பாப் வூல்மருடன் காலை உணவு சந்திப்பு - Breakfast with Bob

Image hosted by Photobucket.com


நேற்று மாலை என்னுடைய நிறுவனத்தின் மார்க்கெட்டிங் இயக்குனர் (எனது மேலதிகாரி) என்னை அழைத்து, "நாளை காலை ஸ்டார் நியூஸ் தொலைக்காட்சி நிறுவனம் சார்பில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கோச் பாப் வூல்மருடன் (Bob Woolmer) ஒரு காலை உணவு சந்திப்புக்கு அழைப்பு வந்திருக்கிறது. என் சார்பாக நீ போய் கலந்து கொள்கிறாயா?" என்று கேட்டபோது மிக உற்சாகமாகவே சம்மதித்தேன். பாப் வூல்மர் இதற்கு முன்னால் தென்னாப்பிரிக்க அணியின் கோச் ஆக இருந்த போது பல புதுமைகளைப் புகுத்தியவர். அதற்கும் முன்னால் இங்கிலாந்து நாட்டின் வார்விக்ஷையர் (Warwickshire) மாகாண அணியின் கோச்சாகப் பணியாற்றி அங்கு உள்நாட்டுப் போட்டிகளில் மிகச் சிறப்பான வெற்றிகளை ஈட்டித் தந்தவர். தனது பணியில் தான் கடைப்பிடிக்கும் மேலாண்மைத் தத்துவங்களைப் பற்றி காலை உணவினூடே பாப் வூல்மர் உரையாற்றுவார் என்று அறிவிக்கப் பட்டிருந்தது. சுவாரஸ்யமான ஒரு காலைப் பொழுதை எதிர்பார்த்துப் போன எனக்கு எந்த ஏமாற்றமும் இல்லாமல் பட்டையைக் கிளப்பினார் பாப்.

காலையில் சற்று முன்னதாகவே நிகழ்ச்சி நடைபெறும் ஓபராய் விடுதிக்கு சென்றேன். எனக்கு முன்னால் வந்து தயாராய் தனது பவர்பாயிண்ட் ப்ரெசண்டேஷனில் கடைசி நிமிட மாறுதல்களைச் செய்து கொண்டிருந்தார் பாப். காலை உணவருந்தியபடியே எங்கள் மேசையில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தோம். வழக்கம் போல பெங்களூரின் காலை நேர டிராஃபிக் சொதப்பல்களால் அழைக்கப்பட்டிருந்த பலர் வரத் தாமதமாகும் என்று தெரிய வந்ததால் நிறைய நேரம் எங்களோடு அளவளாவிக் கொண்டிருந்தார். அது சரி, பாகிஸ்தான் நேற்று ஜெயித்து விட்ட மகிழ்ழ்சியில் இருந்த மனிதரிடம் உற்சாகத்துக்கு என்ன குறை?

அழைக்கப்பட்டிருந்தவர்களில் ஒருவர், தனது ஆறு வயது மகனுடன் ஞாயிறன்று தொலைக்காட்சியில் பெங்களூர் டெஸ்ட் போட்டியைப் பார்த்துக் கொண்டிருந்ததைப் பற்றிக் குறிப்பிட்டார். அப்போது திரையில் பாப் வூல்மரைக் காட்டியதாகவும், அவர் தனது லேப்-டாப்பில் ஏதோ ஆராய்ச்சி செய்து கொண்டிருந்ததாகவும், அவரை சுட்டிக் காட்டி, "இவரோடு தான் நான் செவ்வாயன்று காலை உணவருந்தப் போகிறேன்" என்று சொன்னதாகவும் குறிப்பிட்டார். அந்த ஆறு வயது சுட்டிப் பையன் உடனே "அப்பா! இவர் அந்த கம்ப்யூட்டரில் என்ன கேம்ஸா விளையாடிக் கொண்டிருக்கிறார்?" என்று கேட்டிருக்கிறான். பாப் வூல்மர் இதைக் கேட்டு ரசித்துச் சிரித்தார். தெய்வீகச் சிரிப்பு அவருக்கு.

ஸ்டார் நியூஸ் நிறுவன அதிகாரி, பாப் பற்றிய சிறந்த ஒரு அறிமுகத்தை அளித்தார். தொடர்ந்து பேச வந்த பாப், இப்படி நச்சென்று ஆரம்பித்தார்: "Sometimes there is truth behind myths. Sometimes there isn't. Today I'm not going to destroy any myths about me!!"

ஒவ்வொரு மனிதனுக்கும் தான் சொல்ல விரும்பும் முக்கிய கருத்தாக பாப் சொன்னது இதுவே - "உங்கள் மனம் ஒரு பாராசூட் போன்றது. திறந்து வைத்தால் மட்டுமே அது வேலை செய்யும்" (Your mind is like a parachute. It will not work unless it is open.) - அட்டகாசமான ஆரம்பம்.

தொடர்ந்து, வெற்றிக்குத் தேவையான ஆறு விதமான S-கள் பற்றிக் குறிப்பிட்டார். அவை: Skill (திறமை), Speed of mind and body(வேகம்), Strength - physical and mental (பலம்), Stamina - physical and mental (நீடித்த செயல்திறன்), Suppleness of mind and body (நெகிழ்வு), Spirit (மாறாத உற்சாகம்)

இதில் Spirit என்பதைப் பற்றிச் சொல்லும் போது அவர் யூனிஸ் கான் பற்றிக் குறிப்பிட்டார். பெங்களூர் டெஸ்ட் போட்டியில் 267 ரன்கள் அடித்து விட்டு உடனே இந்தியாவின் இன்னிங்ஸின் போது ஃபீல்டிங் செய்ய வந்தது பற்றியும், உடல்சோர்வு மற்றும் மனச்சோர்வு இல்லாமல் அனைவரையும் உற்சாகப் படுத்தியபடி அவர் விளையாடியதையும் பெருமையாகக் குறிப்பிட்டார். சில விளையாட்டு வீரர்கள் இவ்வாறு உற்சாகத்தோடு போட்டியிடுவதன் மூலம் அணிக்கு புதிய பலத்தைச் சேர்க்கிறார்கள் என்றும், வேறு சிலரோ தங்களது சோர்வு மிக்க செயல்பாடுகளின் மூலம் அணியிடம் இருக்கின்ற பலத்தையும் கூட உறிஞ்சி எடுத்து விடுகிறார்கள் என்றார்.

தான் சோச்சிங் செய்த அணிகளின் வெற்றி தோல்விகளை ஆராய்ந்ததில், ஒரு அணியின் உறுப்பினர்களில் 63% அளவுக்கு நன்றாக விளையாடினால் அந்தப் போட்டியில் வெற்றி கிடைப்பதாகக் குறிப்பிட்டார். இன்றைய தேதியில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, தொடர்ச்சியாக 80-90% அளவுக்கு நன்றாக ஆடி வருவதாகவும், அதை எட்டுவதே பிற அணிகளின் இலக்காக இருக்க வேண்டும் என்றும் கூறினார்.

அணியில் இடம்பெறும் வீரர்களிடையே நான்கு விதமான கற்கும் அணுகுமுறைகள் (learning approaches) இருப்பதாகவும், ஒவ்வொரு வீரரும் எந்த வகையானவர் என்பதைக் கண்டறிந்து அதற்கு ஏற்றவாறு அவரை முன்னேற்றப் பாதையில் இட்டுச் செல்ல வேண்டும் அன்பது அவர் சொன்ன ஒரு சித்தாந்தம். அந்த நான்கு வகையான கற்கும் அணுகுமுறைகள்:

1. Innovative Learners - தம்மைத் தாமே பரிசோதனைகளுக்கு உட்படுத்தியும், பிறரைப் பார்த்து அவர்கள் செய்வதை தமக்கு ஏற்றபடி மாற்றிக் கொண்டும் கற்பவர்கள் இந்த வகையினர். டெண்டுல்கர், லாரா போன்றோர்
2. Analytical Learners - அறிவுசார்ந்த முறைகளில், அங்கீகரிக்கப்பட்ட உண்மைகளின் அடிப்படையில் கற்பவர்கள் இந்த வகையினர். ராகுல் திராவிட் போன்றோர்
3. Common Sense Learners - நடைமுறைக்கு உதவுகின்ற அம்சங்களை முக்கியத்துவம் அளித்துக் கற்பவர்கள் இந்த வகையினர். ஜாண்டி ரோட்ஸ் போன்றோர்
4. Dynamic Learners - தன் மனதினுள் தோன்றும் intuition அடிப்படையில் தானாக அறிந்து (self-discovery) கற்பவர்கள் இந்த வகையினர். வீரேந்திர சேவாக் போன்றோர்

மேவரிக் (Maverick) வீரர்கள் பற்றிக் கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்தார். அதாவது விதிமுறைகளை அவ்வளவாய் மதிக்காமல், தான் சரியென நினைத்ததைச் செய்கின்ற சில வீரகள். அற்புதமான ஒரு மேவரிக் வீரருக்கு நல்ல உதாரணம் பிரையன் லாரா என்றார். வார்விக்ஷையர் அணிக்கு பாப் கோச்சாக இருந்தபோது லாரா அங்கே வெளிநாட்டு வீரராக இடம் பெற்றிருந்தார். போட்டி துவங்குவதற்கு இரண்டு நிமிடங்களே இருக்கும். லாரா இன்னும் விளையாட்டு மைதானத்துக்கு வந்து சேர்ந்திருக்க மாட்டார். பாப் தொலைபேசியும் கையுமாய் அவரைப் பிடிக்க முயன்று கொண்டிருப்பார். இருந்தாலும் ஆட்டம் என்று வந்து விட்டால் லாராவை அடிக்க ஆளில்லை. அந்த வருடம் மாகாணப் போட்டிகளில் (county cricket) அவர் அடித்தது 2000 ரன்கள். சராசரி 102. ரன் பெறும் வேகம் ஒரு பாலுக்கு ஒரு ரன். அது மட்டுமில்லாமல் அணியின் பிற வீரர்களுடன் கண்ணியமாகப் பழகி, தான் அறிந்தவற்றை அவர்களுக்கு அறியத் தந்து மிக உற்சாகமான ஒரு வீரராக விளங்கினார் லாரா. இத்தகைய மேவரிக் வீரர்கள் தங்க நகையைப் போன்றவர்கள். அணியில் இடம்பெற்றால் அழகு சேர்ப்பார்கள். இதற்கு நேரெதிராக வேறு சில மேவரிக் வீரர்கள் இருக்கிறார்கள். அவர்களும் தங்கம் தான். ஆனால் தங்கத் தூசி (gold dust) போன்றவர்கள். அவர்களால் சுற்றியிருப்பவர்களின் கண்களில் எரிச்சல் மட்டுமே மிஞ்சும் என்றார். (நான் பேரைச் சொல்ல மாட்டேன்..!!)

அருமையான கோச் மட்டுமல்ல, தான் அருமையான பேச்சாளரும் கூட என நிரூபித்தார் பாப். பழகுதற்கு இனியவராகவும் செயல்திறன் மிக்கவராகவும் காட்சியளித்தார். அனைத்துக்கும் மேலாக, "என் வாழ்வின் எனக்குக் கிடைத்திருக்கும் மிகச் சிறந்த கொடை கிரிக்கெட். அதை இறுதி வரை மகிழ்ச்சியாகவும் மனநிறைவோடும் செய்வேன்." என்று அவர் சொன்னது எனக்கு மிகப் பிடித்திருந்தது.

உற்சாகமான இந்த காலைப் பொழுது எனக்குக் கிடைக்கக் காரணமாயிருந்த அனைவருக்கும் என்றென்றும் நன்றி சொல்வேன் நான். பாப் வூல்மரிடம் நான் பெற்ற ஆட்டோகிராஃப் இது:

Image hosted by Photobucket.com

ஜவுளிக் கடை பொம்மை

ஜவுளிக் கடை அல்லது தற்போது நகைக்கடை வாசல்களிலும் கூட இந்த வகை பொம்மைகளை நீங்கள் பார்த்திருப்பீர்கள். கடையில் விற்பனையாகும் உடை அல்லது நகையை அணிவித்து நிறுத்தியிருப்பார்கள். ஆண், பெண், குழந்தை என்று இதிலே பலவகைகள் உண்டு. இவற்றின் பெயர் மானிகின் (mannequin). (அவ்வப்போது தமிழ்த் திரைப்படங்களில் சில நடிகைகளைப் பார்த்தாலும் இவற்றைப் பார்த்த மாதிரி இருக்கும். அது வேறு விஷயம்.)

தற்போது SGI Japan, Flower Robotics Inc ஆகிய இரண்டு நிறுவனங்களும் இணைந்து பாலெட் (Pelette) என்ற பெயரில் ஒரு மானிகின் ரோபோவை உருவாக்கியிருக்கிறார்கள். இதிலே உள்ள புதுமையான அம்சம் என்னவென்றால், இந்த ரோபோவிலே பல சென்சார்கள் இருக்கின்றன. இந்த சென்சார்களின் மூலம் இந்த ரோபோவினால் மனித உடலின் நகர்த்தல்களை புலனறிய இயலும். எனவே அந்தத் தகவல்களின் அடிப்படையில் தனது உடல் பாகங்களின் நிலையை மாற்றியமைத்துக் கொள்ளவும் இதனால் இயலும்.

எனவே இதன் அருகில் நிற்கின்ற மனிதர் எந்த நிலையில் நிற்கிறாரோ, அதே நிலையில் இந்த ரோபோ மானிகினும் தன்னை மாற்றிக் கொண்டு நிற்கும். பார்க்க படங்கள்:

Image hosted by Photobucket.com

Image hosted by Photobucket.com

Image hosted by Photobucket.com


சரி, இதெல்லாம் இருக்கட்டும். இதெல்லாம் அறிவியல் முன்னேற்றம் பத்தின செய்தியாச்சே, "டெக்னாலஜி ஹாஸ் இம்ப்ரூவ்ட் டூ மச்"னு காட்டுது. இதுக்கும் மார்க்கெட்டிங்குக்கும் என்ன சம்பந்தம்?-னு நீங்க கேக்கிறது எனக்குப் புரியுது.

'ஜவுளிக்கடை பொம்மையோட குடுமி சும்மா ஆடாது'ன்னு வேலையத்துப் போய் யாரும் சொல்லலை. இந்த மானிகின் ரோபோவால் இன்னொரு முக்கியமான செயலும் செய்ய முடியும். அதாவது பக்கத்துல வந்து நிக்கிறது யாரு, ஆணா பொண்ணா, வயசு (குத்து மதிப்பா!!), அவர் என்ன ட்ரெஸ் போட்டிருக்காரு, கையில் என்ன பை வச்சிருக்காரு, அதில என்ன பேரு எழுதியிருக்கு அப்படின்னு எல்லாம் ஜாதகம் தவிர பாக்கி இருக்கிற மூக்கியமான ஷாப்பிங் தகவலைப் பூராவும் சேகரிச்சு கடைக்கு உள்ளே இருக்கிற கணினிக்கு அனுப்பி வச்சுடும்.

இனி வரும் காலங்களில் இத்தகைய தகவல்களை முறையாக ஆராய்ந்து அதன் அடிப்படையில் மார்க்கெட்டிங் திட்டங்களை வகுப்பதே மிக இலாபகரமான தொழில்முறையாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. எனவே இது, அத்தகைய தகவல்/அறிவு சார் மார்க்கெட்டிங்கில் ஒரு முன்னோடியாக அமையக் கூடும்.

இந்த மானிகினை வடிவமைத்த வல்லுனரின் இன்னொரு கருத்து என்னைக் கவர்ந்தது. இந்த மானிகின் ரோபோவிற்கு முகமே இல்லாமல் இருப்பதை நீங்கள் கவனித்திருப்பீர்கள். அது ஏன் அப்படி என்று வடிவமைப்பு வல்லுனர்களிடம் கேட்டபோது, "முகம் என்று ஒன்று இருந்தால் அது வாடிக்கையாளரின் கவனத்தைத் திசைதிருப்ப மட்டுமே உதவுகிறது. வாடிக்கையாளரின் முழு கவனமும் மானிகின் அணிந்திருக்கும் உடை அல்லது நகை மீது இருப்பதையே நாங்கள் விரும்புகிறோம்." என்றார்.

பின்றாங்கப்பா!!

Brand Equity Quiz - பதில்கள்

சென்ற பதிவில் கேட்கப்பட்டிருந்த கேள்விகளுக்கான பதில்களை இந்தப் பதிவில் தந்திருக்கிறேன். Anonymous என்ற ஒருவர் மட்டும் நான்கு கேள்விகளுக்கு பின்னூட்டத்தில் பதில் சொலியிருந்தார். அதில் ஐந்தாம் கேள்விக்கான பதில் சரி. இரண்டாம், மூன்றாம் கேள்விகளூக்கான பதில்கள் பாதி சரி. மற்றது தவறு.

கேள்விகளும் பதில்களும் இங்கே:

1. BCG கன்ஸல்டிங் நிறுவனத்தின் நிறுவனர் ப்ரூஸ் ஹெண்டெர்ஸனின் (Bruce Henderson) கூற்றுப்படி, மேலாண்மை மற்றும் பொருளாதார வல்லுனர்களை விட சிறப்பாக 'தொழில் நடத்துவது எப்படி?' என்ற கையேட்டினை அளிக்கத் தகுதியான ஒரே விஞ்ஞானி யார்?

சார்லஸ் டார்வின்!! 'Survival of the Fittest' சொன்னவருக்குத் தெரியாததா??

2. ஒவ்வொரு பங்குச் சந்தையிலும், Domain Name என்று ஒன்று உண்டு. அதாவது அந்தப் பங்குச் சந்தையில் இடம் பெறும் நிறுவனத்தைச் சுருக்கமாக அழைக்க இந்தப் பெயரைப் பயன்படுத்துவார்கள். உதாரணமாக நியூ யார்க் பங்குச் சந்தையில் (New York Stock Exchange) சோனி (SONY) நிறுவனத்தின் Domain Name "SNE" ஆகும். பொதுவாக இத்தகைய domain nameகள் மூன்று எழுத்துகளால் அமையப்பெறும். இந்த நியூ யார்க் பங்குச் சந்தையிலே அதன் தலைவர் இப்படி சொல்கிறார்: "எங்கள் பங்குச் சந்தையிலே நாங்கள் ஒரே எழுத்தினாலான இரண்டு domain nameகளை குறிப்பிட்ட இரண்டு நிறுவனங்களுக்காக விட்டு வைத்திருக்கிறோம்." அந்த நிறுவனங்கள் எவை? அந்த domain nameகள் எவை?

இண்டெல் நிறுவனத்துக்காக "I" என்ற டொமைன் பெயரும் மைக்ரோசாஃப்டுக்காக "M" என்ற டொமைன் பெயரும் NYSE-ல் விட்டு வைக்கப்பட்டிருக்கின்றன. இதில் கூடுதலாகச் சொல்ல வேண்டிய விஷயம் என்னவென்றால் இந்த நிறுவனங்கள் இரண்டும் தற்போது Nasdaq என்ற பங்குச் சந்தையில் மட்டுமே இருக்கின்றன. NYSE-ல் இல்லை. அவர்கள் என்றைக்காவது இந்தப் பக்கம் வருவார்கள் என்ற ஆசையில் NYSE இப்படி அந்த டொமைன் பெயர்களை விட்டு வைத்திருக்கிறது.

3. "Brandalism" என்றால் என்ன?
(hint: Brand, Vandalism ஆகிய இரு வார்த்தைகளைச் சேர்த்து உருவாக்கியது இந்தப் புதிய வார்த்தை - கூகிளாண்டவப் பெருமானின் துணை நாடாமல் ஊகிக்கப் பாருங்களேன்)

நிறுவனங்கள் தங்கள் பெயர்களை விளம்பரப்'படுத்துகிறேன்' பேர்வழி என்று பொது இடங்களின் சுவர்கள், மரங்கள், சாலையோரங்கள் என்று எல்லாவற்றையும் அசிங்கப்படுத்துவது Brandalism என்று அழைக்கப்படுகிறது.

4. ஹென்ரி ஃபோர்ட் (Henry Ford) தனது T-Bird காரை விற்பனைக்கு அறிமுகம் செய்த போது அது கருப்பு வண்ணத்தில் மட்டுமே கிடைக்கும் என்று சொல்லிவிட்டார். வேறு எந்த வண்ணத்திலும் காரைத் தயாரிக்க மறுத்து விட்டார். என்ன காரணம்?

கருப்பு நிறத்திலான பெயிண்ட் தான் மற்ற நிறப் பெயிண்ட்களை விட விரைவாகக் காய்ந்து விடும். எனவே தனது அஸெம்ப்ளி லைன் (assembly line) விரைவாக நகர வேண்டும் என்ற காரணத்துக்காக தனது கார்களை கருப்பு நிறத்தில் மட்டுமே வழங்க முடிவு செய்தார் ஹென்ரி ஃபோர்ட்.

5. 5. அண்மையில் இங்கிலாந்திலே நடத்தப்பட்ட ஆய்வின்படி, அந்த நாட்டிலே தெருவில் போடப்படும் குப்பைகளில் இரண்டாம் இடத்தைப் பிடித்தது சிகரெட் முனைகள். முதலிடம் பிடித்தது எது?

மெல்லும் பசை (chewing gum) என்பதே சரியான விட.

Brand Equity Quiz - பெங்களூர்

இந்தியாவின் முன்னணி விநாடி வினா நிகழ்ச்சிகளில் ஒன்றாகப் பதினொரு ஆண்டுகளில் வளர்ந்து விட்டிருக்கும் Brand Equity Quiz-ன் பெங்களூர் இறுதிச் சுற்றுக்கு நேற்று சென்றிருந்தேன். அட, பங்கேற்கவெல்லாம் இல்லை, சும்மா பார்வையாளனாக. வணிக சம்பந்தமான கேள்விகள் இருக்கும் என்பதால் எனக்கு இதிலே கூடுதல் ஆர்வம் உண்டு.

சும்மா சொல்லக் கூடாது, நிகழ்ச்சி அமைப்பாளர் டெரக் ஓ ப்ரையன் (Derek O Brian) பட்டையைக் கிளப்பிவிட்டார். நான் பார்த்த மிகச் சிறந்த விநாடி வினா நிகழ்ச்சிகளில் இதுவும் ஒன்று என்று சொன்னால் அது மிகையாகாது.

ஒவ்வொரு சுற்றையும் அறிமுகப்படுத்தும் போது, ஒரு இந்தி சினிமாவின் போஸ்டரிலே டெரக்கின் முகம் super-impose செய்யப்பட்டு, அந்தப் படத்தின் மிகப் புகழ்பெற்ற காட்சி ஒளிபரப்பட்டு, கடைசியில் அந்தக் காட்சியின் வசனங்களை வைத்து ஒரு பஞ்ச் கொடுத்திருந்தார்.

உதாரணமாக, ஷோலே படத்தில், கப்பார் சிங் அதிரடியாக தனது அடியாட்களிடம் கேட்கும் கேள்வி:
"கித்னே ஆத்மி தே?"
(எத்தனை பேருடா இருந்தானுங்க?)

அவர்கள் தயங்கித் தயங்கி சொல்லும் பதில்:
"சர்தார்! .. தோ ஆத்மி தே.."
("ஐயா! ரெண்டு பேரு இருந்தாங்க..")

இதில், அடியாட்கள் பதில் சொல்லும் போது, காட்சி மாறி வெள்ளைத் திரை தோன்றுகிறது. திரையின் நடுவில் நடிகை நக்மாவின் முகம். இந்தப் பக்கம் கங்குலி. அந்தப் பக்கம் தாவூத். ("ஐயா! ரெண்டு பேரு இருந்தாங்க..") அரங்கமெங்கும் அப்ளாஸ்.

அதே போல் தீவார் படத்தில் அமிதாப் "மேரே பாஸ் பேங்க் பேலன்ஸ் ஹை, பங்களா ஹை, கார் ஹை, தும்ஹாரே பாஸ் க்யா ஹை?" என்று வெடிக்க, ஷம்மி கபூர் அமைதியாகப் பார்த்தபடி, "மேரே பாஸ் மா ஹை" என்று சொல்வதைக் காட்டி அம்பானி சகோதரர்களின் படங்களைக் காட்ட ஒரே கரகோஷம்.

-o0o-

சுற்றுகளின் ஆரம்பத்தில் தான் இப்படி என்றால், நிகழ்ச்சி முழுவதும் தனது தனித்துவமான நகைச்சுவை உணர்ச்சி மூலம் கலக்கினார் டெரக். ஒரு சுற்றில் நான்கு க்ளூக்கள் அளிக்கப்பட்ட எத்தனையாவது க்ளூவில் பதில் சொல்கிறார்களோ அதன் அடிப்படையில் மதிப்பெண் வழங்கப்படும். ஒரு க்ளூவில் 1971-ல் அந்த நிறுவனம் ஏதோ புதிய பொருளை அறிமுகம் செய்ததாக இருந்தது. அந்த அணியினர் யோசித்துக் கொண்டிருந்தனர்.

"1971-ல் எத்தனை வயசு உங்களுக்கு?" என்றார் டெரக்.

"11 வயசு.."

"ஓஹோ. 11 வயசு.. அப்படின்னா ஏழாங்கிளாஸ்ல கடைசி பெஞ்சுல உட்கார்ந்திருப்பீங்க இல்லையா?" என்று உடனே வந்து விழுந்தது ஒரு அணுகுண்டு.

-o0o-

முதல் ஐந்து சுற்றுகளின் முடிவில் மேடையில் இருந்த ஆறு அணிகளில் குறைவாக மதிப்பெண் பெற்றிருந்த இரண்டு அணிகள் வெளியேற்றப் படும். அவர்களுக்குப் பரிசுகள் வழங்கி வெளியேற்றும் போது பின்னணியில் ஒலித்த இந்திப் பாடல்:

"யே க்யா ஹுவா? கைஸே ஹுவா?
கப் ஹுவா? க்யூன் ஹுவா?"

"அய்யோ இது என்ன நடந்துடுச்சு? எப்படி நடந்துச்சு?
எப்போ நடந்துச்சு? எதுக்கு இப்படி நடந்துச்சு?"

-o0o-

இந்நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட சில சுவாரஸ்யமான கேள்விகளை இங்கே கொடுத்திருக்கிறேன். யோசித்துப் பாருங்கள். பதில்களை ஞாயிறன்று தருகிறேன்.

1. BCG கன்ஸல்டிங் நிறுவனத்தின் நிறுவனர் ப்ரூஸ் ஹெண்டெர்ஸனின் (Bruce Henderson) கூற்றுப்படி, மேலாண்மை மற்றும் பொருளாதார வல்லுனர்களை விட சிறப்பாக 'தொழில் நடத்துவது எப்படி?' என்ற கையேட்டினை அளிக்கத் தகுதியான ஒரே விஞ்ஞானி யார்?

2. ஒவ்வொரு பங்குச் சந்தையிலும், Domain Name என்று ஒன்று உண்டு. அதாவது அந்தப் பங்குச் சந்தையில் இடம் பெறும் நிறுவனத்தைச் சுருக்கமாக அழைக்க இந்தப் பெயரைப் பயன்படுத்துவார்கள். உதாரணமாக நியூ யார்க் பங்குச் சந்தையில் (New York Stock Exchange) சோனி (SONY) நிறுவனத்தின் Domain Name "SNE" ஆகும். பொதுவாக இத்தகைய domain nameகள் மூன்று எழுத்துகளால் அமையப்பெறும். இந்த நியூ யார்க் பங்குச் சந்தையிலே அதன் தலைவர் இப்படி சொல்கிறார்: "எங்கள் பங்குச் சந்தையிலே நாங்கள் ஒரே எழுத்தினாலான இரண்டு domain nameகளை குறிப்பிட்ட இரண்டு நிறுவனங்களுக்காக விட்டு வைத்திருக்கிறோம்." அந்த நிறுவனங்கள் எவை? அந்த domain nameகள் எவை?

3. "Brandalism" என்றால் என்ன?
(hint: Brand, Vandalism ஆகிய இரு வார்த்தைகளைச் சேர்த்து உருவாக்கியது இந்தப் புதிய வார்த்தை - கூகிளாண்டவப் பெருமானின் துணை நாடாமல் ஊகிக்கப் பாருங்களேன்)

4. ஹென்ரி ஃபோர்ட் (Henry Ford) தனது T-Bird காரை விற்பனைக்கு அறிமுகம் செய்த போது அது கருப்பு வண்ணத்தில் மட்டுமே கிடைக்கும் என்று சொல்லிவிட்டார். வேறு எந்த வண்ணத்திலும் காரைத் தயாரிக்க மறுத்து விட்டார். என்ன காரணம்?

(இந்தக் கேள்விக்கு ஒரு அணியில் மிகப் புதுமையாக ஒரு பதில் சொன்னார்கள். அதாவது Backward Intergration என்ற ஒன்று இருக்கிறது. அதாவது ஒரு பொருளைத் தயாரிக்கும் போது, அதைத் தயாரிக்கத் தேவையான மூலப் பொருளையும் தானே தயாரித்து விடுவது. இதிலே செலவு கொஞ்சம் மிச்சமாக வாய்ப்புகள் உண்டு. எனவே அந்த அணியினர் சொன்ன பதில் என்னவென்றால், "ஹென்ரி ஃபோர்டும் இந்த மாதிரி backward integration செய்து கருப்பு வண்ண பெயிண்ட்டைத் தயாரித்தார்; எனவே கருப்பு தான் எனக்குப் பிடிச்ச கலரு என்று சொல்லிவிட்டார்." மிகப் புதுமையான பதில் என்பதில் சந்தேகமேயில்லை. அரங்கமே ஆடிப் போய்விட்டது. டெரக் ஒரு டயரியை அவர்களுக்குப் பரிசாகக் கொடுத்து, "இந்த மாதிரி உங்களுக்குத் தோன்றுகிற புதுமையான நகைச்சுவையான பதில்களையெல்லாம் இதிலே எழுதி வைத்துக் கொள்ளுங்கள்" என்றாரே பார்க்கலாம்..)

5. அண்மையில் இங்கிலாந்திலே நடத்தப்பட்ட ஆய்வின்படி, அந்த நாட்டிலே தெருவில் போடப்படும் குப்பைகளில் இரண்டாம் இடத்தைப் பிடித்தது சிகரெட் முனைகள். முதலிடம் பிடித்தது எது?

(50, 52 என்று இரண்டு மதிப்பெண் இடைவெளியில் இருந்த இரண்டு அணிகளில் ஒரு அணியினர், இந்தக் கடைசிக் கேள்விக்குச் சரியான பதிலைச் சொல்லித்தான் நிகழ்ச்சியில் முதலிடம் பிடித்தார்கள்.)