Smart Product Design

இம்மாத ஹார்வார்ட் பிஸினஸ் ரிவ்யூ (Harvard Business Review) இதழில் மோட்டோரோலா (Motorola) நிறுவனத்தின் முன்னாள் வடிவமைப்பு இயக்குனர் திரு. டான் வில்லியம்ஸ் (Former Design Director Dan Williams) அளித்துள்ள சிறு பேட்டியில் புதிய பொருள் வடிவமைப்பு குறித்து சுவாரஸ்யமான கருத்துகள் அடங்கியுள்ளன. அவற்றிலிருந்து சிறு துளிகள்:

மிக மெலிதான மோட்டோரேஸ்ர் (MotoRazr) செல்பேசி வடிவமைப்பில் மோட்டோரோலா கண்டுள்ள வெற்றியிலிருந்து பிற நிறுவனங்கள் அறிந்து கொள்ளக் கூடிய வடிவமைப்பு பாடங்கள் ஏதேனும் உண்டா?

உங்களுக்கு நன்றாக எதைச் செய்யத் தெரியுமோ, அதைத் தொடர்ந்து இன்னும் சிறப்பாக செய்தால் நல்லது என்பதற்கு Razr செல்பேசி வடிவமைப்பு ஒரு நல்ல உதாரணம். 1990-களில் நாங்கள் அறிமுகம் செய்த StarTAC என்ற clam type (flip type) செல்பேசி, முதன்முதலாக மெலிதான வகை செல்பேசியாக அமைந்தது. அந்த வடிவமைப்பை அடிப்படையாகக் கொண்டு உருவானதே Razr மாடல். இதனை உருவாக்கும் போது வேறு பல வகையான முன்னேற்றங்களையும் பரிசீலித்தோம். என்றாலும் இறுதியில் மூல ஐடியாவில் எது மிக சிறப்பானதாக அமைந்ததோ, அதிலேயே கவனத்தைச் செலுத்த முடிவாயிற்று.

பிற செல்பேசி தயாரிப்பு நிறுவனங்கள் sliding phone போன்ற வேறு மாடல்களில் செல்பேசிகளை அறிமுகம் செய்த போதிலும், எங்களது heritage-ஐ மனதில் கொண்டு clam type செல்பேசிகளை சிறப்பாக உருவாக்க முனைந்தோம். தற்போது அனைத்து நிறுவனங்களும் clam type செல்பேசிகளை சந்தையில் அளித்தாலும், வாடிக்கையாளர்களின் மனதில் மோட்டோரோலாவே அந்த வடிவமைப்பின் முன்னோடி என்பது ஆழமாகப் பதிந்திருக்கிறது.


தற்போது வடிவமைப்புத் துறையில், வாடிக்கையாளர்களோடு இணைந்து பொருள் வடிவமைக்கும் "co-creating" என்ற தன்மை பெருகத் துவங்கியுள்ளது. இது குறித்து நீங்கள் கருதுவது என்ன? இது தேவையா அல்லது குழுவாக இயங்கும் வல்லுனர்களிடம் இதை விட்டு விடுவது நலமா?

பல வகையான வடிவமைப்பு முறைகளுக்கு இங்கே இடமிருக்கிறது. தற்போது இணையத்தில் இளைஞர்கள் ஆர்வமாக பல்வேறு வடிவமைப்பு வேலைகளில் ஈடுபடுகிறார்கள் - குறிப்பாக ஆடைகள் வடிவமைப்பில். இது ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றமாகவே நான் கருதுகிறேன். பயோடெக்னாலஜி, மருத்துவம் போன்ற துறைகளில் தேர்ந்த வல்லுனர்களின் வடிவமைப்பு தேவை என்றாலும் அத்துறைகளிலும் கூட சிறிய தனியார் ஆய்வகங்களும், தனிப்பட்ட விஞ்ஞானிகளும் முக்கியமான, பயனுள்ள பல வடிவமைப்பு மாறுதல்களைச் செய்வதைப் பார்க்கிறோம்.

முன்பு மின்னணுவியல் (Electronics) மற்றும் கணினித்துறைகளில் (I.T.) தன்னுடைய கார் நிறுத்துமிடத்தில் (garage) சிறிய அளவில் பற்பலரும் ஆய்வுகள் செய்து குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை அடைந்ததைப் போல் தற்போது பொருள் வடிவமைப்பிலும் நிகழத் துவங்கியுள்ளது. பாஸ்டன் நகரில் எம்.ஐ.டி.யைச் சேர்ந்த நீல் கெர்ஷென்ஃபீல்ட் (Niel Gershenfield) என்பவர் தனது ஆய்வகத்தில் இளைஞர்கள் பல்வேறு விதமான தொழில்நுட்பங்களில் பல்வேறு விதமான வடிவமைப்பு ஆராய்ச்சிகள் செய்ய அனுமதித்துள்ளார். அவர்கள் உருவாக்கும் பல மின்னணு பொம்மைகள், ரோபோ இயந்திரங்கள், புதிய இசைக் கருவிகள் போன்றவற்றைக் கண்டு நான் ஆச்சர்யமடைந்துள்ளேன்.

பொதுவான வாடிக்கையாளர்களும், ஏதேனும் பொருட்களை வாங்கிய பின் அதில் தங்களுக்குத் தேவைப்படும் மாற்றங்களைக் கற்பனை செய்து அருகாமையிலுள்ள fabrication store போன்றதொரு கடையில் செய்து பெற்றுக் கொள்ளலாம் என்ற நிலை கூடிய விரைவில் வரக் கூடும் என்பதே எனது எதிர்பார்ப்பு.


வடிவமைப்பு முயற்சிகள் சில சமயம் வெற்றி பெறாமல் போவதற்கு என்ன காரணங்கள்?

தொழில்நுட்பத்தில் மட்டுமே தீவிரமாக கவனத்தைச் செலுத்துகையில் அவ்வாறு தோல்விகள் நிகழக் கூடும். (Focus too much on the technical aspect). தொழில்நுட்பம் என்பது வேகமாக மாற்றமடையக் கூடியது. ஆனால் அதனைப் பயன்படுத்தும் மக்கள் அவ்வளவு சீக்கிரம் மாறி விடுவதில்லை. உதாரணமாக இன்றைய சிறுவர்கள் தொலைதொடர்புக்கு பயன்படுத்தும் கருவிகள் முன் காலத்திலிருந்து மாறுபட்டவை. ஆனால் அவர்களின் தேவைகளும் ஆசைகளும் அவ்வளவாக மாறி விடவில்லை. சிறந்த வடிவமைப்புக் குழுக்கள், மக்களுக்கு ஒரு பொருள் எதற்காகத் தேவைப்படுகிறது என்பதைப் புரிந்து கொண்டு அவற்றை நிறைவேற்ர முனைகின்றன. மேலும் பல்வேறு மாறுபட்ட துறைகளிலிருந்து பயனுள்ள அம்சங்களை சேகரித்து அவற்றைப் பயன்படுத்தத் தெரிந்திருக்க வேண்டும்.

உதாரணமாக என்னுடைய நண்பர் ஒரு முறை pneumatic Ice Axe (பனிமலையேற்றத்தின் போது பயன்படுத்தும் கருவி) வடிவமைப்பில் ஈடுபட்டிருந்தார். அப்போது, மரங்கொத்திப் பறவைகளைப் பற்றியும், அவை எவ்வாறு தங்கள் அலகுகளை காயப்படுத்திக் கொள்ளாமல் துரிதமாக மரத்தைக் கொத்தித் துளை செய்கின்றன என்பது குறித்தும் ஆராய்ந்தார். அவைகளின் உடலமைப்பில் உள்ள நுட்பங்களைக் கண்டறிந்தார். அவைகளின் அலகுகளைச் சுற்றித் தசைகள் இருப்பதால் வேகமாக அவை கொத்தும் போது காயம்படாமல் இருக்கிரது. அவைகளின் மண்டையோடும் சற்றே பஞ்சு போன்ற தன்மையோடு (spongy skull) இருக்கிறது. இத்தகைய உண்மைகளை அறிந்ததால் அதைத் தனது வடிவமைப்பில் பயன்படுத்தி, அந்தக் கருவியை மிக சிறப்பாக வடிவமைத்தார். எனவே வடிவமைப்பில் ஓர் இன்றிமையாத அம்சம் என்னவெனில் நம்மைச் சுற்றியுள்ள விஷயங்களைக் கூர்ந்து கவனிப்பதும், அவற்றை பிறிதொரு பயன்பாட்டில் வெளிப்பத்துவதுமே ஆகும்.


நன்றி: HBR