உலகின் மிக அதிக பொருட்செலவிலான விளம்பரம்

Chanel No.5 என்ற நறுமண திரவியத்துக்காக அண்மையில் வெளியான விளம்பரத்தில் புகழ் பெற்ற ஹாலிவுட் நடிகை நிக்கோல் கிட்மன் (Nicole Kidman) தோன்றியுள்ளார். அவருக்கு சம்பளமாக மட்டும் 12 மில்லியன் டாலர்கள் அளிக்கப்பட்டுள்ளன. ஒரு விளம்பரத்திற்கு அளிக்கப்பட்ட மிக அதிகபட்ச சம்பளமாக இதுவே கருதப்படுகிறது. இதனை உருவாக்கி, இயக்கியிருப்பவர் மௌலா ரூஜ் (Moulin Rouge) திரைப்படத்தை இயக்கிய பாஸ் லஹ்ர்மன் (Baz Luhrmann) ஆவார். இவருக்கும் பெரும் தொகை சம்பளமாக அளிக்கப்பட்டுள்ளது. 2 நிமிடங்கள் வரும் இந்த விளம்பரத்தை 5 நாட்கள் சிட்னியில் எடுத்துள்ளார்கள்.



ஒரு நவீன யுக Fairy Tale என்று வர்ணிக்கப்படும் இந்த விளம்பரத்தில் நிக்கொல் கிட்மன், சுமார் 42 மில்லியன் டாலர்கள் மதிப்புள்ள நகைகளை அணிந்துள்ளார். இதிலே 627 வைரங்கள் இருப்பதாக சொல்லபடுகிறது.

விளம்பரத்தை எடுத்து முடிப்பதற்கான செலவு இன்னொரு 10 மில்லியன் டாலர்கள்.

விளம்பரத்தின் 'கதை'ப்படி நிக்கோல் கிட்மன், உலகின் மிகப் புகழ்பெற்ற பெண்மணி ஆவார். ஒரு நாள் மீடியாவின் தொல்லையிலிருந்து விடுபட்டு சுதந்திரப் பறவையாக நடை போடுகிறார். ஒரு இளைஞனைச் சந்திக்கிறார். இரவு இரண்டு பேருக்கும் கசமுசா நடக்கிறது. ஆனாலும் திடீரென்று இருவருக்கும் யதார்த்தம் புரிகிறது. நிக்கோல் கிட்மன், 'காதலா கடமையா' என்ற கேள்வி எழும்போது மீண்டும் தன் உலகத்துக்குச் சென்று விடுகிறார். ஒரு நிகழ்ச்சிக்கு செல்லும் போது, அந்த இளைஞனின் நினைவு வருகிறது. அவனும் நினைத்துப் பார்க்கிறான். நிக்கோல் கிட்மன், கடமையிலிருந்து 'ஓடிப் போகாத' தைரிய சிந்தனை உள்ள பெண்ணாக மாறுகிறார். அவன் அவளுடைய நினைவுகளைச் சுமந்து தன் வாழ்க்கையைத் தொடர்கிறான். அவ்வப்போது நினைத்துக் கொள்கிறான் - அவளது முத்தத்தை, அவளது புன்னகையை, அவளது நறுமணத்தை!

விளம்பரத்திலிருந்து மேலும் சில காட்சிகள்:



இந்த விளம்பரத்தின் வீடியோ வடிவை இங்கு காணலாம். (கவனம்: விளம்பரத்தில் சில முத்தக் காட்சிகளும், சில suggestive காட்சிகளும் உண்டு.)

கிட்டத்தட்ட ஒரு ஹாலிவுட் திரைப்பட ரேஞ்சுக்கு எடுத்திருக்கிறது Chanel நிறுவனம் இந்த விளம்பரத்தை. எந்த அளவுக்கு இது உதவும் என்பது போகப் போகத் தெரியும். ஆனாலும் அவர்களின் துணிவு எனக்குப் பிடித்திருக்கிறது. பாராட்டுகள்.

நன்றி: Chanel நிறுவனம். காப்புரிமை அனைத்தும் அவர்களுக்கே.

மிக வெறுக்கப்படும் இணைய விளம்பர உத்திகள்

இணையத்தில் உலாவுகின்ற போது இப்போதெல்லாம் தவிர்க்க இயலாததாக இருப்பவை இணைய விளம்பரங்கள் (online advertisements). பல்வேறு இணைய தளங்களில் பலவகையான விளம்பரங்களை நான் அன்றாடம் காண்கிறோம். வாடிக்கையாளர்களைச் சென்றடைய இதுவும் ஒரு வாய்ப்பு என்ற அளவிலே விளம்பரம் செய்பவர்களை நாம் அதிகமாகக் குறை கூறி விட முடியாது. ஆனால், இணையத்துக்கு வரும் வாடிக்கையாளரை வெறுப்படைய வைக்காமல் விளம்பரங்களைச் செய்வது மிக முக்கியமானது.

மற்ற ஊடகங்களில் வருகின்ற விளம்பரங்களைப் போலவே இணைய விளம்பரங்களிலும் பல்வேறு உத்திகள் பயன்படுத்தப்படுகின்றன. அவற்றில் எவையெல்லாம் வாடிக்கையாளரை மிகவும் வெறுப்படைய வைக்கின்றன என்பதை விள்மப்ரம் உருவாக்குபவர்கள் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும். அவர்கள் மட்டுமில்லாமல், தங்கள் தளத்தில் விளம்பரம் செய்து கொள்ள அனுமதிக்கின்ற தள நிர்வாகிகளும் இதை அறிந்து கொள்வது அவசியமே ஆகும். இல்லையென்றால், அந்தத் தளத்திற்கு வருகை புரிகின்ற வருகையாளர்களின் கசப்பைச் சம்பாதிக்க வேண்டி வரும். இது நீண்ட கால அடிப்படையில் விரும்பத்தகாத பின் விளைவுகளை ஏற்படுத்த வல்லது.

விரும்பத்தகாத உத்திகள்

கீழ்க்காணும் வடிவமைப்பு உத்திகளை "வெறுப்புக்குரியது" அல்லது "மிகுந்த வெறுப்புக்குரியது" என்று குறிப்பிட்ட பயனாளர்களின் சதவிகிதம்:

1. படித்துக் கொண்டிருப்பதை மறைக்கும் பாப்-அப் ஜன்னல்கள் (pop-up windows) - 95%

2. மெதுவாக வலையேறுவது (slows the page loading)- 94%

3. சொடுக்குமாறு உங்களை ஏமாற்றுவது (tricks you into clicking) - 94%

4. 'மூடு' பொத்தான் இல்லாதது (No 'Close' button) - 93%

5. எதற்காக விளம்பரம் என்று தெளிவாக குறிப்பிடப்படாதது (Doesn't clearly say what it is for) - 92%

6. திரையிலே அங்குமிங்கும் மிதந்து கொண்டிருப்பது (Floats around the screen) - 92%

7. திரையின் பெரும்பான்மையான பகுதியை ஆக்கிரமிப்பது (Occupies most of the screen) - 90%

8. தோன்றி மறைந்து மினுங்குவது (Blinks on and off) - 87%

9. தானாகவே குரல் அல்லது இசையை ஒலிப்பது (Plays sounds automatically) - 79%

இங்கு நாம் கவனிக்கத்தக்க ஒரு விபரம் என்னவென்றால் பாப்-அப் விளம்பரங்களுக்கு எதிராக அவற்றைத் தடை செய்யும் மென்பொருள்களை உபயோகிப்பவர்களின் எண்ணிக்கை குறுகிய காலத்தில் கணிசமாக உயர்ந்திருப்பதே ஆகும். ஏப்ரல் 2003-ல் இவ்வகை மென்பொருள்களை உபயோகித்ததாக அறிவித்த பயனாளர்களின் சதவிகிதம் 26% ஆக இருந்தது. அதுவே, செப்டம்பர் 2004-ல், 69%-ஆக உயர்ந்துள்ளது.

மேலும், ஏறக்குறைய 20,000 பயனாளர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில், பாப்-அப் விளம்பரங்களைப் பயன்படுத்திய நிறுவனங்கள் மீது மிகுந்த வருத்தமும் அவநம்பிக்கையும் உருவாகியதாக 50% பேர்களும், இவற்றை அனுமதித்த தளத்தின் மேல் வருத்தம் ஏற்பட்டதாக 40% பேர்களும் தெரிவித்துள்ளனர்.

சிறப்பானதாகக் கருதப்படும் உத்திகள்

சில வகையான இணைய விளம்பர உத்திகள் தமக்கு மகிழ்ச்சியை அளித்ததாக பயனாளர்கள் தெரிவித்துள்ளனர். அவற்றில் குறிப்பிடத் தக்கவை:

1. விளம்பரத்தைச் சுட்டினால் என்ன நடக்கும் என்று தெளிவாக அறிவித்தவை

2. பயனாளர்கள் இணையத்தில் செய்து கொண்டிருப்பதற்கு துணையான விளம்பரங்கள்

3. தம்மை விளம்பரங்கள் என்று தெளிவாக அறிவிப்பவை

4. விளம்பரம் செய்யப்படும் பொருள்/சேவை குறித்து முழுமையான தகவல் அளித்தவை

5. பார்த்துக் கொண்டிருக்கும் பக்கத்தை விட்டு வேறு பக்கத்துக்கு செல்ல வேண்டிய அவசியம் தராதவை

இவற்றைக் குறித்து எண்ணிப் பார்த்தால், ஆண்டாண்டு காலமாய் இணைய வழித் தொடர்பு குறித்து சொல்லப்படும் அதே சங்கதிகளின் வெளிப்பாடுகளாகவே இருக்கின்றன - பயனாளர்களைத் தேர்வு செய்ய அனுமதிப்பது, எளிமையாகவும் தெளிவாகவும் சொல்ல வந்ததைச் சொல்வது, மற்றும் பயனாளர்கள் விரும்பக் கூடிய தகவல்களை முழுமையாக அளிப்பது. இவற்றைச் சிறப்பாக நடைமுறைப் படுத்தினால் மட்டுமே இணைய விளம்பரங்களின் மூலம் எதிர்பார்க்கும் பலனை அடைய இயலும்.

பொருள் வடிவமைப்பில் சில புதுமைகள்

அலுவலக உபயோகங்களுக்கான சைக்கிள்களை வடிவமைத்து உற்பத்தி செய்து வருவதில் புகழ்பெற்ற ஒரு நிறுவனம், ஆம்ஸ்டர்டாம் நகரில் உள்ள ஹென்ரி வொர்க் சைக்கிள்ஸ் (Henry WorkCycles) ஆகும். இவர்களது சில தயாரிப்புகளும் அவற்றின் பயன்களும் கீழே காணலாம்:



இவை அனைத்தையும் விடவும் என்னை மிகவும் கவர்ந்த, மிகப் புதுமையான ஒரு சைக்கிள் வடிவமைப்பு, இவர்களது மாநாடு சைக்கிள் (Conference Cycle) என்று அழைக்கப்படுகிற தயாரிப்பு ஆகும். சுமார் ஏழு நபர்கள் ஒரே சமயத்தில் அமர்ந்து செல்லும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த சைக்கிளின் தோற்றம் கீழே:



"உலகத்தின் மிகச் சிறந்த சமூக ஒருங்கிணைப்பு வாகனம்" என்று இவர்கள் இதை விளம்பரப்படுத்துகிறார்கள். அது எந்த அளவுக்கு உண்மையோ என்று நாமறியோம். ஆனால், ஒரு அலுவலகத்தின் ஒரு குழுவிலே, நல்ல குழு உணர்வை ஏற்படுத்தவும், வளர்க்கவும் (Team-Buidling) இது மிகச் சிறந்த கருவி என்று தயங்காமல் கூற முடியும். இதை எடுத்துக் கொண்டு ஒரு குழுவாக கிராமப்புற சாலைகளில் வயல்வெளிகளினிடையே ஒரு பிக்னிக் போல சென்று வந்தால்... அதை நினைத்துப் பார்க்கும் போதே எனக்கு மிக மிக உவப்பாக இருக்கிறது.

விலை பத்தாயிரம் பவுண்டு அளவுக்கு சொல்கிறார்கள். ஆனாலும் மொத்தமாக விலைக்கு வாங்காமல் வாடகைக்கு எடுத்துக் கொள்ளவும் வசதி செய்திருக்கிறார்கள்.

இத்தகைய புதுமையான பொருள் வடிவமைப்புகள் மார்க்கெட்டிங்கில் எனது கவனத்தை எப்போதுமே கவர்பவை. இதனை வடிவமைத்து உருவாக்கிய ஹென்ரி வொர்க் சைக்கிள்ஸ் நிறுவனத்துக்கு எனது ஜே!

விற்பனை உயர்த்தல் நடவடிக்கைகள் (Sales Promotions)

நிறுவனங்கள் பல சமயங்களின் விற்பனையை உயர்த்த சில சிறப்பு நடவடிக்கைகள் எடுக்கின்றன. இவையே Sales Promotions என்று குறிக்கப்படுகின்றன. இவை இரண்டு வகைப்படும் - வாடிக்கையாளர்களைக் குறிவைத்த நடவடிக்கைகள் (Consumer Promotions) மற்றும் விற்பனையாளர்களைக் குறிவைத்த நடவடிக்கைகள் (Trade Promotions). வாடிக்கையாளர்களை முதல்முறையாக தங்கள் பொருட்களை வாங்க வைக்கும் நோக்கத்திலோ, அல்லது ஏற்கெனவே வாங்குபவர் என்றால் கூடுதலாக வாங்க வைக்கும் நோக்கத்திலோ வாடிக்கையாளர்களைக் குறிவைத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. விற்பனையாளர்களைக் குறிவைத்த நடவடிக்கைகளின் நோக்கம், அவர்களிடையே நமது பொருட்களை தீவிரமாக விற்கின்ற முனைப்பை ஏற்படுத்தவே ஆகும். பல சமயங்களில் தேக்கம் கண்டுள்ள சரக்கினை 'தள்ளி விடுவதற்காக'வும் இத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

அண்மையில் எடுக்கப்பட்ட ஒரு சர்வேயில் நாம் காணும் முடிவுகள் ஆச்சர்யமளிக்கக் கூடும். எழுபது முன்னணி நிறுவனங்களின் மார்க்கெட்டிங் செலவுகளை ஆராய்ந்த இந்த சர்வேயில், ஒரு நிறுவனத்தில் சற்றேறக் குறைய 73% இத்தகைய விற்பனை உயர்த்தல் நடவடிக்கைகளுக்கே பணம் செலவிடப்படுகிறது. மீதம் 27% தான் நேரடியான விளம்பரங்களுக்கு செலவிடப்படுகிறது. எனவே இத்தகைய நடவடிக்கைகளின் முக்கியத்துவம் புலப்படும்.

இங்கே நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய இன்னொரு தகவல் என்னவென்றால் பல சமயங்களில் விற்பனை உயர்த்தல் நடவடிக்கைகளும் விளம்பரங்களும் இணைந்தே வேலை செய்கின்றன. ஒருங்கிணைந்த திட்டத்தின் அடிப்படையில் இரண்டையும் செய்யும் போது அவற்றின் பலன் முழுமையாகக் கிடைக்கிறது.

பல்வேறு வகையான விற்பனை உயர்த்தல் நடவடிக்கைகள் எவை என்று கீழே காணலாம்.

வாடிக்கையாளர்களைக் குறிவைத்த நடவடிக்கைகள்:

ஏற்கெனவே சொன்னது போல், வாடிக்கையாளர்கள் முதல்முறையாக பொருளை நுகரும் பொருட்டும், பயன்படுத்தி விலகிச் சென்றவர்கள் மீண்டும் வாங்கும் பொருட்டும், அதிக அளவில் வாங்குவதைத் தூண்டும் பொருட்டும் வாடிக்கையாளர்களைக் குறிவைத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. வெகு சில சமயம், பிராண்டின் மதிப்பைக் கூட்டும் வகையிலும் சில நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படலாம். இவற்றில் பல வகைகள் உண்டு:

** கூப்பன்கள் (Coupons) - 'இந்த கூப்பனைக் கத்தரித்து எடுத்து கடையில் கொடுத்தால் லக்ஸ் சோப் மீது இரண்டு ரூபாய் தள்ளுபடி பெறலாம்' என்று நீங்கள் செய்தித்தாளிலோ அல்லது பத்திரிக்கைகளிலோ பார்த்திருக்கலாம். இதுவே பெரும்பான்மையாக பயன்படுத்தப்படும் வாடிக்கையாளர்களைக் குறிவைத்த விற்பனை உயர்த்தல் நடவடிக்கை ஆகும். இப்போதெல்லாம் நேரடியாக தபாலில் (Direct Mailer) ஒவ்வொருவருக்கும் பிரத்தியேகமாகக் கூப்பன்கள் அனுப்புகிறார்கள். சில சமயங்களில் நாம் வாங்கும் பொருளின் உறை மேலேயே இம்மாதிரி கூப்பன்கள் இருக்கும். இவை மறு-வாங்குதலைத் (Re-purchase) தூண்டும் பொருட்டு வடிவமைக்கப்படுகின்றன. இப்படி இல்லாமல் பொதுவான ஊடகங்களின் வாயிலாக அளிக்கப்படும் கூப்பன்கள் புதிய வாடிக்கையாளர்களைக் கவர்ந்து அவர்களை நமது பொருளை வாங்கத் தூண்டும் வகையில் (Trial Inducement) வடிவமைக்கப்படுகின்றன. சில சமயங்களில் தொடர்புடைய பொருளை வாங்கும் போது வேறு பொருளுக்கான கூப்பன்கள் அளிக்கப்படலாம். உதாரணமாக குழந்தைகளுக்கான டயப்பர் (diaper) வாங்கும்போது குழந்தைகளுக்கான சோப் அல்லது ஷாம்பூவுக்கு கூப்பன் அளிக்கப்படும். இது க்ராஸ்-ரஃப் கூப்பன் (Cross-ruff coupon) என்று அழைக்கப்படுகிறது. சில சமயங்களில் தள்ளுபடியைத் தவிர நமது பொருளுக்கு உபயோகமான சேவையை இலவசமாக வழங்குவதும் உண்டு. கார் வாங்குபவர்களுக்கு கூப்பன் அனுப்பி, அதன் மூலம் குறிப்பிட்ட சர்வீஸ் ஸ்டேஷன்களில் இலவசமாக சர்வீஸ் செய்து கொள்ளலாம் என்று வழங்கப்படுவது இம்மாதிரியே. நான் இதுவரை அறிந்த கூப்பன் திட்டங்களில் மிக சுவாரஸ்யமானது எதுவென்றால் ஒரு பல்பொருள் அங்காடியிலே ஒரு நிறுவனம், தனது போட்டியாளர்களின் பொருட்களை வாங்கிய வாடிக்கையாளர்களைக் குறிவைத்து, அவர்களின் பில்லின் கீழே மட்டும் தங்களது பொருளை வாங்குவதற்கு தள்ளுபடி அறிவிக்கும் கூப்பனை இணைத்து அளித்தது. இதன் மூலம் எத்தனை பேர் போட்டியாளர்களின் பொருளை விட்டுவிட்டு தங்கள் பொருளினை வாங்குகிறார்கள் எனவும் எளிதாகக் கண்டறிந்தது.

** இலவச சாம்பிள் (Free Samples) - புதிய வாடிக்கையாளர்களைக் கவர மிகச் சிறந்த (ஆனால் செலவு கூடுதலான) வழிவகை அவர்களுக்கு சிறிய அளவுகளில் இலவச சாம்பிள்கள் வழங்குவது ஆகும். மக்கள் போக்குவரத்து மிகுந்த இடத்தில் நின்று கொண்டு கைப்பட எல்லோருக்கும் தரலாம். அல்லது அலுவலகங்கள், கல்லூரிகள் போன்ற இடங்களுக்குப் போய் விநியோகம் செய்யலாம். அல்லது பத்து லட்சம் பிரதிகள் (??!!) விற்பனையாகும் முதன்மையான தமிழ்ப் பத்திரிக்கையுடன் இலவச இணைப்பாக அளிக்கலாம். முற்றிலும் புதிய பொருளை சந்தையில் அறிமுகம் செய்யும் போது இது மிகவும் பலனளிக்கிறது. கை நீட்டி வாங்கிய பொருளை எப்படியாவது பயன்படுத்திப் பார்ப்பது என்பது மக்களின் மனப்பான்மையில் ஊறிப் போன விஷயம் என்ற அடிப்படையில் இந்த வழி பயன்படுத்தபப்டுகிறது.

** சிறப்பு உறைகள் (Special Packs) - 'இப்போது அதே விலையில் 20% எக்ஸ்ட்ரா கோல்கேட்' என்றோ அல்லது 'இரண்டு க்ளினிக் ப்ளஸ் ஷாம்பூ பாட்டில் வாங்கி ஐந்து ரூபாய் சேமியுங்கள்' என்று பார்க்கிறீர்கள் அல்லவா? அவையெல்லாம் இந்த சிறப்பு உறைகளின் அடிப்படியிலே வழங்கப்படுகின்றன. இவை, மற்ற பிராண்டிலிருந்து நமது பிராண்டுக்கு மாறச் செய்யவும் (Switching), அதிக விசுவாசத்தை ஏற்படுத்தவும் (Creating Loyalty) உதவுகின்றன. 'அதே விலைக்கு எக்ஸ்ட்ரா' என்பது மிகவும் சக்திவாய்ந்த ஒரு முறையாகும்.

** பரிசுகள் (Gifts) - பொருளை வாங்கும் அனைவருக்கும் இலவசமாக ஏதாவது பரிசுப் பொருள் கொடுப்பது இந்தமுறையில் அடங்கும். சில சமயங்களில் எல்லா பொருளுக்கும் பரிசு உண்டு (Attached to each product). சில சமயம் குறிப்பிட்ட அளவு பொருட்களை வாங்கி அதற்கு நிரூபணம் அளித்து (proof of multiple purchase) பரிசினைப் பெறலாம். குழந்தைகளை மையப்படுத்திய பொருட்களில் இது போன்ற பரிசுகள் நன்றாக வேலை செய்கின்றன என்பது அனுபவத்தின் வாயிலாக நாம் அறிவது.

** குலுக்கல் முறை பரிசு (Sweepstakes) - பொருளை வாங்குபவர்கள் அனைவரும் ஒரு குலுக்கலில் கலந்து கொண்டு அவர்களில் குறிப்பிட்ட சிலரைத் தேர்ந்தெடுத்து பரிசு அளிப்பது இந்த வகை ஆகும். சில சமயம் பொருளை வாங்கினால் மட்டும் போதும். சில சமயம் ஏதாவது வாசகத்தைப் பூர்த்தி செய்து அல்லது 'இந்த படத்தில் இடம் பெற்றிருக்கும் உதடுகள் எந்த நடிகையுடையவை' போன்ற கேள்விக்கு பதில் அளித்து குலுக்கல் திட்டத்தில் கலந்து கொள்ளலாம். எல்லோருக்கும் பரிசு கொடுக்கும் போது மிகக் குறைந்த விலை ப்ரிசையே அளிக்க முடியும். இந்த வழியில் மிக விலை உயர்ந்த பரிசுகளை அளிக்க முடியும்.

** வாங்குவதற்கு நிதி உதவி (Purchase Financing) - விலையுயர்ந்த பொருட்களை வாங்கும் போது தவணை முறைத் திட்டம், வட்டியில்லாக் கடன் போன்ற நிதி உதவிகளை அளிப்பதும் ஒரு வகை விற்பனை உயர்த்தல் நடவடிக்கையே ஆகும். இந்தியாவில் வாகனங்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களின் சந்தையில் (அண்மைக் காலங்களில் செல்ஃபோன் விற்பனையிலும்!!) இத்தகைய நிதி உதவி திட்டங்கள் பெரும்பங்கு ஆற்றியுள்ளன.

விற்பனையாளர்களைக் குறிவைத்த நடவடிக்கைகள்:

இவ்வகை நடவடிக்கைகளின் நோக்கங்கள் - அதிக அளவில் பொருளை கடையில் அடுக்க முனைதல், அதிக அளவில் விற்க வைக்க முனைதல் போன்றவை ஆகும். இவற்றின் சில வகைகளை கீழே காணலாம்:

** இன்வாய்ஸ் தள்ளுபடி (Off-Invoice) - மிக எளிமையான வழியான இதில், விற்பனையாளர் பெற்றுக் கொள்ளும் சரக்கின் விலையில் குறிப்பிட்ட சதவிகிதம் தள்ளுபடி அளிக்கப்படுகிறது. இந்த வழியில் உள்ள சிறிய குறை என்னவென்றால், விற்பனையாளர்கள், அடுத்து இத்தகைய விற்பனை உயர்த்தல் நடவடிக்கை வரைக்கும் தாங்கும் அளவுக்கு இப்போதே வாங்கி அடுக்கிக் கொள்வார்கள். விற்கும் போது விற்றுக் கொள்ளலாம் என்பது அவர்களின் நிலைப்பாடு. இதனைத் தவிர்க்க, வேறு வகைகளில் இதே போன்ற சலுகை அளிக்கப்படுகிறது. உதாரணமாக பன்னிரெண்டு பொருட்களை விற்றால் ஒரு பொருள் இலவசமாக விற்பனையாளருக்கு அளிக்கப்படும். அதன் விலை முழுவதும் அவருக்கு இலாபமாகி விடும்.

** காட்சிக்கு வைப்பதற்கு சலுகை (Display Allowance) - விற்பனையாளர் தனது கடைகளில் குறிப்பிட்ட பொருளை முன்னிறுத்தி காட்சிக்கு வைக்க சம்மதிப்பதன் பேரில் இத்தகைய சலுகைகள் அளிக்கப்படுகின்றன.

** தாமதமான பில்லிங் (Delayed Billing) - விற்பனையாளர் பொருளை வாங்குவதற்கான செலவுகளைக் குறைக்கும் வகையில் நமது பில்லை அனுப்புவதை சற்று தாமதப்படுத்தலாம். விற்பனையாளரின் பணச்சுழற்சிக்கு இது உதவுகிறது.

** குலுக்கல் முறைப் பரிசுகள் (Sweepstakes) - அதிக அளவில் விற்பனையைத் தேடித் தரும் விற்பனையாளர்களுக்கு குறிப்பிட்ட நிபந்தனைகளின் அடிப்படையிலோ அல்லது குலுக்கல் முறையிலோ பரிசுகள் வழங்கப்படும்.

குறுகிய கால அடிப்படையில் இத்தகைய விற்பனை உயர்த்தல் நடவடிக்கைகள் பயன் அளிக்கின்றன என்றாலும் கூட, அதிக அளவில் (அடிக்கடி) இவற்றை மேற்கொள்வது பாதிப்பான பின் விளைவுகளை ஏற்படுத்தக் கூடும். சில சமயம் வாடிக்கையாளர்கள், 'இது எதனா சலுகை தரும் போது வாங்கிக்கலாம், இப்ப வேணாம்' என்று நினைக்கும் அளவுக்குப் போகக் கூடும். எனவே விற்பனை உயர்த்தல் நடவடிக்கைகளைத் தேவையான அளவுக்கு மட்டுமே, அதுவும் சரியாக மேற்கொள்ள வேண்டியது அவசியம்.

Federal Express மறைபொருள் ரகசியம்

கீழே காணும் Federal Express லோகோவை நீங்கள் எங்காவது பார்த்திருக்கக் கூடும். கவனமாகப் பாருங்கள் இதிலே ஏதாவது மறைந்திருக்கும் symbol உங்கள் கண்ணுக்குத் தெரிகிறதா?


தெரியவில்லையா?

மறுபடி நன்றாகப் பாருங்கள். அம்புக்குறி ஏதாவது தெரிகிறதா என்று ஊன்றிப் பாருங்கள்.

ஆ, கண்டுபிடித்து விட்டீர்களா? E-க்கும் x-க்கும் இடையில் இருக்கிறதே அந்த அம்புக்குறி தான். மிக அழகான இந்த லோகோவை உருவாக்கியவர் லிண்டான் லீடர் (Lindon Leader) என்பவர் ஆவார். இவர் லீடர் கிரியேட்டிவ் (Leader Creative) என்ற நிறுவனத்தின் தலைவர்.

உலகெங்கும் இதுவரை 40க்கும் அதிகமான் விருதுகளை வாங்கியுள்ளது இந்த லோகோ வடிவமைப்பு. ரோல்லிங் ஸ்டோன் (Rolling Stone) என்ற புகழ்பெற்ற பத்திரிக்கை, தனது 35-ஆவது ஆண்டு இதழில் (2003 மே 15), கடந்த 35 ஆண்டுகளின் மிகச்சிறந்த 8 லோகோக்கள் பட்டியலில் இதற்கு இடம் தந்து சிறப்பித்தது. (இந்தப் பட்டியலில் இடம் பிடித்த ஏனைய லோகோக்கள் - ஆப்பிள், கோககோலா, நைக், ஐ.பி.எம்., ஸ்டார்பக்ஸ், மெக்டொனால்ட்ஸ் மற்றும் ப்ளேபாய்)

Federal Express-ன் துரித வேகம் மற்றும் கூர்மையான செயல்திறன் ஆகியவற்றுக்குக் குறியீடாக இந்த அம்புக்குறி விளங்குகிறது. இந்த அம்புக்குறியை லோகோவில் அப்படி மறைமுகமாக வைத்திருப்பது ஏன் என்று அவரிடம் கேட்கப்பட்டபோது, அவர் இவ்வாறு கூறுகிறார்:

"ஒரு விளம்பரத்திலோ அல்லது லோகோ வடிவமைப்பிலோ அம்புக்குறி என்பது மிகப் பழக்கப்பட்ட ஒரு அம்சமே ஆகும். இந்த லோகோவில் மறைமுகமாக அம்புக்குறி இருப்பதன் பயன், அது ஒரு மறைமுக போனஸ் என்பதே ஆகும். அம்புக்குறியைப் பார்க்கத் தவறி விட்டால் பார்வையாளர் மனதில் லோகோ ஏற்படுத்தும் தாக்கம் எந்த வகையிலும் குறைந்து போவதில்லை. அதே நேரம் பார்த்து விட்டாலோ, அதன் தாக்கம் அதிகரிக்கிறது. மேலும் ஒரு முறை பார்த்துவிட்டால் அந்த அம்புக்குறி எப்போதும் மறக்காது. ஒரு அவுட்லைன் போட்டோ அல்லது வண்ணங்களால் வேறுபடுத்திக் காட்டியோ அந்த அம்புக்குறியை வெளிப்படுத்திக் காட்ட எங்களுக்கு ஒரு சபலம் இருந்தது உண்மையே. ஆனாலும் அதை அப்படியே மறைவாக விடுவதே சிறந்தது என்று நாங்கள் முடிவு செய்தோம்."

இவர்கள் இந்த லோகோவை வடிவமைத்து முதல்முறையாகக் காண்பித்த போது Federal Express நிர்வாகிகளில் அந்த அம்புக்குறியை முதலில் 'கண்டுபிடித்தது' நிறுவனத்தின் தலைமை நிர்வாக அலுவலர் (CEO) ஃப்ரெட் ஸ்மித் (Fred Smith) என்பதும் குறிப்பிடத்தக்கது.

நமது பிராண்டின் முக்கியமான வெளிப்பாடுகளில் முதன்மையானது நமது லோகோ ஆகும். அதன் வடிவமைப்பை மிக கவனத்துடனும் கற்பனையுடனும் செய்ய வேண்டியது அவசியம்.

நன்றி: The Sneeze

மேலாண்மைக்கான பத்து கட்டளைகள்

1. Thou shalt take risks - நீங்கள் ரிஸ்க் எடுக்கத் தயங்கக் கூடாது: மிகப் பாதுகாப்பான செயல்களை மட்டுமே செய்துகொண்டிருப்பதன் மூலமாக மாபெரும் வெற்றிகளை எவரும் ஈட்டியதில்லை. அவ்வப்போது சற்று ரிஸ்க் எடுத்து சில செயல்களைச் செய்வதன் மூலமே சிறப்பான வெற்றியை அடைய முடியும். ரிஸ்க் எடுப்பது என்பதையும் மிக திட்டமிட்டு செய்ய வேண்டும். நாம் செயல்படுத்த விரும்பும் திட்டத்தை முழுமையாக ஆராய்ந்து அறிந்து கொள்வது, இலக்குகளை தெளிவாக நிர்ணயம் செய்து கொள்வது, அளவான, தேவையான முதலீடுகளை மட்டுமே செய்வது மற்றும் புதியன செய்து பார்க்க அஞ்சாமல் இருப்பது ஆகிய நான்கு வழிமுறைகளை சரியாக கடைப்பிடித்தால் ரிஸ்க் எடுக்கத் தயங்க வேண்டிய அவசியம் இல்லை.

2. Thous shalt make nice with your competitiors - போட்டியாளர்களிடம் போட்டி மட்டுமே இருக்க வேண்டும், பொறாமையும் பொல்லாத செய்கையும் அல்ல: என்ன தான் போட்டியாளர்கள் என்றாலும் பல்வேறு நிலைகளில் நீங்களும் உங்கள் போட்டியாளர்களும் இணைந்து பணியாற்ற வேண்டிய சூழ்நிலைகள் இருக்கும். குறிப்பாக உங்கள் தொழில் சார்ந்த சில நடவடிக்கைகளுக்காக அரசிடம் பேசுவது, புதிய நடவடிக்கைகளின் போது ஒருங்கிணைந்து செயல்பட முனைவது போன்ற பல நன்மைகள் இணைந்து நடப்பதால் கிடைக்கும். அநாவசியமான நடவடிக்கைகள் இல்லாமல் ஆரோக்கியமான முறையில் நமது போட்டியாளர்களுடன் நடந்து கொள்ள வேண்டும்.

3. Thou shalt pick the right people - சரியான நபர்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்: உங்களைச் சுற்றியும், உங்கள் அணியிலும் இடம்பெறும் நபர்கள் தகுதி வாய்ந்தவர்களாகவும் சிறந்தவர்களாகவும் இருக்க வேண்டும். இதற்காக நேரம் ஒதுக்கி அவர்களைத் தேர்ந்தெடுக்கத் தயங்கலாகாது. இது மிக அவசியமாக செலவழிக்கப்பட்ட நேரமாகவே இருக்கும். சிறந்த, முற்போக்கு சிந்தனையுடைய, நேர்மையான, நம்பிக்கையான நபர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

4. Thou shalt have a Rolodex that is fruitful and multiplies - ஒரு ரோலோடெக்ஸ் நிறைய பயனுள்ள தொடர்புகளை வைத்திருங்கள்: (ரோலோடெக்ஸ் என்பது, விநியோகஸ்தர்கள், வாடிக்கையாளர்கள் போன்ற நமது முக்கிய தொடர்புகளின் தகவல் சீட்டுகளை வைத்துக் கொள்ள உதவும் ஒரு மேஜை சாதனம் - ரோலர் வடிவில் உருட்டி உருட்டி குறிப்பிட்ட தொடர்பின் தகவல்களை அறிந்து கொள்ள முடியும்) நமது வணிகத்துக்கு உபயோகமான விநியோகஸ்தர்கள், டீலர்கள், சப்ளையர்கள் போன்றவர்களிடம் வணிகத்துக்கு மேற்பட்ட நல்ல தொடர்பினை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். புதிய தகவல்களை பெற்று லேட்டஸ்ட் தகவல்களுடன் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். தற்போது பயனில்லாததாக தோன்றக் கூடிய சந்திப்புகளும் கூட பின்னொரு நாள் முக்கியத்துவம் பெறலாம்.

5. Thou shalt welcome change - நீங்கள் மாற்றத்தை வரவேற்க வேண்டும் - உங்கள் வழமையான நடவடிக்கைகளில் நீங்கள் புகுத்தும் சிறியதொரு மாற்றம் கூட உங்களுக்கு மிகப்பெரிய வெற்றியைத் தரக் கூடியதே. எனவே, இது வரை நீங்கள் செய்து வந்ததை மறுபரிசீலனைக்கு உட்படுத்தும்போது, உங்களுக்குப் பயனளிக்காத சில நடவடிக்கைகளை மாற்றிவிட்டு புதிய நடவடிக்கைகளை ஏற்றுக் கொள்ள எந்தத் தயக்கமும் கூடாது.

6. Thou shalt master the multi-media marketplace - நீங்கள் பன்முக ஊடக சந்தையைப் பயன்படுத்தும் கலையில் சிறந்து விளங்க வேண்டும்: உங்களது விளம்பர மற்றும் சந்தைப்படுத்தல் நடவடிக்கைகளுக்கு குறுகிய அளவில் சில ஊடகங்களை மட்டுமே பயன்படுத்திக் கொண்டிராமல், தேவையான அனைத்து ஊடகங்களையும் பயன்படுத்தும் சாத்தியங்களை அறிந்து வைத்து உசிதமான முறையில் பயன்படுத்துங்கள். குறிப்பாக புதிய பொருட்கள் சேவைகளை அறிமுகம் செய்யும் போது அவற்றுக்கு உபயோகமான அனைத்து ஊடகங்களையும் பயன்படுத்துவதே சிறப்பாக இருக்கும்.

7. Thou shalt join and lead thy trade association - நீங்கள் உங்கள் தொழில்சார்ந்த கூட்டமைப்புகளில் ஆர்வத்துடன் பங்கேற்று தலைமைப் பணியில் ஈடுபட வேண்டும்: உங்கள் தொழில் சார்ந்த கூட்டமைப்புகளில் ஆர்வத்துடன் பங்கேற்பது உங்களுக்கு தொழில் வெற்றியை மீறிய மரியாதையை பெருமளவில் பெற்றுத் தர வல்லது. குறிப்பாக தொழிலுக்கு அச்சுறுத்தலான சூழல்கள் அமையும் போது உங்களுக்கு நியாமகாத் தோன்றும் கருத்தை ஆதரித்து தலைமைப் பொறுப்பை ஏற்று உங்களுக்கு மிகப் பெரும் நம்பகத்தன்மையையும் நன்மதிப்பையும் பரவலாக அளிக்கும்.

8. Thou shalt build on thy company's brand name at all times - உங்கள் நிறுவனப் பெயரையும் பிராண்டு பெயரையும் எப்போதும் முன்னேற்றப் பாடுபடுங்கள்: வாடிக்கையாளர்கள் மனதில் உங்களைக் குறித்த நேர்மறை எண்ணங்களை (positive ideas) விதைத்து வளர்க்க வேண்டியதன் தேவை மிக அதிகம். கிடைக்கக் கூடிய பல்வேறு சந்தர்ப்பங்களையும் இதற்காகப் பயன்படுத்த வேண்டும்.

9. Thous shalt not limit thy upside - நீங்கள் உங்கள் அதிகபட்ச எல்லைகளை குறுக்கிக் கொள்ள வேண்டாம்: நேற்றைய மழையின் இன்றைய காளான்களாக இருக்கும் குறுகிய கால வெற்றிப் பொருட்களை விடவும், நீண்ட கால அடிப்படையில் அதிக வாடிக்கையாளர்களுக்கு பயன்படக் கூடிய பொருட்களை உருவாக்குவதில் அதிக கவனம் செலுத்துங்கள்.


10. Thou shalt be prepared to toss out these commandments and start over - நீங்கள் மேற்கூறிய இந்தக் கட்டளைகளை, தேவைக்கேற்ப தூக்கியெறிந்து விட்டு தேவைக்கேற்ப புதிய கட்டளைகளை ஏற்றுக் கொள்ளத் தயங்க வேண்டாம்: மாற்றமே வாழ்க்கையின் அடிப்படை என்று முன்னால் சொல்லியிருப்பது போல், புதிய தேவைகளுக்காகவும் புதிய சூழல்களுக்காகவும் உங்கள் வணிக நுணுக்கங்களையும் தந்திரங்களையும் மாற்றிக் கொள்ளத் தயங்க வேண்டாம். உங்கள் மனசுக்குப் பிடிக்காது என்பதற்காக மட்டுமே பழைய திட்டங்களுடன் பின் தங்கி நல்ல வாய்ப்புகளை புறந்தள்ளுவது எந்த வகையிலும் ஏற்புடையதல்ல.

நன்றி: கதி ரெங்க்கர் தொலைக்காட்சி நேரடி ஆய்வு நிறுவனம் (Guthy-Renker Television Direct Response company)