ஸ்டார்பக்ஸ் (Starbucks) மார்க்கெட்டிங்

ஸ்டார்பக்ஸ் காஃபி (Starbucks Coffee) நிறுவனத்தின் மார்க்கெட்டிங் துறைத் தலைவர் ஆன் சாண்டர்ஸ் (Anne Saunders - Senior VP, Marketing) அண்மையில் தி ஹப் (The Hub) இதழுக்கு அளித்துள்ள செவ்வியில் அதன் பல்வேறு மார்க்கெட்டிங் நிலைப்பாடுகளைப் பற்றி விளக்கியுள்ளார். ஒரு வகையில் பார்த்தால் நமது உள்ளூர் டீக்கடையைத் தான் இவர்கள் ஹை-டெக்காக அளிக்கிறார்கள் என்று தோன்றும். நம்ம கடை நாயர் இவர்களுக்கு எந்த வகையிலும் குறைந்தவர் அல்ல, என்றாலும் இந்த செவ்வியின் மூலம் அவர் விளக்கியிருந்த சில விஷயங்கள் என்னைக் கவர்ந்தன. அதில் குறிப்பிடத்தக்க சில பகுதிகள் இங்கே:
ஸ்டார்பக்ஸ் நிறுவனம், எந்தத் தொழிலில் இருக்கிறது? (What business is Starbucks really in?)
எங்கள் நிறுவனத்தில் நாங்கள் விரும்பிச் சொல்லும் ஒரு வாசகம் என்னவென்றால், "We are not in the coffee business, serving people; we are in the people business, serving coffee". காஃபி என்பதே எங்கள் நிறுவனத்தின் மூல அடிப்படையாகும். ஆனாலும் தரமான காஃபியை உருவாக்கி அதை வாடிக்கையாளர் விரும்பும் வகையில் அளிப்பதையே எங்கள் பிரதான கடமையாக நாங்கள் கூறுவோம். இதன் அடிப்படையான இழைகளாக அமைவது, இதை நாங்கள் எப்படிச் செய்கிறோம், வாடிக்கையாளர்களோடு எங்கள் நிறுவன ஊழியர்கள் கலந்துறவாடுதல் எப்படி நிகழ்கிறது, அவர்கள் இங்கு வரும் போது அனுபவிக்கும் சூழல் எத்தகையது ஆகியன. இப்படியாக வாடிக்கையாளரின் ஒட்டுமொத்த அனுபவம் எப்படி அமைகிறது என்பதே நாங்கள் இடம்பெற்றுள்ள தொழிலின் மையம் ஆகும்.
ஸ்டார்பக்ஸ் மார்க்கெட்டிங் துறை, பிற நிறுவனங்களின் மார்க்கெட்டிங் துறைகளினின்று மாறுபட்டுத் தெரிகிறதே, அது எவ்வாறு?
எங்கள் நோக்கம் (purpose), அதை நாங்கள் செயல்படுத்தும் விதங்கள் ஆகியவற்றின் மூலம் எங்கள் மார்க்கெட்டிங் துறை மாறுபடுகிறது எனலாம். முற்றிலும் வழமைக்கு மாறானது (non-traditional) என்று கூறலாம். ஊடகங்களின் மூலமான விளம்பரங்களை (mass advertising) நாங்கள் அதிகம் கடைப்பிடிப்பதில்லை. வாடிக்கையாளரோடு ஒரு இணக்கமான, நெருக்கமான தொடர்பை (intimate connection) ஏற்படுத்துவதே நாங்கள் விரும்புவது. மாதிரிகளை (samples) இலவசமாக வழங்கி அதனைப் பயன்படுத்துபவர்களின் கருத்துகளைத் திரட்டுவதே எங்களின் முக்கிய செயல்பாடாக இருந்து வருகிறது. சுமார் 35 மாறுபட்ட சந்தைகளில் ஆண்டுக்கு 12 வாரங்கள் வரை இதை நாங்கள் செய்கிறோம். ஒவ்வொரு ஆண்டும் குறைந்த பட்சம் 30 இலட்சம் மாதிரிகளை நாங்கள் இலவசமாக வழங்குகிறோம். ஆங்காங்கே சிறிய அளவில் நடைபெறும் நிகழ்ச்சிகள் மூலம் எங்கள் நிறுவனத்தின் தன்மைகளைப் பரப்ப முயன்று வருகிறோம். அரை நிமிட தொலைக்காட்சி விளம்பரத்தை விடவும், இம்மாதிரி நிகழ்ச்சிகளின் மூலம் வாடிக்கையாளரின் மனதில் அதிக நெருக்கத்தை அடையலாம் என்பதே எங்களின் நம்பிக்கை. தவிரவும் எங்கள் கடைகளின் தோற்றம் முதல் எங்களிடமிருந்து வாடிக்கையாளரைச் சென்றடையும் எந்தவொரு தொடர்பும் இருக்கக் கூடிய பார்வைத் தன்மைகளைப் (visual aspects) புதுமையாக வரையறை செய்வதும் எங்களின் முக்கிய செயல் ஆகும். அதிலும், பிறரிடமிருந்து நாங்கள் முற்றிலும் மாறுபட்டு உள்ளோம்.
இத்தகைய மாறுபட்ட மார்க்கெட்டிங் கொள்கை, உங்களைத் தனிப்பட்ட முறையில் மாறச் செய்துள்ளதா?
என்னை எடுத்துக் கொண்டால் நான் விளம்பர நிறுவனங்களிலும் பிறகு பெரும் நிறுவனங்களிலும் பணி புரிந்துள்ளேன். வழக்கமாக விளம்பரங்களின் மூலமாகத் தான் பெரும்பாலும் எங்கள் தொழிலை வளர்த்துள்ளேன். ஸ்டார்பக்ஸ் நிறுவனத்துக்கு வந்த பிறகு, விளம்பரங்களைத் தவிர்த்து பிற வழிமுறைகளின் மூலமாகவும் வெற்றி பெறலாம் என்று நம்பத் துவங்கியுள்ளேன். விளம்பரங்களீன் மூலம் ஒரு வழித் தொடர்பை ஏற்படுத்தி வாடிக்கையாளர்களுக்கு நாம் தகவல்களை அளிக்க முடிகிறது. ஆனால், ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தில், புதுமையான வழிகளில், வாடிக்கையாளர்களுக்கு தகவல்களை மீறி, ஒரு அனுபவத்தை ஏற்படுத்தித் தர முடிகிறது. ஒரு சராசரி வாடிக்கையாளர், எங்கள் கடைக்கு மாதத்தில் ஆறு தடவைகள் வருகிறார். மிக அதிகமாக வருகை தரும் 20% வாடிக்கையாளர்கள், மாதத்தில் பதினாறு தடவைகள் வருகின்றனர். அவர்களோடு பழகி, அவர்களோடு ஒரு நீண்ட கால உரவை வளர்த்துக் கொள்ள விளம்பரங்களை விடவும் வேறு சில வழிகளே பயனுள்ளவையாக இருக்கின்றன. இவ்வாறு இல்லாமல், வாடிக்கையாளர்கள், ஆறு மாதங்களுக்கு ஒரு முறை அங்காடிக்கு வந்து வாங்கிச் செல்கின்ற பொருளாக நாங்கள் இருந்திருந்தால் வேறு வகையான மார்க்கெட்டிங் வழிகளைக் கையாண்டிருப்பேன்.
முழுமையான செவ்வியை pdf கோப்பாகப் பதிவிறக்கம் செய்து படிக்க: சுட்டி
புகைப்படம்: The Hub magazine