நேத்திக்கு தமிழ்த் திரையுலக சூப்பர் ஸ்டார் சொல்ற மாதிரி மார்க்கெட்டிங்கை விளக்கினேன் இல்லையா? இன்னிக்கு திரு.
ஃபிலிப் கோட்லர் (Philp Kotler) என்ன சொல்றார்-னு கேப்போம். பல விதங்களில மார்க்கெட்டிங் உலகில இவரும் சூப்பர் ஸ்டார் ரேஞ்ச் தான்.
அதுக்கு முன்னால தெரிஞ்சுக்க வேண்டிய விஷயம் ஒண்ணு இருக்கு - வேட்கை, தேவை, விருப்பம் ஆகியவற்றின் வேறுபாடுகள்.
வேட்கை, தேவை, விருப்பம் - Need, Want, Demand
வேட்கை: அடிப்படையாக மனித மனம் "எனக்கு இன்னது வேண்டும்" என்று எப்போதெல்லாம் நினைக்கிறதோ, அப்பொதெல்லாம் அங்கே
வேட்கை வெளிப்படுகிறது. தாகம், பசி, நேரம் தெரிந்து கொள்ளும் ஆவல் இப்படி மனித இனம் தோன்றியது முதல் இருந்து வருவன வேட்கைகள். இவற்றை யாரும் தனியாக உருவாக்குவதில்லை, கல் தோன்றி மண் தோன்றா காலத்துக்கு முன் தோன்றித் தொடர்ந்து வருபவை இவை.
தேவை: வேட்கையைப் பூர்த்தி செய்ய உதவும் ஏதேனும் ஒரு பொருள் அல்லது சேவை வேண்டும் என்று மனித மனம் எண்ணும் போது அங்கு
தேவை வெளிப்படுகிறது. தாகத்தைத் தணிக்க தண்ணீர், கோக்கோ கோலா, குச்சி ஐஸ், தர்ப்பூசணி ஜூஸ் என்று குறிப்பிட்ட பொருளாக கேட்கப்படும்போது அது தேவை எனப்படும்.
விருப்பம்: தேவையைப் பூர்த்தி செய்து கொள்ள, தனது வாங்கும் திறனைப் பொறுத்து, குறிப்பிட்ட பொருளை குறிப்பிட்ட அளவு வேண்டும் எனும்போது அங்கு விருப்பம் வெளிப்படுகிறது. "ரெண்டு குச்சி ஐஸ் குடுப்பா" அல்லது "வந்திருக்கிற அஞ்சு பேருக்கும் ஆளுக்கொரு தோசை" எனும்போது அது
விருப்பம்.
மறுபடி சொல்றேன், மனித மனத்தின் அடிப்படை உணர்ச்சிகளின் வெளிப்பாடு ("வேணும்-னு நினைக்க வைக்கிறது") வேட்கை, அதைப் பூர்த்தி செய்ய உதவும் ஏதேனும் பொருளை வேண்டுவது தேவை, அந்தத் தேவையைப் பூர்த்தி செய்ய உதவும் குறிப்பிட்ட பொருளை, வாங்கும் திறனின் அடிப்படையில் குறிப்பிட்ட அளவு வேண்டுவது விருப்பம். இதைத் தெரிஞ்சுக்கிட்டு மேல கோட்லர் என்ன சொல்றாருன்னு பார்ப்போம்.
1980-ல கோட்லர் மார்க்கெட்டிங் பத்தி என்ன சொனாருன்னா,
மார்க்கெட்டிங் என்பது பரிமாற்ற செயல்பாட்டின் மூலமாக வேட்கைகளையும் தேவைகளையும் பூர்த்தி செய்ய மேற்கொள்ளப்படும் ஒரு மனித நடவடிக்கை.
இந்தப் பரிமாற்ற செயல்பாடுகள்னா என்னன்னு நீங்க கேட்கலாம். கீழ்க்கண்ட படத்தைப் பார்த்தாப் புரியும்.
படம் - 1: ஒரு அடிப்படையான பரிமாற்ற மாதிரி
இப்படியாக, சில அடிப்படைப் பரிமாற்றங்கள் நிகழுதில்லையா, அதைத்தான் கோட்லர் சொல்றார். வேட்கைகளையும் தேவைகளையும் பூர்த்தி செய்து கொள்ள நடக்கும் பரிமாற்றங்கள் (1. விற்பவர்களிடமிருந்து வாங்குபவர்களுக்கு - பொருட்கள், சேவைகள், இவற்றின் மூலமான நன்மைகள், 2. வாங்குபவர்களிடமிருந்து விற்பவர்களுக்கு - பணம், தகவல்கள், கருத்துக்கள்) தான் மார்க்கெட்டிங் என்று அவர் வரையறை செய்தார். (வாங்குபவர்களிடமிருந்து விற்பவர்களுக்குக் கிடைக்கும் தகவல்கள் மற்றும் கருத்துக்கள் தங்களைப் பற்றி, பொருட்களைப் பற்றி, சேவைகளைப் பற்றி, இப்படி எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.)
ரெண்டு பக்கமிருந்தும் பரிமாறிக்கொள்ளப்படும் சங்கதிகளுக்கு ஒரு மதிப்பு உண்டு என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. சில சமயம் அந்த மதிப்புகளை அளவிட முடியும். சில சமயம் முடியாது. சில சமயம் ரெண்டு தரப்பும் ஒரே பொருளுக்கு வெவ்வேறு மதிப்புகள் கொண்டிருக்கும்.
கலீல் கிப்ரான் ஒரு கவிதையில சொன்ன மாதிரி. (இப்ப நான் இந்த வலைப்பதிவில கலீல் கிப்ரான் வலைப்பதிவை நைஸா இழுத்து விடுறது கூட ஒரு வித மார்க்கெட்டிங் தான்.)
அதே கோட்லர் 1991-ல மார்க்கெட்டிங் பத்தின தன்னோட விளக்கத்தை லேசா மாத்தி, விரிவாக்கித் தர்றார். இப்படி:
மார்க்கெட்டிங் என்பது தனி மனிதர்களும் குழுக்களும் நிறுவனங்களும் தங்கள் வேட்கைகளையும் தேவைகளையும் பூர்த்தி செய்து கொள்ள குறிப்பிட்ட பொருட்களை அல்லது சேவைகளைத் தயாரிப்பது, விற்பனைக்கு அளிப்பது மற்றும் பரிமாற்றம் செய்து கொள்வது ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு சமூக மற்றும் மேலாண்மைச் செயல்பாடு ஆகும் (social and managerial process).
நேத்து சொன்ன விளக்கத்துடன் இது எப்படிப் பொருந்துகிறது? வேட்கைகளையும் தேவைகளையும் பூர்த்தி செய்யும் குறிப்பிட்ட பொருள் அல்லது சேவையைத் தயாரிப்பது தான் சரியான பொருள் அல்லது சேவையை நிர்ணயிக்கிறது, அவற்றை விற்பனைக்கு அளிப்பது தான் சரியான இடம் மற்றும் சரியான நேரம் ஆகியவற்றை நிர்ணயிக்கிறது, பரிமாற்றம் செய்து கொள்வதுதான் சரியான விலையை நிர்ணயிக்கிறது.
இன்னைக்கு கொஞ்சம் நீஈஈளமாயிடுச்சு. போதும் நாளைக்குப் பார்க்கலாம். வர்ட்டா?