Firefox விளம்பரம்

டிஸம்பர் 16, 2004 தேதியிட்ட நியூ யார்க் டைம்ஸ் (New York Times) நாளிதழில் வெளியிடப்பட்ட Firefox இணைய உலாவிக்கான (browser) முழு அளவிலான இரு பக்க விளம்பரத்தில் ஒரு புதுமையான சிறப்பு உள்ளது. இது வரை வெளியானவைகளிலேயே மிக அதிக வார்த்தைகளைக் கொண்ட விளம்பரம் இதுவாகத் தான் இருக்க வேண்டும். மொஸில்லா நிறுவனம், இந்த உலாவியை சமீபத்தில் வெளியிடுவதற்கு உறுதுணையாக இருந்து நிதி உதவி அளித்த பத்தாயிரத்துக்கும் அதிகமானவர்களின் பெயர்கள் இந்த விளம்பரத்தில் இடம்பெற்று உள்ளன.



மேலே இடது பக்கத்தில் முற்றிலும் பெயர்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட Firefox logo-வைக் காணலாம். எளிதில் புரிந்து கொள்ள இயலாத மிகச்சிறிய எழுத்துக்களால் என்றாலும் கூட, இப்படி ஒரு விளம்பரம் வெளியிட வேண்டும் என்று கருதிய மொஸில்லா இயக்கத்தாருக்கு நமது பாராட்டுகள் உரியதே ஆகும்.

50,000க்கும் அதிகமான அங்கத்தினர்களை உடைய Spread Firefox என்ற தன்னார்வ இயக்கத்தின் உழைப்பின் பின்னணியில் இந்த விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது. நாளிதழ் விளம்பரம் தவிர வேறு என்னென்ன முறைகளில் Firefox உலாவியை மார்க்கெட்டிங் செய்யலாம் என்பது பற்றி சுவயாகவும் தீவிரமாகவும் விவாதித்து வருகிறார்கள்.

நவம்பர் 9-ல் அறிமுகப்படுத்தப்பட்ட Firefox உலாவியை இது வரை 13.6 மில்லியனுக்கு அதிகமான பயனாளர்கள் பதிவிறக்கம் செய்துள்ளதாகத் தெரிகிறது.

நன்றி: மொஸில்லா நிறுவனம்

ஹோண்டாவின் இன்னொரு சிக்ஸர்

ஹோண்டா நிறுவனம், தன்னுடைய புதுமையான மார்க்கெட்டிங் முயற்சிகளின் மூலம் நம்மை ஆச்சர்யப்படுத்திக் கொண்டே இருப்பதை நிறுத்தாது போலும். ஏற்கெனவே அக்கார்ட் காரின் விளம்பரத்திலும், சிட்ரியான் காரின் விளம்பரத்திலும், புதிய டீஸல் இஞ்சின் விளம்பரத்திலும் பரவலான பாராட்டைப் பெற்றது. இதோ இப்போது இன்னொன்று.

புதிதாக அறிமுகப்படுத்தியிருக்கும் FR-V காருக்கான விற்பனை சிறுபுத்தகத்தை (Sales Brochure) அறிமுகப்படுத்தியுள்ளது. விசேஷம் என்னவென்றால் இது குழந்தைகளை மட்டுமே மையப்படுத்தியது.

வீட்டிற்கு என்ன கார் வாங்க வேண்டும் என்பதில் பிரிட்டன் நாட்டின் மூன்றில் இரண்டு குழந்தைகளுக்கு தீவிரமான ஒரு கருத்து இருக்கிறது என்பதை அண்மையில் ஒரு கருத்துக் கணிப்பு மூலம் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் அடிப்படையில், ஹோண்டா நிறுவனம் குழந்தைகளுக்காகவே வடிவமைக்கப்பட்ட இந்த புத்தகத்தை வழங்கியுள்ளது. FR-V என்பது சிறு குழந்தைகளையுடைய குடும்பங்களுக்கான கார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

பெற்றோர்கள் விற்பனை நிலையத்திற்கு வந்து காரினை ஓட்டிப் பார்க்கும் போது (test drive) குழந்தைகளை மகிழ்விக்கும் விதமாக இந்த brochure இருக்கிறது. புதிர்கள், ஹோண்டா நிறுவனம் பற்றிய சுவையான தகவல்கள் (ஒரு ஹோண்டா காரை அஸெம்பிள் செய்ய 5.8 மணி நேரம் ஆகும், அதில் 10,000க்கும் அதிகமான பாகங்கள் உள்ளன போன்றவை), வரைந்து வண்ணம் தீட்ட படங்கள் என்று இப்படி குழந்தைகளுக்குப் பிடித்தமான வகையில் இந்த brochure தயாரிக்கப்பட்டிருக்கிறது.



பிட்ஸா கார்னர் (Pizza Corner), மெக்டொனால்ட்ஸ் (McDonalds) போன்ற உணவுக் கடைகளில் இது வரை இந்த மாதிரி நான் பார்த்திருக்கிறேன். ஹோண்டா தற்போது இதை கார் தயாரிப்பு நிறுவனத்திற்கு விரிவாக்கம் செய்திருக்கிறது.

மேலும் தற்காலத்தில் சிறுவயதிலேயே குழந்தைகள் குறிப்பிட்ட பொருட்களைக் குறித்த பிம்பங்களை உருவாக்கி கொள்வதால், அந்த வயதில் அவர்களிடம் ஒரு பாஸிட்டிவ் தொடர்பை உருவாக்குவதன் அவசியம் உணர்ந்து செயல்பட்டிருப்பதாக ஹோண்டா அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

எந்த வகையில் பார்த்தாலும் இது ஒரு நல்ல முயற்சியே என்பது என் கருத்து.

நன்றி: FemaleFirst women's magazine

Citreon C4 காரின் விளம்பர நடனம்

கார்களுக்கான விளம்பரங்கள் எனக்கு எப்போழுதும் மிகவும் விருப்பமானவை. ஏற்கெனவே ஒரு முறை ஹோண்டா நிறுவனத்தின் அக்கார்ட் (Honda Accord) காருக்கான விளம்பரம் பற்றிச் சொல்லியிருந்தேன்.

இப்போது வந்திருக்கிறது சிட்ரியோன் (Citreon) C4 காரின் ஒரு சுவையான விளம்பரம்.

ஒரு கார், பாகம் பாகமாகப் பிரிந்து ஒரு ரோபோவாய் உருமாறி இசைக்கேற்ப நடனமாடுகிற மாதிரி வந்திருக்கும் இந்தப் புதிய விளம்பரம் பலரை வெகுவாகக் கவர்ந்துள்ளது. விளம்பரத்தின் சில காட்சிகளைக் கீழே படங்களாகக் காணலாம்:



விளம்பரத்தை உருவாக்கி இருப்பது Euro RSCG என்ற விளம்பர நிறுவனம். புகழ்பெற்ற பாப் இசைக் கலைஞர் ஜஸ்டின் டிம்பர்லேக்கின் (Justin Timberlake) நடனங்களை அமைத்துத் தரும் மார்ட்டி குடெல்கா (Marty Kudelka) இந்த கார்-ரோபோவின் நடனத்தையும் அமைத்துள்ளார். படத்தின் வலது மேல் மூலையில் உடலில் சென்சார்களை வைத்துக் கொண்டு இவர் நடன அசைவுகளைப் படம்பிடித்துக் கொள்வதைக் காணலாம். பிறகு அதை அனிமேஷனில் காரின் மேல் ஏற்றியிருக்கிறார்கள்.

விளம்பரத்தில் சொல்லப்படும் கருத்து - தனது பிரிவில் தொழில்நுட்ப ரீதியாக மிக முன்னேறிய கார் சிட்ரியோன் C4 தான் என்பதாகும். இன்னும் குறிப்பிட்டுச் சொல்லப் போனால், தொழில்நுட்பத்தின் மூலம் இந்த கார் உயிர்பெற்று எழுகிறது எனலாம்.

நன்றி: www.carpages.co.uk

லொள்ளு மார்க்கெட்டிங் - 3

கீழே உள்ளது ஒரு இணைய banner விளம்பரம். முதலில் anti-depressant மருந்து/மாத்திரைக்கான விளம்பரம் என்று தான் நினைத்தேன். அப்புறம் தான் விஷயமும் விஷமமும் புரிந்தது.



-o0o-

எச்சரிக்கை: நகைச்சுவை உணர்வு இன்னும் செத்துப் போய்விடவில்லை என்ற நம்பிக்கையின் அடிப்படையில் இந்த விளம்பரம் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். ஜாலியாக மட்டுமே எடுத்துக் கொள்ளவும்.