பூந்தொட்டியை அவர்கள் உபயோகித்தனர்.

இந்தப் பூந்தொட்டி இருப்பதனால் அந்தக் கார் எந்த வகையிலும் வேகமாகச் செல்லப் போவதில்லை. ஆனால் அது இருப்பதனால் வண்டியை வாங்கியவர் அதைப் பயன்படுத்துவதில் ஒரு மகிழ்ச்சியையும் தனிப்பட்ட நெருக்கத்தையும் உணர்கிறார். தனது ஆளுமையை தான் பயன்படுத்தும் பொருளிலும் ஏற்றிப் பார்க்க ஒரு வாய்ப்பு கிடைத்ததாக உணர்கிறார். இதுவே ஒரு பொருளின் வெற்றிக்கு குறிப்பிடத்தக்க காரணமாகிறது. மார்க்கெட்டிங்கில் இதைப் போன்ற அம்சங்களை பூந்தொட்டி அம்சங்கள் (bud vase features) என்றே சொல்வதுண்டு. பொருளின் பிரதான நோக்கத்திலிருந்து மாறுபட்டு, பொருளைப் பற்றிய நேர்மறை உணர்வுகளை (positive feelings) வாடிக்கையாளரின் மனதில் உருவாக்கி, அவரது ரசனைகளையும் ஆளுமையையும் வெளிப்படுத்த உதவுகிற அம்சங்களே இத்தகைய பூந்தொட்டி அம்சங்களாகும்.

இத்தகைய அம்சங்களை நாம் வேறு பொருட்களிலும் காணலாம். கணினியின் திரையில் ஒரு புகைப்படத்தை வைத்துக் கொள்ள முடிவதனால் அந்தக் கணினியின் பயன் எந்த வகையிலும் அதிகரிப்பதில்லை. ஆனாலும் தனது குடும்பத்தாரின் புகைப்படத்தை அங்கு வைக்கின்ற வாய்ப்புக் கிடைக்கும் வாடிக்கையாளருக்கு அதைப் பார்க்கையில் ஒரு மகிழ்ச்சியும் புத்துணர்ச்சியும் கிடைக்கிறது. வின் ஆம்ப் (Win Amp) என்கிற பாடல் மென்பொருளுக்கு நாம் விரும்பும் வகையில் தோல்களை (skins) மாற்றிக் கொள்ள முடிவது மிகப் பெரும் வரவேற்பைப் பெற்ற அம்சமாகும். ஆயிரக்கணக்கில் இத்தகைய தோல்கள் இன்று கிடைக்கின்றன. மிக தனித்துவப்படுத்தப்பட்ட (highly personalised) ஒரு மென்பொருளாக இன்று அதுவே விளங்குகிறது. பயனாளரின் ஆளுமையை (அவர் இன்னாரின் ரசிகர், இன்ன பாணி இசையின் ரசிகர் போன்றவை) எளிதில் வெளிப்படுத்தவும் அது உதவுகிறது.

இத்தகைய அம்சங்களை நமது பொருளிலே வழங்குவதன் மூலம் வாடிக்கையாளர்களின் மனதில் அதற்கென ஒரு இடத்தை அமைத்து அதிகபட்ச வெற்றியை ஈட்ட முடியும்.

நன்றி: Signal vs Noise