தொலைபேசி மார்க்கெட்டிங்கிலிருந்து தப்பிக்க சில வழிகள்

முன் குறிப்பு: என் தொழில் தர்மத்துக்கு (??) விரோதமான இந்தப் பதிவை இங்கு இடுவது பற்றிக் கொஞ்சம் யோசிச்சேன். அப்புறம், நம்ம வாசகர்கள் இதையெல்லாம் சீரியஸா எடுத்துக்கிட்டு, சொல்லியிருக்கிற மாதிரியெல்லாம் செஞ்சு தொலைக்க மாட்டாங்க-ங்கிற ஒரு அசட்டு தைரியத்தில இடுகிறேன்.

1. "ஹலோ சார், நான் --- வங்கியில இருந்து பேசறேன். உங்களுக்கு அம்பதாயிரம் ரூபாய் பர்ஸனல் லோன் குடுக்கிறதா வங்கியில முடிவு பண்ணியிருக்கோம்."

"ஆமா, உங்க ஃபோனத் தான் எதிர்பார்த்துக்கிட்டிருந்தேன். இந்த ஊர்ல ஏகப்பட்ட கடன். தினமும் கடன்காரங்க வீட்டு வாசல்ல வந்து நாறடிக்கிறாங்க. நீங்க உங்க புது லோனைக் குடுத்தவுடனே தான் வேற ஊருக்கு குடும்பத்தோட ஓடிப் போகலாம்-னு இருக்கேன். பணத்தை எங்க வந்து வாங்கிக்கட்டும்? உங்க உதவிய மறக்கவே மாட்டேங்க. எனக்குப் பொறக்கப் போற குழந்தைக்குக் கூட உங்க பேரையே வச்சுடறேன்."

_o0o_

2. "ஹலோ சார், நான் XYZ கம்பெனியில இருந்து பேசறேன். எப்படி இருக்கிறீங்க?"

(ஜனகராஜ் குரலில்) "என் தங்கச்சிய நாய் கடிச்சிடுச்சுப்பா..!!"

"சார், நான் வந்து.."

(ஜனகராஜ் குரலில்) "என் தங்கச்சிய நாய் கடிச்சிடுச்சுப்பா..!!"

"அதாவது சார்.."

(ஜனகராஜ் குரலில்) "என் தங்கச்சிய நாய் கடிச்சிடுச்சுப்பா..!!"

டொக்.

_o0o_

3. "மேடம், நான் மேஜிக் க்ளீனர்ஸ் கம்பெனியில இருந்து பேசறேன். எந்தத் துணியில இருந்தும் எல்லாவிதமான கறைகளையும் நீக்கக் கூடிய எங்களோட அதிசய பொருட்கள் பத்தி உங்க கிட்ட பேச விரும்பறேன்."

"கூப்பிட்டதுக்கு ரொம்ப நன்றிங்க. என் பிரச்சினையை நீங்க தான் தீர்த்து வைக்க முடியும். ரத்தக் கறையை நீக்க உங்க கிட்ட பொருள் இருக்கா? மனுஷ ரத்தம்ங்க. என்னுதில்ல. நானும் சோப்பெல்லாம் போட்டு துவைச்சு அலசிப் பார்த்துட்டேன், போய்த் தொலைய மாட்டேங்குது. போலீஸ்ல மாட்டிக்குவேனோ-ன்னு ஒரே கவலையா இருக்கு."

_o0o_

4. "சார்! நான் XYZ கம்பெனியில இருந்து பேசறேன். எங்க கம்பெனி பொருட்கள் பத்தி பேசணும்."

(ரிஸீவரைக் கீழே வைத்து, சத்தமாக, கதறலான குரலில்) "ஆண்டவனே! இன்னும் என் பாவமெல்லாம் தீரலையா? இன்னும் எனக்கு தண்டனை முடியலையா? இவங்க கிட்ட எல்லாம் பேசித்தான் என் பாவத்தையெல்லாம் நான் போக்கிக்கணுமா?"

_o0o_

5. "சார், நான் XYZ கம்பெனியில இருந்து ..........................."

"அடடா, நான் இப்போ கொஞ்சம் வேலையா இருக்கேனே. நீங்க ஒண்ணு பண்ணுங்க. உங்க வீட்டு நம்பர் குடுங்க. என் வேலையெல்லாம் முடிச்சுட்டு நானே உங்களுக்கு ஃபோன் பண்றேன். நீங்க என்ன சொல்லணுமோ அதைச் சொல்லலாம்."

"ஸாரி சார், வீட்டு நம்பரெல்லாம் நாங்க குடுக்கறதில்லை சார்."

"ஆமா, வீட்டில தேவையில்லாம யாராவது ஃபோன் பண்ணித் தொல்லை குடுத்தா அது நல்லா இருக்காதில்ல?"

"ஆமா சார்"

"எங்களுக்கும் அப்படித்தான்..!!"

_o0o_

6. "சார், நான் XYZ கம்பெனியில இருந்து ..........................."

"கொஞ்சம் மெதுவா பேச முடியுமா? அது வேற ஒண்ணுமில்ல, என் கிட்ட ஒரு கெட்ட பழக்கம். யார் கிட்ட ஃபோன்ல பேசினாலும் அதுக்கு ஒரு எழுத்துபூர்வமான ரெக்கார்ட் வச்சுப்பேன். நீங்க ஒவ்வொரு வார்த்தையா சொல்லுங்க. நான் எழுதிக்கிறேன். சொல்லுங்க."

"சார்"

"சார்.. ம்ம். எழுதிட்டேன், அடுத்து?"

"நான்"

"நான்.. ம்ம், அப்புறம்?"

டொக்.

தனிநபர் மார்க்கெட்டிங் - ஒரு சிறந்த உதாரணம்

முந்தைய பதிவொன்றில் எதையெல்லாம் மார்க்கெட்டிங் செய்ய முடியும் என்று பார்த்திருக்கிறோம். தனிநபர்களை மார்க்கெட்டிங் செய்யலாம் என்று அதில் பார்த்தோம். இதற்கு ஒரு சிறந்த உதாரணம் ஒன்று இன்று என் கண்களில் தட்டுப் பட்டது.

"நான் கூகிள் நிறுவனத்தில் பணிபுரிய விரும்புகிறேன்" (I want to work for google - http://www.iwanttoworkforgoogle.com) என்ற பெயரில் ஒரு வலைத்தளம் அமைத்து கூகிள் நிறுவனத்திடம் தன்னை மார்க்கெட்டிங் செய்ய முயன்றிருக்கிறார் பிரயன் டேவிஸ் (Brian Davis) என்ற ஆசாமி ஒருத்தர். (தளத்தைப் பார்வையிட ஃப்ளாஷ் தேவைப்படும்)

தளத்தை நான்காகப் பிரித்திருக்கிறார்: ஏன் (கூகிளில் பணியாற்ற விரும்புகிறார்), (தன்னிடம் உள்ள) யோசனைகள், (முந்தைய தள வேலைகள்) பார்வைக்கு மற்றும் தொடர்பு.

கூகிளில் பணியாற்ற விரும்புவதற்கு அவர் கூறும் காரணம் புதுமையாக இருக்கிறது. கூகிள் ஒரு நான்காம் கியர் நிறுவனமாக இருப்பதனாலும், தானும் ஒரு நான்காம் கியர் சிந்தனை (Fourth gear thinking) மிக்க நபர் என்பதாலும் அந்நிறுவனத்தில் பணிபுரிய விரும்புகிறாராம். அது என்ன நான்காம் கியர் சிந்தனை? அதற்கும் பதில் வைத்திருக்கிறார் மனிதர்:

முதல் கியர் சிந்தனை: ஒரு பிரச்சினைக்கு எப்படி விடை காண்பது என்று சிந்தித்து விடையைக் காண முயல்வது.

இரண்டாம் கியர் சிந்தனை: ஒரு பிரச்சினைக்கு மற்றவர்கள் எப்படி விடை கண்டுள்ளார்கள் என அறிந்து அதை அப்படியே காப்பியடிப்பது.

மூன்றாம் கியர் சிந்தனை: மற்றவர்களை விட வேகமாக ஒரு பிரச்சினைக்கு விடை காண முயல்வது.

நான்காம் கியர் சிந்தனை: ஒவ்வொரு பிரச்சினைக்கும் அதன் விடைக்கும் ஒரு லாஜிக்கல் தொடர்பு உண்டு. அந்த லாஜிக்கல் தொடர்பினை இனங்கண்டு விடை காண முயல்வது. இதுவே தரத்தில் உயர்ந்த விடையாக இருக்கும் என்பது அவரது கருத்து.

கூகிளுக்காக தான் வைத்திருப்பதாக அவர் சொல்லியிருக்கும் ஒரு யோசனை என்னை மிகவும் கவர்ந்தது. இதற்கு கூகிள் ஸ்மார்ட் கார்டு (Google Smart Card) என்று பெயர் வைத்திருக்கிறார். நமது வழக்கமான கிரெடிட் கார்டு போன்றதே இதுவும். ஒரு பெரிய அங்காடிக்குள் நீங்கள் நுழைந்தவுடன் இந்த கார்டினை இதற்கென இருக்கும் கணிப்பொறியில் தேய்த்தவுடன் அந்த அங்காடியில் எந்தெந்த பொருட்கள் மிகக் குறைந்த சலுகை விலையில் கிடைக்கிறது என்பதை அது தேடிக் கண்டுபிடித்துப் பட்டியலிட்டுக் காட்டிவிடும். அந்தப் பொருட்களை மட்டும் வாங்கி விட்டு நாம் நடையைக் கட்டலாம். இந்தக் கார்டிலேயே டூ-இன்-ஒன் ஆக கிரெடிட் கார்டின் பயன்பாட்டையும் ஏற்றி விட்டால் இன்னும் நன்றாக இருக்கும். பணத்துக்கு மதிப்பு (Value for Money) என்ற கொள்கையின் அடிப்படையில் இயங்கும் வாடிக்கையாளர்கள் பலரும் இத்தகைய ஒரு கார்டினை விரும்புவார்கள் என்பதே எனது கருத்து.

மனிதர் இது வரைக்கும் செய்துள்ள வலைத்தள வேலைகளையும் பட்டியலிட்டிருக்கிறார். ஒரு நிதி நிறுவனத்துக்காக (Financial Finesse) இவர் அமைத்திருக்கும் ஃப்ளாஷ் விளம்பரங்கள் நன்றாகவே இருக்கின்றன.

இப்படியும் சில மனிதர்கள்.

பிராண்ட் திருமண ஒப்பந்தம்

கொஞ்ச பதிவுகளுக்கு முன்னால், லவ் மார்க்ஸ் என்பதைப் பற்றிச் சொல்லியிருந்தேன். வாடிக்கையாளர்கள் ஒரு பிராண்டின் மீது காதல் கொள்ளுமளவிற்கு ஒரு விசுவாசமான உறவுமுறையை ஏற்படுத்திக் கொள்ளும் போது அது பிராண்ட் என்ற நிலையைக் கடந்து லவ்மார்க் ஆகி விடும் என்று பார்த்தோம்.

காதலின் அடுத்த கட்டம் திருமணம் தானே?

பெரும்பான்மையான கிறித்துவத் திருமணங்களின் போது வாக்குறுதிகளை மாற்றிக் கொள்வது (exchange of vows) என்று ஒரு சடங்கு உண்டு. மணமகனும் மணப்பெண்ணும் தாங்கள் எதிர்நோக்கும் மண வாழ்வு குறித்து சில ஒப்பந்தங்களை இறைவன் முன்னிலையில் செய்து கொள்வதே அது.

ஒரு வாடிக்கையாளரும் ஒரு பிராண்டும் திருமணம் செய்து கொள்ளும் போது இந்த சடங்கு எப்படி நடைபெறும் என்பது குறித்து ஆங்கிலத்தில் ஒரு கற்பனை ஒப்பந்தம் கீழே: (ஆங்கிலத்திலேயே படிக்கும் போது சுவையாக இருப்பதால் மொழி மாற்றம் செய்யவில்லை நான், மன்னிக்கவும்.)

We are gathered here today to unite this customer, {வாடிக்கையாளர் பெயர்}, with this brand, {பிராண்டின் பெயர்}, in the bonds of a true reciprocal relationship known as brand loyalty matrimony.

If any competing brand or any customer evangelist can show just cause why these two should not be joined, then let them speak now or forever lose the business opportunity.

{வாடிக்கையாளர் பெயர்}, will you take this brand as your partner to engage in commerce with in the holy estate of brand loyalty matrimony? Will you evangelize her, respect her, provide customer feedback to her in good experiences and in bad experiences; forsaking all others, be true to her as long as you both shall live? (I will.)

{பிராண்டின் பெயர்}, will you take this customer as your partner to engage in commerce with in the holy estate of brand loyalty matrimony? Will you respect her, deliver upon all promises to her, be truthful to her and reward her with the highest quality goods or services and the best customer service in good economic times and in bad economic times as long as you both shall live? (I will.)

Please join hands and repeat after me (முதலில் வாடிக்கையாளர் சொல்வது).

I, {வாடிக்கையாளர் பெயர்}, take {பிராண்டின் பெயர்},as my loyal brand of choice to buy from and to evangelize for from this day forward until bankruptcy do us part.

I, {பிராண்டின் பெயர்}, take {வாடிக்கையாளர் பெயர்}, as a loyal customer to help them actualize their aspirations and to deliver the greatest value to from this day forward until bankruptcy do us part.

By the authority vested in me from the writings of Tamilmarketing, I pronounce this consumer and this brand to be loyal to one another.

You may now kiss competitors good-bye.

நன்றி: Brand Autopsy ஆங்கில வலைப்பதிவு

நூறு சதம் தள்ளுபடி..!!

இந்தியாவின் முன்னணி இணையவழி விற்பனைக் கூடமான ஃபேப் மால் (FabMall), ஒரு சலுகையை அறிவித்திருக்கிறது. இதன் படி, ரூ. 120 பெறுமானமுள்ள, தோலினால் செய்யப்பட்ட மொபைல் தொலைபேசிப் பை (Mobile pouch) ஒன்று இவர்களால் நூறு சதவீதத் தள்ளுபடியுடன் அளிக்கப்படுகிறது. போதாக்குறைக்கு ரூ. 30 பெறுமானமுள்ள ஒரு தோல் சாவிக்கொத்துச் சங்கிலியும் (leather key chain) இலவசமாக அளிக்கப்படுகிறது. அனுப்பி வைக்கின்ற கட்டணமாக (shipping charges) ரூ. 50 மட்டும் அனுப்பினால் போதும் என்று அறிவிக்கிறார்கள். உற்பத்தியாளர்களிடம் செய்து கொண்டுள்ள நீண்ட கால ஒப்பந்தத்தினால் இத்தகைய சலுகையை அளிக்க முடிவதாக இந்நிறுவனம் கூறுகிறது.

இந்த விநோதமான சலுகையை இங்கு காணலாம். சலுகைக் காலம் முடிந்தவுடன் இந்தப் பக்கம் காணாமல் போகக்கூடும் என்பதால் அதன் பட வடிவத்தையும் கீழே தந்திருக்கிறேன்.


படம்-8: ஃபேப்மால் நிறுவனத்தின் விநோத சலுகை
(குறிப்பு: படத்தின் மீது சுட்டினால் புதிய பக்கத்தில் படத்தினைப் பெரிதாகக் காணலாம்)


இவர்களால் இப்படி எப்படிச் செய்ய முடியும் என்று எனக்கு ரொம்பவும் புரியவில்லை. யாருக்காவது ஏதாவது புரிந்தால் கமெண்ட்டில் எழுதி அறிவு ஒளியை ஏற்றி வையுங்கள்.

பிராண்ட் நீட்டிப்பு (Brand Extension)

ஏற்கெனவே ஒரு குறிப்பிட்ட சந்தையில் வாடிக்கையாளர்கள் மனதில் இடம் பிடித்துள்ள பிராண்டின் பெயரைப் பயன்படுத்தி புதிய சந்தைகளில் புதிய பொருளினை அறிமுகம் செய்வதே பிராண்ட் நீட்டிப்பு (Brand Extension) என்றழைக்கப்படுகிறது.

இங்கு புதிய சந்தை என்று நான் குறிப்பிடுவது பல வகைப்படும். அதைப் பொருத்தே, பிராண்ட் நீட்டிப்பும் பல வகைப்படும்.

1. ஏற்கெனவே வெற்றி பெற்ற சந்தையின் இன்னும் வரையறுக்கப்பட்ட ஒரு உள்சந்தைக்காக (more defined/refined inner segment of the original market) புதிய பொருளை வழங்குவது. உதாரணமாக, கோக கோலா நிறுவனம், டயட் கோக் (Diet Coke) என்ற பானத்தை அறிமுகம் செய்தது. கோக கோலா அருந்துபவர்கள், அல்லது பொதுவாக கோலா வகைப் பானங்களை அருந்துபவர்களை உள்ளடக்கிய ஒரு சந்தையில், தங்கள் உடல் பருமன் மற்றும் உடல் நலம் குறித்த அக்கறை மிகுந்த ஒரு உள்சந்தைக்காக அறிமுகம் செய்யப்பட்ட புதிய பொருள் இது. இதற்கு தாய் பிராண்டின் (mother brand) பெயரே பயன்படுத்தப்பட்டது. இது ஒரு வகை நீட்டிப்பு. (சில சமயம் இந்த வகை நீட்டிப்பில் தாய் பிராண்டின் பெயர் பயன்படுத்தப்பட மாட்டாது. உதாரணம், இந்தியாவில் டைட்டன் கைக்கடிகார நிறுவனம் (Titan watches), குறைந்த விலைக் கைக்கடிகாரங்களை வழங்கிய போது சொனாட்டா (Sonata) என்ற பெயரில் வழங்கியது. இது குறித்துப் பின்னால் காண்போம்.)

2. ஏற்கெனவே வெற்றி பெற்றுள்ள சந்தைக்கு ஓரளவுக்குத் தொடர்புடைய புதிய சந்தையில் (related market) புதிய பொருளை வழங்குவது. உதாரணமாக, இந்தியாவில் ஆக்ஸ் டியோடரண்ட் (Axe Deodorant) என்பது உடல் துர்நாற்றம் தவிர்க்கப் பயன்படும் ஒரு பொருள். இதற்குத் தொடர்புடைய டால்கம் பவுடர் (talcum powder) சந்தையில் அது நுழைந்த போது புதிய பொருளுக்கு ஆக்ஸ் டால்கம் பவுடர் (Axe Talcum Powder) என்று தாய் பிராண்டின் பெயரே பயன்படுத்தப்பட்டது. இது ஒரு வகை நீட்டிப்பு.

3. ஏற்கெனவே வெற்றி பெற்ற சந்தைக்கு சற்றும் தொடர்பு இல்லாத சந்தையில் (unrelated market) புதிய பொருளை வழங்குவது. இது இருவகைப்படும். சில சமயம் இந்த புதிய பொருளுக்கு தாய் பிராண்டின் பெயரே பயன்படுத்தப்படும். உதாரணத்துக்கு, யமஹா (Yamaha) என்னும் இருசக்கர பைக் உற்பத்தி நிறுவனம், புதிதாக பியானோ (piano), கீ போர்ட் (key board) போன்ற இசைக்கருவிகள் உற்பத்தி செய்யும் தொழிலில் களமிறங்கிய போது தாய் பிராண்டின் பெயராலேயே விற்பனை செய்தது. இது பிராண்ட் இழுத்தல் (Brand Stretch) அல்லது Line Extension என்றும் அறியப்படும். சில சமயம், இவ்வாறு தொடர்பில்லாத புதிய சந்தையில் வழங்கப்படும் புதிய பொருளுக்கு தாய் பிராண்டின் பெயர் இல்லாமல் புதிய பெயர் பயன்படுத்தப்படும். அது நமது பிராண்ட் குறித்த விவாதத்தில் அவசியமற்றது என்பதால் விடுவோம்.

4. புவியியல் ரீதியாக இதுவரை இயங்கி வந்த சந்தைகளுக்கு அப்பால் புதிய மாகாணங்கள், புதிய நாடுகள் என்று நமது தொழில் விரிவடையும் போது, அந்தப் புதிய சந்தைகளிலும் தாய் பிராண்டின் பெயரே பயன்படுத்தப்படும். உதாரணமாக யூனிலீவர் (Unilever) நிறுவனம், இந்தியாவில் புதிய சோப் ஒன்றை அறிமுகம் செய்த போது லைஃப் பாய் (Lifebuoy) என்று ஐரோப்பாவில் வழங்கிய அதே பெயரிலேயே இந்தியாவிலும் வழங்கினர். இது புவியியல் நீட்டிப்பு (geographic extension) என்றும் அறியப்படும்.

இவ்வகையிலான பிராண்ட் நீட்டிப்புகளால் என்ன பயன் என்று நீங்கள் யோசிக்கக்கூடும். பயன்களாவன:
- வாடிக்கையாளர்கள், தம் மனதில் இடம்பிடித்துள்ள பிராண்டின் தரத்தைப் புதிய பொருளோடும் சேர்த்துப் பார்ப்பார்கள். அவர்களது நம்பிக்கையை எளிதில் கவர இயலும்.
- பொருளின் விநியோகஸ்தர்கள், புதிய பொருளின் விநியோகத்தில் அதிக இடர்கள் (risks)இருக்காது என்று நம்பக் கூடும். புதிய பொருளை வரவேற்பதில் ஆர்வம் காட்டுவார்கள்.
- புதிய பொருளின் விளம்பரச் செலவு குறையும்.
- வாடிக்கையாளர்கள் மத்தியில் பரவலான அறிமுகமும், பயன்படுத்திப் பார்க்க ஆர்வமும் (willingness to trial or sample) எளிதாக ஏற்படக் கூடும்.

இவற்றால் பிராண்ட் நீட்டிப்பு என்பது இன்று உலகளாவிய அளவில் மிகுந்த கவனத்தைப் பெற்றுள்ளது. உலகில் இன்றைய தேதியில் புதிதாக அறிமுகப் படுத்தப்படும் பொருட்களில் பாதிக்கும் மேல் பிராண்ட் நீட்டிப்புகளே.

இவை மட்டுமில்லாமல், கூடுதலான பொருட்களை ஒரே பிராண்டின் கீழ் வைத்திருப்பது வேறு சில வழிகளிலும் நன்மை பயக்கக் கூடும்:
- அதிக வாடிக்கையாளர்கள்
- ஒரே வாடிக்கையாளரிடம் அதிக பொருட்களின் விற்பனை
- அதிக மார்க்கெட்டிங் வினைத் திறன்
- பொருளின் அறிமுகக் காலத்திலேயே அதிக லாபம் (பொதுவாக புதிய பொருளின் அறிமுகக் கட்டத்தில் லாபம் ஈட்டுவது என்பது கடினமானது)

பிராண்ட் நீட்டிப்பினால் எல்லாமே சுகம், சிக்கல்களே கிடையாது என்றும் சொல்லிவிட முடியாது. சில சவால்களும் உண்டு. அவற்றில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்:
- தாய் பிராண்டுக்கும் புதிய பொருளுக்கும் இடையில் ஏற்படக் கூடிய விற்பனைப் போட்டி. கோக கோலா குடித்துக் கொண்டிருந்த பெரும்பான்மையானோர் டயட் கோக்கை நோக்கிப் போக ஆரம்பித்து விட்டால் கோக கோலாவின் விற்பனை கணிசமாக அடி வாங்கும் என்பதை நினைவில் வைத்து, புதிய பொருளை மிக அதிகமாக வேறுபடுத்திக் காட்ட முயற்சி செய்ய வேண்டும். (higher differentiation - இந்த differentiation குறித்து விரைவில் காண்போம்)
- பிராண்ட் நீட்டிப்பு மூலம் தாய் பிராண்டின் அந்தஸ்து (image) குறையாமல் பார்த்துக் கொள்வது. இந்த காரணத்தினாலேயே டைட்டன் நிறுவனம், தனது புதிய பொருளை சொனாட்டா என்ற பெயரில் வழங்கியது. ஏனென்றால் டைட்டனுக்கு இருக்கும் அந்தஸ்து ஓரளவு விலையுயர்ந்த கைக்கடிகாரம் என்பதே. விலை குறைந்த கைக்கடிகாரங்களையும் அதே பெயரில் விற்பனை செய்தால் அதன் அந்தஸ்து நீர்த்துப் போகக் கூடும் என்பது கவனத்தில் கொள்ளத் தக்கது.
- ஒரு வேளை பிராண்ட் நீட்டிப்பு வேலைக்காகாமல் புதிய பொருள் தோல்வியடைந்தால் அதன் பாதிப்புகள் தாய் பிராண்டின் மீது இருக்கும்.

விர்ஜின் (virgin) என்ற பிராண்ட் இன்றைய தேதியில் மிகவும் அதிகமான அளவு நீட்டிப்பு செய்யப்பட்ட ஒன்று என்று கூறலாம். விமானப் போக்குவரத்து, இசைத்தட்டுக்கள், மது பானங்கள், விடுதிகள், கேளிக்கை அரங்குகள், புத்தகங்கள், மேனி அலங்காரப் பொருட்கள், திருமண சேவைகள், இணையத் தொடர்பு, உடல் நலக் கூடங்கள் என்று இவர்கள் கால் வைக்காத தொழில்களே இல்லை எனலாம். இவை அனைத்தையும் விர்ஜின் என்ற ஒரே பிராண்டின் கீழ் நடத்தி வருவது நமது கவனத்தைக் கவரும் அம்சமாகும். இதன் அதிபர் ரிச்சர்ட் பிரான்சன் (Richard Branson) ஆவார். அவரது மரபை மீறின பழக்க வழக்கங்களுக்காக மிகவும் புகழ் பெற்றவர். இந்நிறுவனம், புதிய தொழில் ஒன்றைத் தேர்வு செய்யும் போது அது தங்கள் நிறுவனத்தின் அடிப்படை மதிப்புகளுக்கு (Basic Values) ஒத்து வருமா என்று சோதிக்கிறார்கள். ஐந்து விதிகள் வைத்திருக்கிறார்கள். இந்த ஐந்து விதிகளையும் திருப்தி செய்கின்ற தொழிலில் மட்டுமே அவர்கள் இறங்குவார்கள். அந்த ஐந்து விதிகள்:
1. உயர்ந்த தரம் மிக்க பொருளாக விளங்குமா? (Best quality)
2. புதுமையான பொருளாக இருக்குமா? (Innovative)
3. பணத்திற்கு முழு மதிப்பு கிடைக்குமா? (Value for money)
4. தற்போது சந்தையில் கிடைக்கும் பொருள்களிலிருந்து ஏதாவது ஒரு வகையில் மாறுபட்டு இருக்குமா? (Different from existing alternatives)
5. இதன் மூலம் நக்கல் மிக்கதொரு மகிழ்ச்சியை ஏற்படுத்த முடியுமா? (A sense of cheeky fun)

இந்த ஐந்து விதிகளுக்கும் உகந்த தொழில் என்றால் விர்ஜின் களம் புகுந்து பட்டையைக் கிளப்பி விடும்!

தமிழக அமைச்சர் "மார்க்கெட்டிங்" குறித்துக் கூறுவது

அண்மையில் தமிழக அரசு, ஆவின் மூலம் கொள்முதல் செய்யப்படும் பாலின் விலையில் ஒரு ரூபாய் அதிகரித்துள்ளது. (ஆனால், நுகர்வோருக்கான விறபனை விலையை உயர்த்தவில்லை.)

இது குறித்து ஜூனியர் விகடனில் வெளியாகியுள்ள கட்டுரை ஒன்றில், இதனால் ஆவினுக்குப் பெரும் நஷ்டம் ஏற்படக் கூடும் என்றும், இதனால் கடைசியில் பால் உற்பத்தியாளர்கள் தான் பாதிக்கப்படுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

சரி, இதெல்லாம் இப்ப என்னாத்துக்கு என்று கேட்கிறீர்களா? இது குறித்து தமிழக பால் வளத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் அவர்களைக் கேட்ட போது அவர் பின் வருமாறு கூறியுள்ளார்:

"அரசு அறிவித்திருக்கும் கூடுதல் விலையை நிச்சயம் உற்பத்தியாளர்களுக்குக் கொடுப்போம். இதனால் ஏற்படும் செலவினத்தை சமாளிக்க புதிய மார்க்கெட்டிங் முறைகளைக் கையான்டு கொண்டிருக்கிறோம். கடந்த காலங்களில் ஆவின் மார்க்கெட்டிங் முறைகளில் ஏகப்பட்ட குறைகள் இருந்தன. அவை களையப்பட்டு விட்டன. உற்பத்தியாளர் நலன், நுகர்வோர் நலன் இரண்டுமே எங்களுக்கு இரண்டு கண்கள் போல."


அமைச்சர்கள் கூட நம்ம வலைப்பதிவைத் தவறாமல் படிக்கிறார்கள் போல இருக்கு. :-) :-)

ஹோண்டா அக்கார்ட் (Honda Accord) காரின் புதிய விளம்பரம்

அபூர்வ சகோதரர்கள் படத்தில் "அப்பு" கமல், ஒரு சிறிய கோலி குண்டை வைத்து தனது முதல் எதிரியைக் கொல்லும் காட்சியின் நேர்த்தியை யாரும் மறந்திருக்க முடியாது. அந்த கோலி குண்டை அவர் ஒரு இடத்தில் வைத்து உருட்ட, அது சில லீவர்களை இழுத்து, ஒரு சைக்கிள் சக்கரத்தை உருட்டி, இன்ன பிற சாகசங்கள் புரிந்து அம்பு ஒன்றைப் புறப்படச் செய்து ஆள் நோக்கிப் பாய்ந்து சென்று கொல்லும். பெங்களூரில் விஸ்வேஸ்வரய்யா அறிவியல் காட்சியகத்திலும் (Science and Technological Museum) இதே போன்ற ஒரு காட்சிப்பொருள் (display) உண்டு.

இப்போது இது விளம்பரத் துறைக்கு வந்திருக்கிறது. ஹோண்டா நிறுவனம், தனது அக்கார்ட் (Accord) காருக்கான விளம்பரத்தில் காரின் அனைத்துப் பாகங்களையும் பயன்படுத்தி சில நூறு மீட்டர் தூரத்திற்கான ஒரு சாகசத்தை நிகழ்த்திக் காட்டியிருக்கிறார்கள். எந்த கணினி அனிமேஷன் ஜிகிடி வேலையும் இல்லாமல் முழுக்க முழுக்க நிஜமான சாகசம்.

விளம்பரத்தை இங்கு காணலாம் (ஃப்ளாஷ் தேவைப்படும்.)

(நடுவில் சில நேரம் தடங்கலாகி நிற்கலாம், முழுமையாக லோடு ஆகும் வரை காத்திருந்து அதன் பிறகு தடங்கலின்றிப் பாருங்கள். ஒலியுடன் பார்க்க வேண்டிய விளம்பரம்.)

மேலதிக விளக்கங்களுடன் நிறுவனத்தின் வலைத்தளத்திலும் காணலாம்.

6.2 மில்லியன் டாலர்கள் செலவும், 606 டேக்குகளும் தேவைப்பட்டிருக்கிரது இந்த அற்புதமான விளம்பரத்தை உருவாக்க.

606 டேக்குகள்!!

விளம்பரத்தில் மனிதர்கள் யாருமே கிடையாது. எனவே அமெரிக்காவிலிருந்து ஜப்பான் வரைக்கும் எந்த நாட்டிலும் மாற்றமின்றிக் காட்டலாம். (கடைசியில் வரும் ஒரு வரிக் குரல் செய்தியை மட்டும் டப்பிங்கில் மாற்றி.)

லண்டன் நகரைச் சேர்ந்த வீடன் & கென்னடி (Wieden & Kennedy) விளம்பர நிறுவனம் மூலம், பாரிஸ் நகர ஸ்டுடியோ ஒன்றில் ஆண்டாய்ன் பார்து ஜாக் (Antoine Bardou-Jacquet) என்பவரின் இயக்கத்தில் சில மாதங்களின் உழைப்பில் உருவாகியிருக்கும் இந்த விளம்பரத்தை முதலில் ஹோண்டா நிறுவன அதிகாரிகளிடம் காண்பித்த போது, "நல்லாத்தான் இருக்கு, இந்தக் காலத்தில ட்ரிக் ஃபோட்டொகிராஃபி ரொம்பத்தான் முன்னேறிடுச்சு." என்றிருக்கிறார்கள். விளம்பரம் மொத்தமும் ஒரே ஷாட், ஒரே டேக்கிலான உண்மைக் காட்சி என்று சொல்லப்பட்டதும் அவர்களே மிரண்டு போயிருக்கிறார்கள்.

ரியல் மாட்ரிட் (Real Madrid) மற்றும் மான்செஸ்டர் யுனைட்டட் (Manchester United) அணிகளுக்கிடையிலான கால்பந்தாட்டப் போட்டியின் இடையில் முதன்முதலாக இந்த விளம்பரம் காட்டப் பட்டிருக்கிறது. பார்த்த ரசிகர் ஒருவரின் கருத்து: "ஒரு கோல் போஸ்ட்டில் இருந்து காலபந்து ஒன்றைத் திறமையான வீரர் ஒருவர் கடத்திக் கொண்டு போய் ஒவ்வொரு எதிரணி ஆட்டக்காரராய் ஏமாற்றி வீழ்த்தி மறு கோல் போஸ்ட்டுக்குக் கொண்டு சென்று கோல்கீப்பரையும் வீழ்த்தி கோல் அடித்தது போன்ற பிரமிப்பான சாகசத்தைப் பார்த்த உணர்வை இந்த விளம்பரம் எனக்கு ஏற்படுத்தியிருக்கிறது.!!"

அவர் சொல்வதில் உண்மை இல்லாமல் இல்லை. ஒரு காட்சியில் சில டயர்கள், அவற்றுக்குள்ளே செய்யப்பட்ட சில நுணுக்கமான எடை கூட்டல்களினால் புவியீர்ப்பு சக்தியை மீறி மேலேறிச் செல்லுகின்றன. இன்னொரு காட்சியில் கம்பியொன்றில் தொங்க விடப்பட்டுள்ள வைப்பர் கண்ணாடிகள், பாலே நடனத்தின் நேர்த்தியுடன் இந்தப் பக்கமிருந்து அந்தப் பக்கம் காற்றில் பறந்து போகின்றன. இறுதிக் காட்சியில் ஸ்டீரியோவின் இசைக்கு ஏற்ப ஸ்பீக்கர்களும் வூஃபர்களும் துள்ளிக் குத்திக்கின்றன. இப்படி அன்றாட இயற்பியலின் சகல சாத்தியக் கூறுகளையும் பயன்படுத்தி, புகுந்து விளையாடியிருக்கிறார்கள். ஹோண்டா நிறுவனத்தின் பிராண்டு செய்தியான "முழுமையான நம்பகமான கார்" என்பதை ஒட்டியும் இருக்கிறது என்பது கூடுதல் சிறப்பு.

விளம்பர உலகத்தின் வரலாறு காணாத ஒரு விளம்பரம் இது என்று சொன்னால் அது மிகையல்ல. சென்ற பதிவின் பின்னூட்டத்தில் குமரகுரு புலம்பியிருப்பதைப் போல் நல்ல சினிமா நட்சத்திரங்களை வைத்துக் கொண்டு சொதப்புகிறவர்களும் இருக்கிறார்கள். யாருமே இல்லாமல் ஒரு சின்ன கான்செப்டை எடுத்துக் கொண்டு பட்டையைக் கிளப்புபவர்களும் இருக்கிறார்கள்.

கிராமப்புற வாடிக்கையாளர்களின் நுண்மான் நுழைபுலம்

இந்திய கிராமப்புற வாடிக்கையாளர்களை எடுத்துக் கொண்டால், தங்கள் கற்பனைத் திறனை விரித்து அவர்கள் சில தயாரிப்புகளுக்குக் கண்டுபிடிக்கும் சில விநோதமான பயன்பாடுகள் (uses), இன்று வரை மார்க்கெட்டிங் உலகை வியப்பில் ஆழ்த்தியே வந்திருக்கின்றன. அவற்றுள் குறிப்பிடத்தக்க சில:

1. மாட்டு விற்பனைச் சந்தைகளின் போது எருமை மாடுகள் நன்கு பளபளவென்றும் கன்னங்கரேலென்று தெரிவதற்காக அவற்றின் உடல் முழுவதும் கோத்ரெஜ் தலைமுடிச் சாயம் (Godrej Hai Dye) பூசுகிறார்கள் சில வாடிக்கையாளர்கள்.

2. மாடுகள் கொழு கொழு வென்று வளர அவற்றுக்கு பருத்திக்கொட்டை, புண்ணாக்கு ஆகியவற்றுடன் ஹார்லிக்ஸ் (Horlicks) ஊட்டி வளர்க்கும் சில வாடிக்கையாளர்கள் உண்டு.

3. விவசாயப் பணிகளில் ஈடுபடுத்தப்படும் காளைகள் மற்றும் ஏனைய விலங்குகளின் தசைகளில் அயோடெக்ஸ் (Iodex) தடவி வலியைப் போக்க முயற்சிக்கிறார்கள் சில வாடிக்கையாளர்கள்.

4. இது தான் உச்சகட்டம்: பஞ்சாப் மாநில கிராமங்களில் திருவிழா மற்றும் வீட்டு விசேஷங்களின் போது அதிக அளவில் லஸ்ஸி (Lassi) பானம் தயாரிக்க அவர்கள் உபயோகப்படுத்துவது என்ன தெரியுமா? வாஷிங் மெஷின்களை!

அடங்க மாட்டேங்கறாங்கப்பா..!!

நகைச்சுவை மார்க்கெட்டிங் :-) :-)

ஹி.. ஹி.. இன்னிக்கு கொஞ்சம் டமாஸான மேட்டர்.

நம்ம சுவடு சங்கர் இருக்குறாப்பிலயே, அவரு தன்னோட வலப்பதிவுல ஆய்த எழுத்து படத்துக்கு விமர்சனம் போட்டுக்குறாரு. சைக்கிள் கேப்புல தன்னோட படத்தயும் கொஞ்சம் ஓட்டிக்குறாரு. அத்தாவது, படத்த சென்னையிலேயே ரொம்ப நல்ல தேட்டர்ல போய் பார்த்துக்குறாரு. அந்த நேரம் பார்த்து அவரோட கனவில நெதமும் வந்து டிஷ்டர்ப் பண்ற தேவதயும் வந்திருக்கு. சரி, மேட்டர் என்னமோ சூடு புடிக்கப் போவுதுன்னு பாத்தா, "அவ்ளோ தான் மேட்டர், நான் என் கும்பலோட படம் பாத்துட்டு வூட்டுக்குப் போனேன், அவங்க (மரியாத, மரியாத.!!) அவங்க கும்பலோட படம் பாத்துட்டு வூட்டுக்குப் போயிட்டாங்க." அப்படின்னு பொலம்பிக்குறாரு. அவருக்கு எதுனாச்சும் செய்யணும்னு நமக்கு ஒரே ஃபீலிங்காப் போச்சுப்பா. நம்ம ரவியா அண்ணாச்சி வேற நீ எதனா நம்ம சங்கருக்கு அட்வைஸ் குட்த்து தேத்தி உடுன்னு கேட்டிருந்தாரு. அதனால இன்னிக்கு மார்க்கெட்டிங் மூலமா அவருக்கு நாம் எதுனா எல்ப் பண்ண முடியுமான்னு பார்க்கப் போறம்.

இப்ப வந்து, அவரு தேட்டர்ல வச்சு அந்த தேவதயப் பாக்குறாரு. ஒடனே அவங்க பக்கத்துல போயி, "அலோ, வணுக்கம். நான் தான் சங்கரு. நானு ஒரு நல்லவன். வல்லவன். நானு உங்க மேல ஒரே ஃபீலிங்கா இருக்கன். என்னைக் கண்ணாலம் கட்டிக்கிறீங்களா?" அப்படின்னு கேட்டா அது தான் நேரடி மார்க்கெட்டிங். (Direct Marketing)

அவருக்கு ஒரு வேள தேட்டர்ல தேவதயப் பார்த்ததும் கையும் ஓடாம காலும் ஓடாமப் போவலாம். அப்ப என்னா பண்றாரு, அவங்க ஃபோன் நம்பர மட்டும் கஸ்டப்பட்டுக் கண்டுபிடிக்குறாரு. ஒடனே ஒரு ஃபோனப் போட்டு, மேல சொன்னா அதே மேட்டர ஃபோன் மூலமா சொல்லி ஒரு அப்ளிகேஸன் போட்டா அதுக்குப் பேரு தான் தொலைபேசி மார்க்கெட்டிங். (Tele Marketing)

அதே ஒரு வேள, தேட்டர்ல தேவதயப் பார்த்துட்டு இவரு கொஞ்சம் பேஸ்தடிச்சுப் போயி நிக்க சொல்லோ, அவரு பெஸ்ட் ஃப்ரெண்டு யார்னா (இந்த பெஸ்ட் ஃப்ரெண்டுங்க தொல்ல தாங்க முடியலடா சாமி, இதுக்குன்னா முன்னாடி வந்து நிப்பாங்கோ..!!) அவங்க கிட்ட போய், "அலோ மாடம். அதோ அங்க நிக்கறாரே, அவரு தான் சங்கரு. அவரு ஒரு நல்லவரு, வல்லவரு. உங்க மேல ஒரே ஃபீலிங்கா கீறாரு. கொஞ்சம் அவரப் பத்தி ரோசன பண்ணிப் பாருங்க." அப்படின்னு சொன்னா அது தான் வெளம்பரப்படுத்தல். (Advertising)

அப்பால, தேட்டர்ல தேவதயப் பாக்குறாரு. தேவத பேரு மட்டும் தெரியும். வேற எதுவும் தெரியாது. அவங்க சேத்திக்காரப் பொண்ணுங்களப் பாத்து வச்சிக்கினு அப்பாலிக்கா அவங்கள மீட்டு பண்ணி தேவதயும் தன்ன மாறி வல்லவங்களா, நல்லவங்களா, அவங்களுக்குப் புட்ச்சது என்னா, புடிக்காதது என்னா, அப்படின்னு வெசாரிச்சுப் பாக்குறாரே, அதுக்குப் பேரு தான் சந்தை ஆராய்ச்சி . (Market Research)

தேட்டர்ல தேவதயப் பார்த்துட்டு, அவங்க பக்கத்துல போயி நின்னுக்கிட்டு, அங்க கொழந்தப் பாப்பாங்க எதனா அழுதுக்கிட்டு நிக்குமே அதைத் தூக்கி, அழுகய நிறுத்த சாக்லேட் ஐஸ்கிரீம் வாங்கிக் குட்த்து, கொழந்தயோட அம்மா கையில சேப்டியா குட்த்துட்டு, இந்த மாறி சமூக சேவை எதனா பண்ணிட்டு, தேவத இவரப் பார்க்கும் போது, "இதெல்லாம் எனக்கு சாதாரணம். நான் ஒரு நல்லவன், வல்லவன்" அப்படின்னு டயலாக் பேசிட்டு வந்தா, அதுக்குப் பேரு என்னா தெரீமா? பொதுமக்கள் தொடர்பு. (Public Relations)

இவரு நேரடியா தேவத கிட்ட போயி தன்னப் பத்தி சொல்லும் போது, சொம்மா பளார்-னு ஒண்ணு கன்னத்தில குட்த்தாங்கன்னு வச்சுப்பம். (சொம்மா ஒரு பேச்சுக்குத் தான் கண்ணு சங்கரு, நீயு டென்ஸன் ஆகிப் போவாத.) அப்படிக் குடுக்குறதுக்கு வாடிக்கையாளர் பின்னூட்டம் அப்படின்னு பேரு. (Customer Feedback)

இவரு தேவத கிட்ட போயி தன்னப் பத்தி சொல்லும் போது பக்கத்தில கோவமா மொறச்சுப் பாக்குறான் பாருங்க ஒரு வில்லன், அதான்ப்பா ஒரு வேள அந்த தேவதக்கு ஏற்கெனவே வேற ஒரு வல்லவரு நல்லவரு கூடப் பிக்கப் ஆயிருந்தா ஒர்த்தன் இருக்க மாட்டான், அவன் தான் போட்டியாளர். (மாமு சங்கரு, இதுவும் சொம்மானாச்சுக்கும் ஒரு பேச்சுக்குத் தான் கண்ணு. சொம்மா உள உளாக்கட்டிக்கு.) அவரு வந்து நம்ம ஆள அடிச்சுப் போட்டுட்டாருன்னா அதுக்குப் பேரு தான் போட்டியாளர் எதிர்ப்பு நடவடிக்கை. (Competitor Reaction)

அல்லாங்காட்டி, இவரு தேவதயப் பார்த்த அதே நேரம் அவங்களும் இவரப் பார்த்துட்டு, இவரு கைல வந்து, "நீங்க தான சங்கரு? நானு உங்களப் பத்தி கேள்விப்பட்டுக்குறேன். நீங்க ஒரு நல்லவரு, வல்லவரு, எனக்குத் தெர்யும். எனக்கு உங்களப் புட்ச்சிருக்கு, நாம கண்ணாலம் கட்டிக்கலாமா?" அப்படின்னு கேட்டா, அதுக்குப் பேரு தான் பிராண்ட் அங்கீகாரம். (Brand Recognition)

கண்ணு சங்கரு, ஏதோ என்னால முடிஞ்ச எல்ப் பன்ணிட்டன். கோட்ட வுட்டுராம ஒனக்கு எது வசதியோ அத்த செஞ்சு வாழ்க்கயில முன்னேறப் பாரு.

என்னாது டாங்க்ஸா? இருக்கட்டும் பிர்ரதர். அதனால் என்னா? நமக்குள்ள இது கூட இல்லாட்டி அப்பால நான் வேல மெனக்கெட்டு இப்படி ஒரு மார்க்கெட்டிங் வலப்பதிவு நடத்துறதுக்கு அர்த்தமே இல்லாமப் போயிடும். அ ஆங்..!!

(சொல்ல மறந்துட்டன் பார்த்தியா, அந்த தேவத ஒருவேள இந்த வலப்பதிவப் படிச்சதுன்னா அதுக்கு மேட்டர் புரிஞ்சு ஒன்னத் தேடி வருமே, அதுக்குப் பேரு தான் இணைய வழி மார்க்கெட்டிங்.!! [Online Marketing] அப்ப நம்மள மறந்துடாதம்மா கண்ணு.)

லவ் மார்க்ஸ் - Lovemarks - அன்பின் அடையாளங்கள்(?)

இன்று ஒரு வித்தியாசமான மேட்டரைப் பார்ப்போம். உலகமெங்கும் பல்வேறு புகழ்பெற்ற விளம்பர நிறுவனங்கள் இருக்கின்றன. இந்த நிறுவனங்கள் ஒவ்வொன்றும் அண்மைக்காலத்தில் தங்களுக்கென்று ஒரு தனித்துவ சித்தாந்தத்தை (unique philosophy) வரையறுத்துக் கொள்வதில் முனைப்பைக் காட்டுகின்றன. இந்த தனித்துவ சித்தாந்தம் என்னவென்றால், அதன் அடிப்படையில் தான் அவர்கள் சந்தையைப் புரிந்து கொள்வார்கள், அதன் அடிப்படையில் தான் தங்கள் சேவைப்பயனர்களின் (clients) பொருள்/சேவையை மதிப்பீடு செய்வார்கள், அதன் அடிப்படையில் தான் விளம்பரங்களை உருவாக்குவார்கள். இதன்படி, புகழ்பெற்ற சாட்சி & சாட்சி (Saatchi & Saatchi) விளம்பர நிறுவனம் தனக்கென வகுத்துக் கொண்டுள்ள தனித்துவ சித்தாந்தமே லவ் மார்க்ஸ்.

லவ் மார்க்ஸ் சித்தாந்தத்தின் அடிப்படையில் சாட்சி நிறுவனம், வாடிக்கையாளர்கள் நெருக்கமான உறவு ஏற்படுத்திக் கொள்கிற, அல்லது காதலாகிக் கசிந்துருகும் வகையிலான brand-களை உருவாக்குவார்கள். (குறிப்பு: brand என்பதற்கு சரியான தமிழ் வார்த்தையை என்னால் அறிய முடியவில்லை. "பொரிம்பு" என்று ஒரு வார்த்தை பார்த்தேன். அது என்னவென்றே சரியாகப் புரியாததால் அதனை உப்யோகிக்காமல், brand என்றே சொல்லவேண்டிய நிலையில் இருக்கிறேன்.) இது, சாட்சி நிறுவனத்தின் தலைமை அதிகாரி கெவின் ராபர்ட்ஸ் (Kevin Roberts, CEO) அவர்களின் சிந்தனையில் உருவாகிய ஒரு சித்தாந்தம். இந்த சித்தாந்தம் வெற்றியை அளிக்கும் என்று அவர்கள் நம்புவதற்கான காரணம் என்ன? பொதுவாக பெரும்பான்மையான நிறுவனங்கள் , புதிய வாடிக்கையாளர்களிடமிருந்து பெறும் விற்பனை/லாபத்தை விட விசுவாசமான நீண்ட நாள் வாடிக்கையாளர்களிடமிருந்து பெறும் விற்பனை/லாபம் அதிகம். (அதாவது ஒரு திரைப்படம் சூப்பர் ஹிட் ஆக வேண்டுமென்றால் ரிப்பீட் ஆடியன்ஸ் - repeat audience - வரவேண்டுமென்று சொல்வார்களே, அது போல.) எனவே விசுவாசமான வாடிக்கையாளர்களை உருவாக்கும் விதமாக விளம்பரங்கள் மற்றும் மார்க்கெட்டிங் திட்டங்கள் இருக்க வேண்டும், அதற்கு உதவும் விதமாக வாடிக்கையாளர்களை நமது brand-ன் மீது காதல் கொள்ளச் செய்ய வேண்டும். அப்படிச் செய்து விட்டால் வெற்றி தான். இது தான் லவ் மார்க்ஸ் சித்தாந்தத்தின் அடிப்படை.

ஒரு நிறுவனம் வழங்கும் பொருள் அல்லது சேவை அல்லது அனுபவம் அல்லது மார்க்கெட்டிங் செய்யத்தக்க ஏதேனும் ஒன்றை காதல், மரியாதை ஆகிய இரு அளவுகோள்களில் மதிப்பீடு செய்கிறது லவ் மார்க்ஸ் சித்தாந்தம். அதாவது வாடிக்கையாளர் அதன் மீது காதல் கொள்கிறாரா, மற்றும் வாடிக்கையாளர் அதன் மீது மரியாதை வைக்கிறாரா? இது இரண்டும் அதிகமாக இருந்தால் லவ் மார்க்ஸ் மதிப்பீடுகளில் அந்தப் பொருள்/சேவை/அனுபவம்/... உயர்ந்த இடத்தைப் பிடிக்கிறது. கெவின் ராபர்ட்ஸ் சொல்கிறார்: "இது மிக எளிமையான சித்தாந்தம். நீங்கள் எந்தவொரு நிறுவனத்தின் தலைமையையும் கேட்டுப் பாருங்கள். தங்கள் brand மீது வாடிக்கையாளர் காதல் கொள்வதையும், அதன் மீது மரியாதை வைப்பதையும் விரும்பாதவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள். அது தான் இந்த சித்தாந்தத்தின் வெற்றியின் ரகசியம்."

இதற்காக காதல்-மரியாதை அச்சு (Love-Respect axis) ஒன்றை உருவாக்கியுள்ளது சாட்சி நிறுவனம். அது கீழே:


படம் - 7 : காதல்-மரியாதை அச்சு (Love-Respect Axis)


இந்த அச்சின் அடிப்படையில், குறைந்த காதலும் குறைந்த மரியாதையும் பெற்றவை சாதாரண பொருட்கள். குறிப்பாக Commodities என்று சொல்லப்படும் அத்தியாவசியப் பொருட்கள் (அரிசி, பருப்பு, மின்சாரம் முதலியன) எல்லாமே இந்த நிலையில் இருப்பதைப் பார்க்க முடியும். இதற்கு அடுத்த கட்டமாக, பாணிகள் (fashions. fads). இவற்றின் மேல் குறுகிய காலக் காதல் அதிகமாக வெளிப்படும், ஆனால் மரியாதை இருக்காது. காதலுக்கு முந்தைய நிலையான ஈர்ப்பு (infatuation) என்று கூடச் சொல்லலாம். பாப் இசைக் கலைஞர்கள் (முந்தாநாள் ஜேலோ, நேற்று ப்ரிட்னி, இன்று க்ரிஸ்டினா, நாளை யாரோ என்பது மாதிரி.), தலைமுடி அலங்காரம் போன்றவை இதில் அடங்கும். அப்படியே குறுக்குவாட்டில் கொஞ்சம் மேலே வந்தால் அதிக மரியாதை பெற்ற Brand-கள். ஆனால் இவற்றின் மேல் அதிக காதல் இருக்குமா என்றால் சந்தேகமே. ஜெனரல் எலக்ட்ரிக் (GE), அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் (American Express), டாட்டா (Tata) போன்றவை. மரியாதை பெற்ற brand-ன் மீது காதலை வரச்செய்து விட்டால் அது தான் லவ்மார்க்.

லவ்மார்க் ஆவதற்கு மேலும் மூன்று முக்கிய விஷயங்கள் இருக்க வேண்டும்:

1. மர்மத்தின் தொடர்ச்சியான உற்சாகம் (Mystery leading to excitement)
2. புலன் அனுபவம் (Sensual experience)
3. நெருக்கம் (Intimacy)

கெவின் ராப்ர்ட்ஸ் இது பற்றி எழுதியிருக்கும் புத்தகத்திற்கு, "லவ்மார்க்ஸ்: brand-களுக்கு அப்பால் ஒரு எதிர்காலம்" (Lovemarks: The future beyond brands) என்று பெயரிட்டிருக்கிறார்.

லவ்மார்க்ஸ் இணைய தளத்தில் நமக்கு விருப்பமான பொருள்/சேவை/brand/அனுபவம்/மனிதர் என எதற்கு வேண்டுமானாலும் ஒரு வேட்புமனு தாக்கல் செய்து விட்டு அது மற்ற வலைப் பயனர்களிடம் எவ்வளவு ஓட்டு வாங்குகிறது என்று பார்க்க வசதியும் உண்டு. இன்றைய தேதிக்கு தலைப் பத்தில் இருக்கும் குறிப்பிடத்தக்கவை: இயேசு கிறிஸ்து, ஆப்பிள் கணினி நிறுவனம் (Apple Computers), சூப்பர்மேன், கூகிள் தேடுபொறி (Google), பி.பி.ஸி (BBC) போன்றவை.

ஆதாரம்:
1. பொருளாதாரக் காலங்கள் [Economic Times :-)] பத்திரிக்கைக் கட்டுரை, ஜூன் 2, 2004
2. Lovemarks: The future beyond brands, powerHouse books, April 2004