இலாப நோக்கில்லாத நிறுவனங்களுக்கான சமூக மார்க்கெட்டிங்

இலாப நோக்கில்லாத நிறுவனங்களில் (Non-Profit organisations) பணிபுரிபவர்களிடம் மார்க்கெட்டிங் பற்றிக் கேட்டால் தங்கள் நிறுவனத்துக்கு நிதி ஆதாரம் திரட்டவும் நன்கொடைகளைப் பெறவும் மார்க்கெட்டிங் செய்வதாகப் பெரும்பாலும் கூறுவர். ஆனால் அப்படி சிறிய வட்டத்திற்குள் அடைத்து விடத்தக்கதல்ல மார்க்கெட்டிங். அந்த நிறுவனங்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளின் செயல்திறனை அதிகரிக்கவும் மார்க்கெட்டிங் திட்டங்களைக் கையாளலாம்.
பெரும்பாலான இலாப நோக்கற்ற நிறுவனங்களின் நடவடிக்கைகள் சமூக அளவில் ஒரு மனமாற்றத்தையும் (social "attitude" change), தொடர்ந்து மனிதர்களிடையே நடத்தை மாற்றத்தையும் (behaviour change) ஏற்படுத்த முயலும் தன்மையதாய் இருக்கின்றன. உதாரணமாக பெண்கள் அதிக அளவில் மார்பகப் புற்றுநோய் சோதனை செய்துகொள்ள வைப்பது, பருமனான மனிதர்கள் உடற்பயிற்சியும் உணவுக் கட்டுப்பாடும் மேற்கொள்ள வைப்பது, ஆணுறை பயன்படுத்தி பாலியல் நோய்களைத் தவிர்ப்பது போன்றவை ஆகும். இந்த மாற்றங்களைக் கொண்டு வர மேற்கொள்ளும் நடவடிக்கைகள் (activities), அவற்றுக்கான செலவுகள் (costs) ஆகியவற்றோடு அவற்றின் மூலம் கிடைக்கப்பெறும் நடத்தை மாற்றங்களும் (resultant changes) முக்கியத்துவம் அடைகின்றன.

மார்க்கெட்டிங் கலவை (Marketing Mix - 4 Ps) என்று முன்னர் இதே வலைப்பதிவில் பார்த்திருக்கிறோம். பொருள் (Product), விலை (Price), விநியோக இடம் (Place), விற்பனை உயர்த்தல் நடவடிக்கைகள் (Promotion) ஆகிய நான்கு அம்சங்களைக் கொண்டது மார்க்கெட்டிங் கலவை. இலாப நோக்கற்ற நிறுவனங்களும், தங்கள் மார்க்கெட்டிங் நடவடிக்கைகளை மேற்கொள்ள இந்நான்கு அம்சங்களை முடிவு செய்து கொள்ள வேண்டும். அவற்றைக் குறித்து இங்கு காண்போம்.

1. பொருள் (Product): சமூக மார்க்கெட்டிங்கில் பொருள் என்பது கண்ணால் காணக்கூடிய ஒரு பொருள் நிலையில் இருப்பது சில அபூர்வ சமயங்களிலேயே நடக்கும். உதாரணமாக ஆணுறை பயன்படுத்த வலியுறுத்துகையில் அதில் tangible பொருள் இருக்கிறது. ஆனால் பெரும்பாலான சமயங்களில் நமது இலக்கு சந்தையின் (target market) நடத்தையில் எதிர்பார்க்கும் மாற்றமே பொருளாக இருக்கும். பிற மனிதர்கள் நல்வாழ்வுக்கு உதவும் விதத்திலோ (கண் தானம், இரத்த தானம் போன்றவை), அல்லது சமூக நலவாழ்வுக்கு உதவும் விததிலோ (பொது சுகாதாரம் கடைப்பிடித்தல், சுற்றுச்சூழல் மாசு தவிர்த்தல் போன்றவை), தன் சொந்த நலத்துக்கு உதவும் வகையிலோ (உடற்பயிற்சி செய்தல், தியானம்/யோகா போன்றவை) இந்த நடத்தை மாற்றங்கள் மூன்று வகைப்படும் எனலாம். இதில் வணிக ரீதியான மார்க்கெட்டிங்கில் பயன்படும் உத்திகளே இதிலும் பயன்படும். குறிப்பிட்ட பொருளைப் பயன்படுத்துவதன் மூலம் அல்லது குறிப்பிட்ட நடத்தை மாறுதல்களைக் கையாள்வதன் மூலம் அவர்கள் இருக்க ஆசைப்படும் மனிதராக அவர்கள் விளங்குவதைக் காண்பிக்கலாம். உதாரணமாக புகழ்பெற்ற மனிதர்கள் மூலமாக இரத்ததானம் செய்ய அழைப்பு விடுக்கும் போது அந்தச் செயலுக்கு ஒரு மரியாதை ஏற்படுத்தி நமது குறிச்சந்தையின் மனதில் அதைச் செய்யும் ஆர்வத்தை ஏற்படுத்த முடிகிறது.

2. விலை (Price): பொருளைப் பயன்படுத்துவதிலோ அல்லது நடத்தையை மாற்றிக் கொள்வதிலோ ஏதேனும் பணச் செலவு இருந்தாலும், இங்கே முக்கியமாக நாம் கருத வேண்டியது அதன் பின்னணியிலுள்ள உணர்ச்சிகரமான செலவும் (emotional costs), அதற்குத் தரும் சமூக விலையுமே (social costs) ஆகும். புதிய நடத்தைக்கு மாறுவதில் உள்ள கடினங்கள், அதற்குச் செலவாகும் நேரம், அவமானம் (பாலியல் பரிசோதனை செய்து கொள்வது), நோய் அல்லது மருந்து குறித்த அச்சம், தான் விரும்பியதைச் செய்ய முடியாமல் போகும் எரிச்சல் (உணவுக் கட்டுப்பாடு) போன்றவை இதில் அடங்கும். இத்தகைய விலைகளைப் புரிந்து கொண்டு அவற்றை முடிந்த அளவு குறைப்பதன் மூலமே நாம் விரும்பும் மாற்றத்தைக் கொண்டு வர இயலும்.

3. விநியோகிக்கும் இடம் (Place): பொருளை விநியோகிக்கும் இடம் அல்லது புதிய நடத்தையை மேற்கொள்ள வசதியான இடம் என்று இதனைக் கூறலாம். இலக்கு சந்தையைச் சேர்ந்தோர் அதிகம் புழங்கும் இடங்களில் பொருளை விநியோகம் செய்வதும் நமது கருத்துகளைப் பிரபலப் படுத்துவதன் மூலமும் புதிய நடத்தையைப் பரவலாக்க இயலும். நமது இலக்கு சந்தை இத்தகைய கருத்துகளை ஆர்வமாக எதிர்பார்ப்பதில்லை என்பதால் நாம் அவர்களைச் சென்றடைய வேண்டியது மிக அவசியம்.

4. விற்பனை உயர்த்தல் / மாற்றம் அதிகரித்தல் நடவடிக்கைகள் (Promotion): வணிக ரீதியான மார்க்கெட்டிங்கில் மேற்கொள்ளும் நடவடிக்கைகளே இதற்கும் பொருந்தும். என்றாலும் இதில் ஒரு முக்கிய வேறுபாடு என்னவென்றால், இங்கு நமது இலக்கு சந்தை கணிசமாக மாறுபடும் - குறைந்த வருவாய் உள்ளவர்கள், எழுத்தறிவும் படிப்பறிவும் இல்லாதவர்கள், மாற்றம் கண்டு அஞ்சுபவர்கள், கலாசார நம்பிக்கை அடிப்படையில் மாற மறுப்பவரக்ள் என்று இவர்கள் பல வகைப்படுவார்கள். எனவே தங்கள் கருத்துகளை இவர்களிடையே பரப்ப மார்க்கெட்டிங் செய்பவர்கள் மிகுந்த கற்பனையும், புதுமையான ஊடகங்களும் பயன்படுத்த வேண்டியிருக்கும். புள்ளிராஜா பற்றிய பரபரப்பான teaser விளம்பரம் ஒரு நல்ல உதாரணம்.

இவையே அன்றி, சமூக மார்க்கெட்டிங்கின் தனிப்பட்ட சவால்களை உத்தேசித்து இன்னும் சில P-க்களை சேர்க்கலாம். அவை:

5. கொள்கை (Policy): அரசு அல்லது நிறுவன அளவில் எடுக்கப்படும் கொள்கை முடிவுகள், இத்தகைய நடத்தை மாற்றங்களை ஏற்படுத்த நல்ல வாய்ப்பாக அமைகின்றன. உதாரணமாக பொது இடங்களில் புகைப்பிடிக்க தடை வித்திக்கப்பட்டதன் மூலம், அவர்கள் புகை பிடிக்கக் கிடைத்த வாய்ப்புகள் குறைந்து, அந்தப் பழக்கத்தைக் கைவிட சில வாய்ப்புகள் ஏற்பட்டன.

6. கூட்டணிகள் (Partnership): தனி நிறுவனங்களாக தாம் அடைய விரும்பும் மாற்றங்களுக்காக உழைக்காமல், பிறருடன் ஒன்றிணைந்து நோக்கங்களை நிறைவேற்ற முனைந்தால் அதிக வெற்றிக்கு வாய்ப்புண்டு. குறிப்பாக அரசு சாரா நிறுவனங்கள், சேவை அமைப்புகள், வணிக அமைப்புகள் ஆகியவற்றுடன் இணைந்து பணியாற்றலாம். சுனாமி பாதித்த சமயத்தில் இத்தகைய கூட்டு முயற்சிகள் மூலமாக சிறப்பான மறுவாழ்வுப் பணிகள் நடந்தன என்பதை நினைவுகூறலாம்.

இப்படியாக இலாப நோக்கற்ற நிறுவனங்கள் தங்கள் நடவடிக்கைகளை மார்க்கெட்டிங் சிந்தனைகளைக் கொண்டு மென்மேலும் மெருகூட்டி அளித்தால் விரும்பும் மாற்றங்களை சிறப்பாக அடையலாம்.

நன்றி: MarketingProfs

Pink Ladies

பதிவின் தலைப்பைப் பார்த்து டென்ஷனாகிடாதீங்க. இது வேற விஷயம்.

சில மாதங்களுக்கு முன்பு, பெங்களூரில் அழைப்பு மையம் (Call Centre) ஒன்றில் பணிபுரிந்து வந்த பெண், அவரை அலுவலகத்துக்கு அழைத்துச் செல்ல வந்த வாகனத்தின் ஓட்டியால் பாலியல் பலாத்காரமும் படுகொலையும் செய்யப்பட்டது நினைவிருக்கலாம். அதைத் தொடர்ந்து இந்தியாவின் பெருநகரங்களில் இப்படி அழைப்பு மையங்கள் மற்றும் பிற அலுவலகங்களில் பணி புரியும் பெண்களுக்கு பாதுகாப்பான பயண வசதிகளை அளிப்பது பற்றி பல கருத்துகள் எழுந்தன. காவல் துறையும் சில விதிமுறைகளை அளித்தது. அலுவலகங்கள் தாமாகவே முன்வந்தும் சில மாறுதல்களைச் செய்தன. (நான் பணி புரியும் மென்பொருள் நிறுவனத்தில் இரவு நேரம் கழித்து வீடு திரும்ப வாகன வசதி அளிக்கப்படுகிறது. குறைந்தது நான்கு பேர்கள் சேர்ந்து செல்லும் அத்தகு பயணங்களில் இறுதியாக பெண் பயணம் செய்யுமாறு இல்லாமல், அவரை இறக்கி விட்டபின் கடைசியாக யாராவது ஒரு ஆண் தான் தனது வீட்டுக்கு செல்ல வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.)

இது போன்ற பிரச்சினை இந்தியாவில் மட்டும் ஏற்படுவது அல்ல. பிற நாடுகளிலும் காந்தியடிகள் சொன்ன 'இரவில் பெண் தனியாக, பாதுகாப்பாக பயணம் செல்லத்தக்க நிலைமை' குறைவாகவே உள்ளது. பெண்களுக்கு இருக்கும் இந்த பாதுகாப்புக்கான தேவையை ஒரு அருமையான மார்க்கெட்டிங் வாய்ப்பாகப் பார்த்தார் லண்டன் மாநகரைச் சேர்ந்த டினா டட்டன் (Tina Dutton) என்ற பெண். அவரது சிந்தனையில் உருவான அமைப்பே Pink Ladies ஆகும். இது ஒரு தனியார் வாடகை வாகன நிறுவனம் (Private Hire Cab service).

இதன் குறிப்பிடத்தக்க அம்சங்களாவன:

1. முழுக்க முழுக்க பெண் வாகன ஓட்டிகள் மட்டுமே கொண்டது. இவர்கள் சீருடை அணிந்திருப்பார்கள். தற்காப்புக் கலையிலும் முதலுதவி செய்யவும் பயிற்சி அளிக்கப்பட்டவர்கள்.
2. வாகனங்களை வாடகைக்கு எடுக்க விரும்பும் பெண்கள் நிறுவனத்தில் உறுப்பினர்களாக இணைந்து கொள்ள வேண்டும். வாகனம் தேவைப்படும்போது தொலைபேசி மூலமாகவோ இணைய தளம் மூலமாகவோ பதிவு செய்து பயன்படுத்திக் கொள்ளலாம்.
3. ஒவ்வொரு வாகனத்திலும் GPRS மூலம் டிராக்கிங் செய்யும் வசதி
4. வாகனத்தைப் பயன்படுத்திய வாடிக்கையாளர், தான் அடைய வேண்டிய இடத்தில், தான் தேடி வந்த கட்டிடத்தின் உள்ளே பாதுகாப்பாக நுழையும் வரை காத்திருந்த பிறகே அங்கிருந்து நகர்வார்கள். இதை 'Through the door policy' என்கிறார்கள்
5. வாகனத்தின் நிறம், பெண் வாகன ஓட்டிகளின் சீருடை, இணைய தளம் என அனைத்திலும் பெண்மையின் நிறமாகக் கருதப்படும் இளஞ்சிவப்பு (pink) வண்ணம்
6. பயனர்களுக்கு வழங்கப்படும் Pink Card மூலமாக சலுகை விலையும் அளிக்கப்படுகிறது.
7. வாகனம் வாடிக்கையாளரைத் தேடி வரும்போது, அதிலிருந்து தொலைபேசி மூலம் அழைப்பு விடுத்தோ அல்லது குறுஞ்செய்தி அனுப்பியோ தகவல் தெரிவிக்கும் வசதி உள்ளதால் வாகனத்துக்காக வீட்டுக்கு வெளியே காத்திருக்கும் அவசியம் இல்லை.சந்தையில் ஏற்படும் தேவையைக் கண்டு கொண்டு, அதை மிக நிறைவாகப் பூர்த்தி செய்து, தனக்கும் சமூகத்திற்கும் நன்மையைத் தேடிக் கொள்வதே மிகச் சிறந்த மார்க்கெட்டிங் உத்தியாகும். Pink Ladies வழங்கும் சேவை அதற்கு மிகச் சிறந்த உதாரணமாய் இருக்கிறது.

நன்றி: Thinking By Peter Davidson மற்றும் Springwise

சூப்பர் மார்க்கெட்டில் நவீன மயம் - Portable Shopping

ஆதி காலத்தில் சூப்பர் மார்க்கெட்டில் பணம் செலுத்துமிடத்தில் ஒரு கணினி இருக்கும். பொருட்களைத் தேர்ந்தெடுத்து நீங்கள் காசாளரிடம் கொண்டு போய் நீட்டுவீர்கள். ஒவ்வொரு பொருள் மீதும் அதன் விலை எழுதப்பட்டிருக்கும். காசாளர் ஒவ்வொரு பொருளாக எடுத்து, அதன் விலையை கணினியில் உள்ளீடு செய்வார். இறுதியில் கணினி, மொத்தத் தொகையைக் கூட்டிச் சொல்லும். காசைக் கொடுத்துவிட்டு பொருட்களை வாங்கிக் கொண்டு நீங்கள் வெளியேறலாம். இப்படியாக அந்தக் காலத்தில் சூப்பர் மார்க்கெட்டில் கணினி ஒரு கால்குலேட்டரின் வேலையைச் செய்து வந்தது.

கொஞ்ச நாள் கழித்து அதில் ஒரு முன்னேற்றம் வந்தது. சூப்பர் மார்க்கெட்டுகளில் Bar code-களும் Scanner-களூம் பயன்படுத்தும் முறை பரவலாகியது. பொருளின் மீது இந்த Bar Code ஒட்டப்படும். இந்த Barcode-ல் பொருளின் விலை இருக்காது. அது என்ன பொருள் என்பதற்கான குறிப்பு மட்டுமே இருக்கும். விலைப்பட்டியல் கணினியில் ஒரு database-ல் இருக்கும். பொருளின் Barcode-ஐ ஸ்கேன் செய்ததும் கணினி தானாகவே விலையைக் காண்டுபிடித்து பில்லில் சேர்த்துக் கொள்ளும். இப்படியாக சூப்பர் மார்க்கெட்டில் கணினிமயம் அடுத்த கட்டத்துக்கு முன்னேறியது. இதிலே குறிப்பிடத்தக்க நன்மை என்னவென்றால், முந்தைய முறையில், பொருளின் விலையில் ஏதேனும் மாற்றம் செய்யப்பட வேண்டியிருந்தால் ஒவ்வொரு பொருளின் மீதும் அதைச் செய்ய வேண்டியிருக்கும். ஆனால் இந்த முறையில் விலை மாற்றங்களைக் கணினியிலுள்ள விலைப்பட்டியலில் மாற்றினால் போதுமானது. எனவே சிறப்பு விற்பனைத் திட்டங்களை அமல் செய்வதில் பெருத்த முன்னேற்றம் ஏற்பட்டது.

இதில் அடுத்த கட்ட முன்னேற்றம், Loyalty Card என்னும் வாடிக்கை அட்டை மூலம் ஏற்பட்டது. குறிப்பிட்ட சூப்பர் மார்க்கெட்டிலேயே வாடிக்கையாகப் பொருள் வாங்குபவர்களுக்கு இத்தகைய அட்டை வழங்கப்பட்டது. பில் செய்யும் போது, இந்த அட்டையையும் அதற்குரிய இயந்திரத்தில் தேய்த்து, அவர்கள் வாங்கிய பொருட்களின் அளவிற்கேற்ப சலுகை விலைகள் அளிக்கப்பட்டன. வாடிக்கையாளர்களுக்கு சலுகை விலையில் பொருள் கிடைப்பதனால் நன்மை. ஆனால் சூப்பர் மார்க்கெட்டுக்கு என்ன நன்மை? எந்த வாடிக்கையாளர், எந்தப் பொருட்களை, எந்த அளவுகளில் வாங்குகிறார் என்பதை அவர்களால் டிராக் செய்ய முடிந்தது. பால் எவ்வளவு வாங்குகிறார், காய்கறிகள் எவ்வளவு, எந்த வகையான காய்கறிகள் போன்றவை. புதிதாக குழந்தைகளுக்கான உணவும் டயப்பர்களும் ஒருவர் வாங்க ஆரம்பித்தால் அவரது வீட்டில் புதிதாகக் குழந்தை ஒன்று பிறந்திருப்பதாக ஊகித்து அந்த 'தகவலை'ப் பயனுள்ள வகையிலே பயன்படுத்த வாய்ப்பு ஏற்பட்டது. வாடிக்கையாளர் பற்றிய தகவல் தான் வர்த்தகத்தின் முக்கிய சொத்து என்ற கருத்து இதன் மூலம் வலுப்பட்டது.

இதில் மற்றுமொரு முன்னேற்றமாக Self-checkout என்ற சித்தாந்தம் முளைத்தது. காசாளர் ஒருவருக்காகக் காத்திருக்காமல், நம்மிடம் உள்ள பொருட்களை நாமே scanner-ல் காண்பித்து நமக்கான பில்லை உருவாக்கிக் கொள்வது இதன் அடிப்படை. பணம் செலுத்துவது கூட தானியங்கி இயந்திரங்களின் மூலம் சாத்தியமே.

இவ்வாறாக வேக வேகமாக முன்னேறி வரும் சூப்பர் மார்க்கெட் நடவடிக்கைகளில் அடுத்த கட்ட பாய்ச்சலை உருவாக்கியிருக்கிறது, Portable Shopping System என்னும் புதிய முறை.

Image hosting by Photobucket


இதன் மூலம் நமது வாடிக்கை அட்டையை அங்காடி வாயிலில் பயன்படுத்தி மேலே படத்தில் உள்ள கருவியைப் பெற்றுக் கொள்ள முடியும். இதைப் பயன்படுத்தி, அங்காடியின் உள்ளே ஒவ்வொரு பொருளாக நாம் எடுக்கும் போதே அதை scan செய்து விடலாம். ஒவ்வொரு பொருள் எடுக்கப்படுவதையும் இதன் மெமரி பதிவு செய்து கொள்ளும். இறுதியில் பணம் செலுத்துமிடம் வரும்போது, இந்தக் கருவியை அதற்குரிய சாதனத்தில் பொருத்துவத்ன் மூலம் நாம் வாங்கிய அனைத்து பொருட்களுக்காக பில்லை உடனடியாக பெற்றுக் கொள்ளலாம். இதனால் வாடிக்கையாளர்களுக்கு நேரம் மிச்சமாகிறது. சூப்பர் மார்க்கெட்டுக்கு என்ன நன்மை?

வாடிக்கையாளர்களின் முந்தைய விற்பனை சரித்திரத்தை வைத்து அவர்களுக்கு வாங்குவதற்கான பொருட்களை இந்தக் கருவி சிறிய செய்திகளாக அவ்வப்போது அறிவித்துக் கொண்டிருக்கும். வாடிக்கையாளர்கள் எதையேனும் வாங்க மறந்திருந்தாலும் அது நினைவுபடுத்தும். மேலும் சென்ற முறை அந்த வாடிக்கையாளர் சவரப் பசை (shaving cream) வாங்கியிருந்து இந்த முறை சவரப் பசை அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் இடத்தைக் கடந்து வாங்காமல் சென்றால் உடனடியாக அவருக்கு அதை நினைவூட்டி வாங்க வைக்கலாம்.

இப்படியாக சூப்பர் மார்க்கெட்டுகளில் கணினி மயம் விற்பனைப் பெருக்கலுக்குத் துணை புரிந்து கொண்டிருக்கிறது.

நன்றி: Thinking By Peter Davidson

தலைமை குறித்த பிம்பங்கள் (Leadership Images)

இளங்கலை பயிலும் மாணாக்கரிடையே 'தலைமை' (leadership) குறித்த பிம்பங்களைப் பற்றிய ஆய்வு ஒன்று வார்ட்டன் பல்கலைக்கழகத்தில் சில ஆண்டுகளாக நடந்து வந்துள்ளது. குறிப்பிட்ட மேலாண்மைப் பாடத்தை விருப்பத் தேர்வு செய்து பயிலும் மாணாக்கர், 'தலைமை' என்ற கருத்துடன் அவர்கள் தொடர்பு படுத்துகின்ற ஏதேனும் படம் அல்லது பிம்பத்தைத் தேர்வு செய்து, அதைத் தேர்ந்தெடுத்தது ஏன் என்றும் நூறு சொற்களுக்கு மிகாமல் கட்டுரை எழுதுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர். சுமார் நான்கு ஆண்டுகளாய் ஏறக்குறைய இரண்டாயிரம் மாணவர்கள் இவ்வாறு தலைமை பற்றிய தங்கள் பிம்பத்தைத் தேர்வு செய்து அதைக் குறித்து எழுதியும் சமர்ப்பித்துள்ளனர். அவற்றை ஆய்வு செய்ததன் மூலம், இளைஞர்கள் மத்தியில் 'தலைமை' என்ற சித்தாந்தம் என்னவிதமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்று அளவிட முனைந்துள்ளனர் வார்ட்டன் பல்கலைக்கழக ஆசிரியர்கள். இந்த ஆய்வின் முடிவுகள் சில சுவாரஸ்யமான தகவல்களை வெளிப்படுத்தியுள்ளது.

மாணாக்கரில் பலரும் நாம் எதிர்பார்க்கக் கூடிய வகையில் நம்மோடு உலகில் வாழ்ந்து மறைந்த அல்லது வாழுகின்ற தலைவர்களின் படங்களைத் தேர்வு செய்துள்ளனர். மகாத்மா காந்தி, மார்ட்டின் லூதர் கிங், ஜான் கென்னடி, நெல்சன் மண்டேலா, வின்ஸ்டன் சர்ச்சில், ஃப்ராங்க்ளின் ரூஸ்வெல்ட், நெப்போலியன், ஜார்ஜ் வாஷிங்டன், அன்னை தெரஸா போன்றவர்கள் ஒரு வகை. தலைவர்கள் என்று சொல்ல முடியாவிட்டாலும் குறிப்பிட்ட செய்கைகள் மூலம் தலைமைப் பண்போடு செயல்பட்ட நியூயார்க நகர தீயணைப்புப் படையினர் (9/11 தாக்குதலின் போது), மைக்கேல் ஜோர்டன் போன்ற விளையாட்டு வீரர்களும் சில மாணாக்கரால் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

மாணாக்கரின் 'மனிதர்களல்லாத' வேறு சில தேர்வுகள் நம்மை சிந்திக்க வைக்கின்றன. மரங்கள் (தலைவர்கள் மண்ணில் நிலைத்து நின்று விண்ணுக்கு வளர உந்து சக்தியாய் இருத்தல் வேண்டும்), சல்லடை அல்லது funnel (தலைவர்கள் பல ஆலோசனைகளைக் கேட்டு சரியான ஒன்றைத் தேர்ந்தெடுத்து செயல்படுத்த வேண்டும்), தலையணை (நெகிழ்வுத் தன்மை), வாகனத்தின் steering wheel (தலைவர்கள் குழுவுக்கு சரியான திசையைக் காட்டி அழைத்துச் செல்லுதல்), சதுரங்க ஆட்டக்களம் (சிந்தனைத் திறன்) என்று மாறுபட்ட பல பிம்பங்களையும் மாணாக்கர் தேர்ந்தெடுத்துள்ளனர்.

இன்னும் சில மாணாக்கர் பல பாகங்கள் கொண்டு ஒருங்கிணைந்து செயல்படும் சாதனங்களையும் தலைமையோடு தடர்புபடுத்தும் வகையில் தேர்ந்தெடுத்துள்ளனர். இதன் மூலம், தலைவர்கள் குழ்வின் ஒப்வ்வொருவரையும் அரவணைத்துச் செல்ல வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியதாகக் கருதலாம்.

படங்களே மட்டுமன்றி, எழுதி சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரைகளில் பரவலாகப் பயன்படுத்தப்பட்ட சொற்களை ஆய்வு செய்ததிலும் சில முடிவுகள் எட்டப்பட்டுள்ளன. தலைமை குறித்த சொற்கள் மூன்று வகையினவாக இருப்பதாக அவை தெரிவிக்கின்றன. தலைமை குறித்துப் பேசும் வார்த்தைகள் பன்மை (plural), நன்மை (moral or good) மற்றும் வழிகாட்டி ஊக்கப்படுத்தும் தன்மை (inspirational) கொண்டவையாக இருக்கின்றன எனலாம்.

பன்மைத் தன்மை (plural) என்பது, ஒரு தலைவரைத் தனியாளாகக் கருதாமல், குழு ஒன்றை அவர் வழிநடத்திச் செல்லும் பாங்கில் எவ்வாறு பொலிகிறார் என்பதில் தெரிகிறது. எனவே தலைமைப் பண்பு குறித்த கட்டுரையில் 'குழு', 'பிறர்', 'உறுப்பினர்கள்', 'ஒருங்கிணைப்பு' போன்ற சொற்கல் பெரிதும் கையாளப்பட்டுள்ளன. மைக்கேல் ஜோர்டான் மிகத் திறமை வாய்ந்த கூடைப் பந்தாட்ட வீரராய் இருந்த போதும், அவரைத் தலைமைப் பண்புக்கு உதாரணமாய்ப் பேசும் கட்டுரைகளும், அவரது தனிப்பட்ட சாதனைகளுக்கு முக்கியத்துவம் அளிக்காமல், அவர் ஆடிய அணியின் பிற வீரர்களையும் எவ்வாறு ஒருங்கிணைத்து உயர்த்தி அணிக்கு வெற்றியைத் தேடித் தந்தார் என்பது குறித்து விரிவாகப் பேசுகின்றன.

நன்மை (moral or good) என்பது தலைவர்களை வர்ணிக்கும் சொற்கள் பெரும்பாலும் அவர்களின் குணநலன்களை 'நல்ல', 'உயரிய', 'சிறந்த' என்று சொல்லத் தக்கனவாய் இருப்பதைக் குறிக்கிறது.

வழிகாட்டி ஊக்கப்படுத்தும் தன்மை (inspirational) என்பது தலைவர்களை விவரிக்கும் வார்த்தைகள் பெரும்பாலும் 'பின்பற்றத்தக்க', 'உருவாக்கும்', 'மாற்றம் ஏற்படுத்தும்', 'நம்பிக்கை தரும்' என்பது போல் இருப்பதனால் எழுகிறது.

மேலும் தலைமை பற்றிப் பேசும் வினைச் சொற்கள்(verbs) transformational-ஆக இருப்பதாகவும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது. (make, follow, lead, inspire, achieve, believe, etc.) இப்படியாக இளைஞர்களிடையே தலைமைப் பண்பு குறித்த பிம்பங்கள் வெளிப்பட்டுள்ளன

நன்றி: Knowledge@Wharton