மார்ல்போரோ மனிதன் (Marlboro Man)

1950-களில் ஃபிலிப் மாரிஸ் (Philip Morris) நிறுவனம், மார்ல்போரோ (Marlboro) என்ற பெயரில் பெண்களுக்கான சிகரெட்டைத் தயாரித்து விற்பனைக்கு அளித்து வந்தது. எந்த அளவுக்கு 'பெண்களுக்கானது' என்ற எண்ணம் பரவியிருந்தது என்றால் இதன் விளம்பரங்களிலேயே, "உங்கள் அழகான விரல்களுக்கும் உதடுகளுக்கும் ஏற்றது" (to match your lips and finger tips) என்று கூறப்பட்டு வந்தது. 1954-ல் நிறுவனத்தின் மொத்த விற்பனையில் இதன் பங்கு சுமார் 0.25% ஆக இருந்தது.

"வந்தா மலை. போனா ம...." என்ற எண்ணத்தோடு மார்ல்போரோ என்ற பெயரில் ஆண்களுக்கான ஒரு "பஞ்சு வச்ச" சிகரெட்டை அறிமுகம் செய்யத் திட்டமிட்டது நிறுவனம். அப்போது அமெரிக்க விளம்பர உலகில் புகழ் மிக்க லியோ பர்னெட் (Leo Burnett) தனது விளம்பர நிறுவனத்தை நடத்தி வந்தார். அவரிடம் இதற்கான விளம்பரப் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. அவரது ஆலோசனையின் பேரில் சிகரெட் அட்டையிலிருந்த நிறம் இளஞ்சிவப்பிலிருந்து (pink) ரத்தச் சிவப்பாக (solid red) மாற்றப்பட்டது. Flip-top வடிவத்திலான சிகரெட் அட்டையும் முதன் முதலாக அறிமுகம் செய்யப்பட்டது. விளம்பர நிறுவனத்திலிருந்த ஒருவர் ஆண்மைக்கான அடையாளமாக அமெரிக்க கௌபாயின் (CowBoy) படத்தை சிபாரிசு செய்தார். "Delivers the goods on flavor" என்ற வாசகத்தோடு அமைக்கப்பட்ட விளம்பரம், மிகப் பிரமாதமாக வேலை செய்தது. ஒரே ஆண்டில் விற்பனை 5 பில்லியன் டாலர்கள். அடுத்த ஆண்டின் இறுதியில் விற்பனை 20 பில்லியன்
டாலர்கள். இப்படித்தான் அவதரித்தார் விளம்பர உலகின் சூப்பர் ஸ்டார். (pun not intended!!)

இதே காலகட்டத்தில் தான் 1957-ல் பத்திரிக்கையில் முதல் முதலாக புகை பிடிக்கும் பழக்கத்திற்கும் சுவாசப் புற்றுநோய்க்கும் தொடர்பு இருக்கக் கூடும் என்ற கருத்தை முன் வைத்து ஒரு கட்டுரை வெளியானது. ஆனாலும் மார்ல்போரோ மனிதன் தனது ராஜ்ஜியத்தை விஸ்தரித்துக் கொண்டே போனார். 1972-ல் உலகில் மிக அதிகமாக புகைக்கப்படும் சிகரெட்டாக மார்ல்போரோ விளங்கியது.

உலகின் மிகச் சக்தி வாய்ந்த விளம்பர பிம்பம் (most powerful advertising icon) என்று கேட்டால் கண்ணை மூடிக் கொண்டு (ஏன், மூளையை மூடிக் கொண்டும்) தாராளமாகச் சொல்லி விடலாம், மார்ல்போரோ மனிதன் தான் என்று. அது மட்டுமில்லாமல் மிக வெறுக்கப்பட்ட ஒரு விளம்பர பிம்பமும் மார்ல்போரோ மனிதனே. குதிரை மேல் அமர்ந்து ஒரு கௌபாயாக அவர் மேற்கொண்ட காரியங்கள் அனைத்தும் மிக்க கவனம் பெற்றன. இங்கே சாம்பிளுக்கு ஒரு பின்னாளைய விளம்பரம்:இப்போது இந்தக் கதையை எதற்குச் சொன்னேன் என்பதைப் பார்க்கலாம். அண்மையில் மும்பையில் புற்று நோயாளிகள் உதவி மையத்தின் சார்பில் புகை பிடிக்கும் பழக்கத்தைக் கண்டித்து ஒரு சாலையோர விளம்பரப் பலகை அமைக்கப்பட்டது. விளம்பர நிறுவனம் - ஓகில்வி & மாத்தெர் (Ogilvy & Mather). இன்றைய தேதிக்கு இந்தியாவின் மிகச் சிறந்த கிரியேட்டிவ் இயக்குனர் பியூஷ்
பாண்டேயின் (Piyush Pandey) கைவண்ணத்தில் உருவாக்கப்பட்டிருக்கிறது. மார்ல்போரோ மனிதன் என்ற கருத்தாக்கத்தை எடுத்துக் கொண்டு என்னமாய் பட்டையைக் கிளப்பியிருக்கிறார் மனிதர். கொஞ்சம் பாருங்கள்:நான் கல்லூரியில் படித்த காலத்தில் எனது இறுதியாண்டில் என் பேட்ச் மாணவர்கள் சிலரின் புகை பிடிக்கும் பழக்கத்தினால் மிகவும் மனம் நொந்து அதைக் கண்டித்து கல்லூரியின் மரங்களின் மேல் சில போஸ்டர்களை வரைந்து வைத்தேன். இந்த விளம்பரப் பலகை எனக்கு மிகுந்த மகிழ்ச்சியையும்
நெகிழ்ச்சியையும் அளித்தது.

வெல்டன் பாண்டே சார்.

விளையாட்டினூடாக மார்க்கெட்டிங் பாடம்

Image hosted by Photobucket.com

Monopoly
அல்லது Trade என்ற பெயரில் ஒரு விளையாட்டை நீங்கள் பார்த்திருக்கக் கூடும். அல்லது விளையாடியிருக்கக் கூடும். வீட்டினுள் ஆடும் விளையாட்டுகளில் மிக அருமையான ஒன்று. இந்த விளையாட்டில் ஊர்களை விலைக்கு வாங்கலாம். அங்கே வீடுகள், சந்தைகள், விடுதிகள் கட்டலாம். அவற்றையெல்லாம் வாடகைக்கு விட்டு பணம் ஈட்டலாம். அரசாங்கத்துக்கு வரிகள் கட்ட வேண்டியிருக்கும். வங்கிகளில் கடன் வாங்கலாம். வங்கிக்குத் தெரியாமல் சக விளையாட்டாளனுக்கு "கைமாத்து" கொடுக்கலாம். போக்குவரத்து சாதனங்கள், தொழிற்சாலைகள் இப்படி எல்லாவற்றையும் நிர்மாணிக்கலாம். இப்படியெல்லாம் சகல விதமான தொழில் தொடர்புடைய அறிவைச் சிறுவயதிலேயே கற்றுத் தரும் சுவாரஸ்யமான விளையாட்டு அது.

இந்த விளையாட்டை உருவாக்கி விற்பனைக்கு அளித்த அமெரிக்க நிறுவனம் Hasbro ஆகும். தற்போது மார்க்கெட்டிங் துறையின் பல்வேறு நுட்பங்களை விளக்கும் வகையில் இதைப் போன்ற இன்னொரு விளையாட்டை உருவாக்கி இருக்கிறார்கள். Media Smart என்ற பெயரில் இயங்கி வரும் நிறுவனத்துடன் இணைந்து இந்த விளையாட்டை உருவாக்கி இருக்கிறார்கள். இந்நிறுவனம், குழந்தைகள் ஆக்கபூர்வமான வகையில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை அறிந்து வளர உதவுவதைத் தனது நோக்கமாகக் கொண்டது.

இந்த விளையாட்டின் உபகரணங்களை அமெரிக்கா முழுவதும் 10,000 பள்ளிக் குழந்தைகளுக்கு இலவசமாக வழங்கத் திட்டமிட்டுள்ளார்கள். விளையாட்டின் அங்கங்களாக அவ்வப்போது குழந்தைகள் சில மார்க்கெட்டிங் திட்டங்களைத் தீட்ட வேண்டியிருக்கும். நவீன சாதனங்கள் முதல் நிதி திரட்டும் நிகழ்ச்சிகள் வரை அனைத்தையும் மார்க்கெட்டிங் செய்வது எப்படி என்பது குறித்த அனுபவப் பூர்வமான பாடங்கள் இதில் கிடைக்கும். விளையாட்டின் போது சில சமயம் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி குறைந்து போகும். அல்லது பொருளின் வடிவமைப்பு சரியில்லை என்று அனைத்தும் திருப்பி அனுப்பப்படும். இதனாலெல்லாம் நஷ்டங்கள் ஏற்படும். அல்லது அவர்களின் விளம்பரத்துக்கு ஏதேனும் சர்வதேச விருது கிடைக்கக் கூடும். இதன் மூலம் எதிர்பாராத உதவிகள் தேடி வரும். இப்படி ஒரு மார்க்கெட்டிங் துறை அலுவலருக்கு அவரது வேலையில் எத்தகைய அனுபவங்கள் கிட்டுமோ அவை அனைத்தும் இந்த விளையாட்டின் மூலமாகக் குழந்தைகளுக்கும் கிடைக்கும். இந்த அனுபவங்களை சமாளித்து வெற்றிகரமாக மார்க்கெட்டிங் பணியைச் செய்து முடிக்க வேண்டும்.

இதன் மூலம் குழந்தைகளுக்கு இந்தத் துறை குறித்த விழிப்புணர்வு ஏற்படும் என்றும், பின்னொரு நாளில் ஒரு விளம்பரத்தையோ அல்லது மார்க்கெட்டிங் திட்டத்தையோ அவர்கள் காண நேரும் போது அதன் பின்புலங்களை அறிந்திருப்பது அவர்களுக்குப் பயன் தரும் என்பதும் இந்த விளையாட்டின் எதிர்பார்ப்பு ஆகும்.

இப்படியாக ஓரளவு பள்ளிப் பருவத்திலேயே மாணவர்களுக்கு இத்தகைய அறிவை ஊட்டுவது பயனுள்ள விஷயமே என்பது எனது கருத்து. குறிப்பாக இப்படி விளையாட்டினூடாகப் பெறப்படும் அறிவு அந்தக் குழந்தைகளுக்கு, மிக நன்றாகப் புரியும் என்பதில் ஐயமில்லை. அது அவர்களுக்குப் பின்னாளில் பயனுள்ளதாய் இருக்கும்.

நன்றி: Guardian UK

நகைச்சுவை / துணுக்கு

www.wheresgeorge.com (Where's George?) என்று ஒரு இணைய தளம் இருக்கிறது. பெயரில் குறிப்பிடப்படும் ஜார்ஜ் வேறு யாருமில்லை, அமெரிக்க டாலர் நோட்டுகளில் இடம் பெற்றுள்ள ஜார்ஜ் வாஷிங்டன் தான். உங்களிடமுள்ள டாலர் நோட்டின் வரிசை எண்ணை இந்தத் தளத்தில் உள்ளிட்டால், இதற்கு முன் அது எங்கெல்லாம் சுற்றியிருக்கிறது என்று புட்டுப் புட்டு வைக்கிறார்கள்.
எத்தனை மைல்கள் தூரம் அது பிரயாணித்திருக்கிறது, ஒரு நாளுக்கு எவ்வளவு தூரம் போகிறது என்று புள்ளிவிவரங்களாகப் போட்டுத் தாக்குகிறார்கள். இது வரை ஆறு கோடியே இருபது லட்சத்துக்கும் அதிகமான டாலர் நோட்டுகளின் வரிசை எண்கள் இந்தத் தளத்தில் உள்ளிடப் பட்டிருக்கின்றன. வாட்ஸ்பர்க் கேரி (Wattsburg Gary) என்பவர் மட்டுமே ஒத்தை ஆளாக 2,81,225 டாலர் நோட்டுகளின் வரிசை எண்ணை இங்கு உள்ளீடு செய்திருக்கிறார். யப்பா!!

இவர்களைப் பார்த்து வேறு பல நாடுகளிலும் இத்தகைய தளங்கள் துவங்கப்பட்டுள்ளன.

www.whereswilly.com - கனடா
www.doshtracker.co.uk - இங்கிலாந்து
www.eurobilltracker.com - ஐரோப்பா கண்டம் முழுவதும்
www.osatsu.net - ஜப்பான்
www.sek-tracker.se - ஸ்வீடன்
www.sedlan.dk - டென்மார்க்

அட காந்தி!!